Sunday, February 3, 2013

சமையலறைக் கழிவிலிருந்து எரிசக்தி - By .ஜன்னல்









சாரதா ப்ரியாவுக்கு ஒரு பிரச்னை. திருச்சி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வாடகை இல்லத்தில் வாழும் இல்லத்தரசியான அவர், விவேகானந்த கேந்திரா அளிக்கும் ஓர் எரிசக்தி கலனை தன் வீட்டு கொல்லைப்புறத்தில் வைக்கத் திட்டமிட்டிருந்தார். வீட்டின் சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் கலன் அது. ஆனால் வீட்டு சொந்தக்காரரிடம் யாரோ ஏதோ சொல்லிவிட்டார்கள். அவர் இந்தக் கலனிலிருந்து சகிக்கமுடியாத துர்நாற்றம் வரும், அது வெடிக்கும் அபாயம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லி அதை வைக்க அனுமதி மறுத்துவிட்டார். சாரதா ப்ரியா கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திர இயற்கை வள அபிவிருத்தி திட்டத்தின் சக்தி சுரபி- பயோ மெத்தனேஷன் கலன் குறித்த அறிமுகப் பயிற்சி வகுப்பு சென்றதிலிருந்து மனதில் உருவான கனவு இந்த எரிவாயுக் கலன்.

இது பிற எரிவாயுக்கலன்களைப் போலல்ல. இதற்குத் தினமும் சாணம் கரைத்து ஊற்ற வேண்டாம். வீட்டுக் கழிவுகளிலிருந்தே எரிவாயு பெற்றுக்கொள்ளலாம். எனவே மீண்டும் இந்தத் திட்டத்தில் இருக்கும் நன்மைகளை வீட்டின் உரிமையாளருக்குத் தெளிவுபடுத்தினார், சாரதா ப்ரியா.

இறுதியாக வீட்டின் உரிமையாளரும் இந்தக் கலனை அமைப்பதற்குச் சம்மதித்தார். அதோடு, "அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்களிடமிருந்து சின்ன முனகல் வந்தாலும் அடுத்த விநாடி இது இங்கே இருக்கக் கூடாது...' என்ற நிபந்தனையோடு சம்மதித்தார். அதன்பிறகு நடந்தவற்றை சாரதா ப்ரியாவே விவரிக்கிறார்...

""மெல்ல அக்கம் பக்கத்தவர்கள் இதன் அருமையை உணர ஆரம்பித்தார்கள். எங்கள் குடும்பத்தில் நாலு பேர். இந்தக் கலம் வந்ததில் எரிவாயு சிக்கனம் எங்களுக்கு எளிதானது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கோ கொட்டப்படும் குப்பைகள் குறைவது கண்கூடாகத் தெரிய ஆரம்பித்தது. எலிகள் உருவாகி வந்த இடங்கள் இப்போது சுத்தமாக ஆரம்பித்தன. அவர்களே இப்போது வீட்டுக் கழிவுக் குப்பைகளை இதில் போட ஆரம்பித்தனர். அவர்களுக்குக் குப்பை பிரச்னை தீர்ந்தது எங்கள் குடும்பத்துக்கோ சமையலுக்கு எரிவாயு கிடைத்தது!

இந்தக் கலனைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்தியாவுக்கு எரிசக்திப் பற்றாக்குறை உள்ளது. கூடவே ஒரு பிரிவினையும் இந்தியாவுக்குள் இருக்கிறது. மற்ற எல்லாப் பிரச்னைகளும் போல அதிக எரிசக்தி நகரத்தில் வாழ்வோரால் பயன்படுத்தப்படுகிறது. 80 சதவிகித மக்கள் வாழும் கிராமங்கள் 20 சதவிகித எரிசக்தியையும் 20 சதவிகித நகர மக்கள் 80 சதவிகித தேசிய எரிசக்தியையும் பயன்படுத்துகிறார்கள் என கணிக்க முடியும். சரியான மக்கள் தொழில்நுட்பம் எரிசக்திப் பிரச்சனையைத்  தீர்க்கத் தேவைப்படுகிறது.

இந்த கலத்தில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக உழைத்து வரும் அமைப்பு "விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தித் திட்டம்'. சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான சர்வதேச "ஆஷ்டன்' பரிசு பெற்ற அமைப்பு இது. இவர்கள் இப்போது வடிவமைத்திருப்பதுதான் "சக்தி சுரபி' என்கிற பயோ மெத்தனேஷன் கலன்.

பயோ மெத்தனேஷன் என்றால் என்ன? நம் வீட்டு சமையலறைக் கழிவுகள், சாப்பாட்டுக் கழிவுகள் ஆகியவற்றை "ஆர்கானிக் கழிவுகள்' எனச் சொல்வார்கள். இவற்றை ஒரு கலனுக்குள் நுண்ணுயிரிகளால் நொதிக்க வைத்து, அதிலிருந்து எரிசக்தி வாயுவை உற்பத்தி செய்வதுதான் பயோமெத்தனேஷன். அதை சமையலறைக்குக் கொண்டு செல்லும் கலன்தான் - பயோ மெத்தனேஷன் கலன். சக்தி சுரபி.

