Tuesday, February 19, 2013

தீவிரவாதிகளின் தாக்குதலில் தப்பிய மலாலா யூசஃப்ஸாயின் விஸ்வரூபம் ! !

400 மலாலாக்கள் தயார் !
மலாலா யூசஃப்ஸாய்.

15 வயது இளம் சமூக ஆர்வலரான இவர் இப்போது இருப்பது லண்டனில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில். தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மலாலா. படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இஸ்லாமியச் சிறுமி. முதல் மாணவி. தனது பாக்கெட் மணியை அதிகமாகப் புத்தகங்கள் வாங்குவதில் செலவழிப்பார்.

இவர் படிக்கும் பள்ளியில் பெண் குழந்தைகள் படிக்க வரக்கூடாது என தாலிபான்கள் தடைவிதித்தனர். அவர்களின் இந்தத் தடைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் விதமாக இணையதளத்தில் ஓர் பிளாக்கைத் தொடங்கி "தாலிபான்களின் பிடியில் எனது பள்ளி வாழ்க்கை' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். இவரின் வாழ்க்கையை அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் பத்திரிகை ஆவணப்படமாக எடுத்தது. பெஷாவரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் "எனது கல்வி உரிமையில் தலையிடுவதற்கு தாலிபான்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?' என்று பேட்டியளித்தார்.

தாலிபான்களுக்கு எதிராகவும், பெண் உரிமைக்காவும், பெண் கல்விக்காகவும் குரல் கொடுத்து வந்த இவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டேயிருந்தன. சளைக்காமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார் மலாலா. பொதுக்கூட்டங்களில் பேசும்போது பாரம்பரிய பழக்க
வழக்கங்களை உடைத்தெறிந்துவிட்டு, பெண் குழந்தைகளைப் படிக்க அனுப்பும்படி கூறுவார். சமூகத்திலும் மாற்றம் நிகழ்ந்தது. பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினர். பல பள்ளிகளுக்கு மலாலாவின் பெயர் மறுபெயராக சூட்டப்பட்டது.

இந்நிலையில் மலாலாவைக் கொல்லத் தீர்மானித்தனர் தாலிபான்கள். ""எங்கள் தலைவர் மலாலாவைக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்தார். இரண்டு பேரை அனுப்பி மலாலாவை கொலை செய்யச் சொன்னார். ஆனால் எங்களுக்குக் கொலை செய்ய மனம் வரவில்லை. கொலை செய்தால், எங்களுக்கு அவப்பெயர் கிடைக்கும். ஆனால் எங்களுக்கு வேறு வழியும் இல்லை'' என்கிறார் தாலிபான் தீவிரவாதிகளின் மூத்த கமாண்டர்.

9 அக்டோபர் 2012. மலாலாவின் பள்ளிப் பேருந்து 14 மாணவிகளும் மூன்று ஆசிரியர்களுடன் சென்று கொண்டிருந்தது. அனைத்து மாணவிகளும் அன்றைய தினம் நடந்து முடிந்த தேர்வினைப் பற்றி தீவிரமாகப் பேசிக் கொண்டே வந்தனர். பேருந்தின் பின்பகுதி வாசலில் மலாலாவின் அருகில் அமர்ந்திருந்த சிறுமிதான் துப்பாக்கி ஏந்திய அந்தத் தீவிரவாதியை முதலில் பார்த்தாள்.

வண்டியை நிறுத்தி ""இதில் யார் மலாலா?'' என்றான் அவன். அனைவரும் அமைதியாயினர். ஆனால் எல்லாரின் பார்வையும் மலாலாவின் மீதே இருந்தது. அவ்வளவுதான் துப்பாக்கி குண்டு மலாலாவின் தலையைத் துளைத்தது; முன்னோக்கிச் சரிந்தார் மலாலா. துப்பாக்கி ஏந்தியவர்கள் தப்பியோடினர்.

மலாலாவின் தலையைத் துளைத்த துப்பாக்கி குண்டு அவரின் இடது கண்ணுக்குப் பின்னால் உள்ள தோலைத் துளைத்தது. அவரின் மண்டை ஓட்டையும், தாடை எலும்பையும் பதம் பார்த்தது. பாகிஸ்தான் டாக்டர்கள் அவரின் உடைந்த மண்டை ஓட்டுப் பாகங்களை நீக்கிவிட்டு அந்த இடத்தை அவரின் வயிற்றுப் பகுதியில் உள்ள சதையால் அடைத்தனர். உடைந்த மண்டைஓட்டுப் பகுதியை சரி செய்வதற்காக லண்டன் சென்றார் மலாலா.

மலாலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த லண்டன் "ராணி எலிசபெத் மருத்துவமனை' பரிசுப் பொருள்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிறைந்தன. உலகின் பல்வேறு இடங்களில் இருந்து நன்கொடைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்கள் குழு சுமார் 50 ஆயிரம் டாலர் அனுப்பி வைத்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும், சமூக ஆர்வலர்கள் மூலமாகவும் பாகிஸ்தான் பெண்கள் கல்விக்கு உதவித்தொகைகளும் குவியத் தொடங்கின. பாகிஸ்தான் அதிபர் மலாலாவின் பெயரில் பெண்கள் கல்விக்கு 10 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளார்.

இதுமட்டுமன்றி, மலாலா இப்போது உலகின் பிரபல மனிதர்களின் நண்பராகிவிட்டாள். கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் மேகன் ஸ்மித், அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷின் மனைவி என பல்வேறு முக்கியப் புள்ளிகளின் பார்வையில் மலாலா உள்ளார். மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து திரும்பினார் மலாலா.

மீண்டும் மலாலா அதே பள்ளியில் தனது படிப்பைத் தொடர்வாரா?என்பது தெரியவில்லை. ""எங்கள் வகுப்பில் 31 மாணவிகள் படிக்கிறோம். எனக்கருகில் உள்ள ஒரே ஒரு டெஸ்க் மட்டும் காலியாக இருக்கிறது. அது மலாலாவின் டெஸ்க். மலாலா வரும்வரை இந்த டெஸ்க் அவளுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்'' என்றார் அவர் வகுப்புத் தோழி மோனிபா.

அவர் வந்தாலும் வராவிட்டாலும் அதே பள்ளியில் 400 மலாலாக்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். பள்ளிக்குச் செல்லப் பயப்பட்ட பெண் குழந்தைகள் இப்போது தைரியமாக பள்ளிக்குச் செல்கின்றனர். அவர் படித்த பள்ளி மாணவிகள் அனைவரும் இப்போது தைரியசாலிகளாகிவிட்டனர்.                          

நன்றி :- , ஜெனிஃப்ரீடா ,தினமணி கதிர், 17-02-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.