"சக்தி சுரபி' நம் வீட்டுக் கொல்லைப்புறத்திலிருந்து நம் வீட்டுக் கழிவுகளைp பயன்படுத்தி நமக்கு எரிசக்தி தரும் ஒரு கலன். இந்தக் கலன் நம் வீடுகளில் ஏற்றும் சிறிய நீல பிழம்புகள் நம்மை நம் உலகின் சுற்றுப்புற சூழ்நிலைக்கு பாதுகாவலர்களாக மாற்றுகிறது, நம்மை தன்னிறைவு கொள்ளச் செய்கிறது.

ஒரு க்யூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட கலனில் உள்ளிட ஐந்து கிலோ கழிவு தினமும் தேவை. இதிலிருந்து ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டிலிருந்து சராசரியாக நான்கு ஐந்து மணிநேரம் சமையல் எரிவாயு கிடைக்கும். ஆனால் எல்லா நாட்களும் ஒரே அளவு கழிவு கிடைக்கும் எனச் சொல்ல முடியாதே... கழிவுகள் அளவு குறைந்தால் குறைவான கழிவுகள் போடப்பட்டாலும் இந்தக் கலனின் தொடர் செயல்திறன் பாதிக்கப்படாது. அவ்விதத்தில்தான் இந்தக் கலன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் கச்சிதமான அடக்கமான வடிவமைப்பே அதன் முக்கிய தனித்தன்மையாகும். அவற்றின் கறுப்பு வர்ணம் அவற்றை மேலும் சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி செரித்தலை மேலும் அதிகத் திறமையுடன் செய்ய வைப்பதாக அமைகிறது. அவற்றை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக இடம் மாற்றலாம். எனவே வீடு மாறும் போது குளிர்சாதனப் பெட்டி போல- தொலைக்காட்சி பெட்டி போல இந்தக் கலனையும் இடம் மாற்றலாம். அத்துடன் இவை நமக்கு ஏற்ற வெவ்வேறு வகையான கொள்ளளவுகளில் கிடைக்கின்றன.

இந்த பயோ-மெத்தனேஷன் கலனில் பல முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. இவற்றால் இக்கலனின் செயல்திறன் அதிகரிப்பதுடன் இந்தக் கலனை கையாள்வதை எளிதாக்கவும் செய்கிறது. உதாரணமாகச் சிலவற்றைக் காண்போம்:

கழிவுகளை உள்ளே விடுவதற்கான குழாய் நீளமாக உள்ளே செரிப்பான் வரை நீள்கிறது. செரிப்பானில்தான் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் கழிவிலிருந்து எரிசக்திக்கான வாயுவை உற்பத்தி செய்கின்றன. மீத்தேன் வாயு சேகரிப்பானை ஒரு மைய அச்சுக் குழாய் தாங்குகிறது. இதனால் சுற்றும் வட்ட இயக்கமும், மேலும் கீழுமான இயக்கமும் சாத்தியமாகிறது. இவை போகவும் உள்ளே தாங்கும் கம்பிகள் உள்ளன. இவை எல்லாமே கழிவுகளை சிறு சிறு துகள்களாக உடைத்து, கலனின் இயக்கத்தையும் வாயு உற்பத்தியையும் அதிகப்படுத்துகின்றன. "ஸ்லரி' எனப்படும் கழிவு நீர் வெளியே வருவதற்கான அமைப்பு ம-வடிவத்தில் உள்ளது. இதனால் நாம் உள்ளே விடும் கழிவுகள் செரிக்காமல் வெளியே கழிவு நீராக வருவதற்கான சாத்தியம் தவிர்க்கப்பட்டு விடுகிறது. எல்லா கழிவுகளும் உள்ளே செரிக்கப்பட்ட பிறகுதான் கழிவு நீர் வெளியே வர இயலும்.

கலனைச் சுற்றி நீர் வளையத் தொட்டி ஒன்று உறை போல அமைந்துள்ளது. "தண்ணீர் ஜாக்கெட்' என அழைக்கப்படும் இது வாயு வெளியேறுவதையும் கழிவு உள்ளேவிடும் போது சிதறி மாசு ஏற்படுத்துவதையும் தடுக்கிறது. மேலும் வாயு சேகரிப்பானுக்கு மேலுந்தும் விசையை அளிக்கிறது. இந்த மேலுந்து விசையும் மேலே உள்ள எடைக் கற்களால் கீழழுத்தும் விசையுமாக வாயுவுக்குத் தேவையான அழுத்தத்தை அளித்து நன்றாக வாயு அடுப்பில் எரிவாயுவை தருகிறது. இந்த தனித்தன்மைகள் அனைத்தும் இந்தக் கலனை எளிமையான திறமையான ஒன்றாகத் திகழ வைக்கின்றன.

விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தித் திட்டம் உருவாக்கிய இந்தத் தொழில்நுட்பமானது, சிறியதாகத் தோன்றினாலும் பெரிய சாத்தியங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியமான பங்களிப்பாகும். நமது தேச ஆற்றல் கொள்கைகளை நிர்ணயிப்பவர்களும் வீட்டு எரிசக்திக்கான சந்தையும் இந்த எளிய நீலப் பிழம்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை தேசிய அளவில் விரிவுபடுத்தினால், இந்தியா தனது ஆற்றல் தேவைகளில் ஒரு கணிசமான அளவு தன்னிறைவு பெற முடியும்.              

நன்றி:- தினமணி, ஞாயிறு கொண்டாட்டம், 03-02-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.