Thursday, January 10, 2013

இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...- தோழன் மபா





சிலுவையில் அறையப்பட்டபோது இயேசு கிறிஸ்து கூறினார், ""பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள்'' என்று. தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இப்படித்தான் சொல்ல வேண்டும்.

தனது பெயரை ஒரு மொழியிலும் தனது தந்தையாரின் பெயருடைய முதல் எழுத்தை - அதாவது இனிஷியலை - மற்றொரு மொழியிலும் எழுதும் விசித்திரத்தைத் தமிழர்கள்தான் அரங்கேற்றி வருகிறார்கள்.

உலகின் எந்தப் பகுதியிலும் எந்த இனத்திலும் எந்த மொழியிலும் இப்படியொரு வேடிக்கை கிடையாது.

முருகன் மகன் குமரன் என்று எழுதும்போது மு. குமரன் என்றுதானே எழுத வேண்டும், எம். குமரன் என்றே எழுதிவருகிறோம். இதை ஒரு குறையாகக்கூட நாம் இதுவரை கருதவில்லை.

ஆங்கிலத்தில் பெயர் எழுதும்போது இனிஷியலை தமிழில் எழுதுவோமா? அப்படி எழுதச்சொன்னாலே அபத்தம் என்றுதானே கூறுவோம்? அதைத் தமிழில் மட்டும் எந்தவித மனக்கூச்சமும் இல்லாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோமே சரியா?

சுமார் 400 வருஷங்களுக்கு முன்னால் ஆங்கிலம் தமிழ்நாட்டுக்கு வந்தது. வியாபாரத்துக்காக வந்த கிழக்கிந்தியக் கம்பெனியார் நம்முடைய இளிச்சவாயத்தனத்தைக் கண்டு இங்கேயே தங்கி, நாட்டையும் வளைத்து நம்மையும் வளைத்துப் போட்டார்கள். அவர்களின் அதிகார எல்லை விரிய விரிய ஆங்கிலம் பாதாளம்வரை பாய்ந்தது.

பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாற்றல் சான்றிதழ் (டி.சி.) வழங்கும்போது நமது பெயரைத் தமிழில் எழுதி ஆங்கிலத்தில் இனிஷியல் போடுகிறார்கள். இந்தத் தவறை நமக்குச் சொல்லிக் கொடுப்பவர்களே நம்முடைய ஆசிரியர்கள்தான்!

ஒரு வகுப்பில் இரண்டு பேர் "கண்ணன்' என்ற பெயரில் இருந்தால், தம்புசாமி மகனை டி. கண்ணன் என்றும் இரத்தினசாமி மகனை ஆர். கண்ணன் என்றும் அழைக்கிறார்கள். த. கண்ணன், இரா. கண்ணன் என்று அழைப்பதில்லை.

அவர்கள் நிர்வாக வசதிக்காக ஆராயாமல் செய்த தவறு மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு அதுதான் சரி என்பதைப்போல ஆகிவிட்டது.

இந்தத் தவறு அதிகம் இடம்பெறும் இடம் நாம் அச்சிடும் திருமணப் பத்திரிகைகளில்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவதொரு திருமண அழைப்பிதழை எடுத்துப் பாருங்கள், உண்மை புரியும்.

அடுத்து இந்தத் தவறை அதிகம் முன்னெடுத்துச் சென்றது திரைப்படத்துறையினர்தான். அவர்களையே தமிழர்கள் இந்த விஷயத்திலும் முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். 1940-களில் இருந்தே தொடங்குகிறது திரைப்படத்துறையினரின் இருமொழிப் பெயர் மோகம். அது தவிர்க்க முடியாத விஷயமாகவே இன்றுவரை தொடர்கிறது.

இந்தத் தவறைக் களைய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திராமல் நாமே இயக்கம் தொடங்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விக்கூடங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். இதுவரை எழுதிய பழக்கத்தை அனைவரும் கைவிட வேண்டும். நல்லதொரு மாற்றத்துக்கு நாம் காரணியாக இருப்போம்.                                                                                                      


நன்றி :- கருத்துக்களம், தினமணி, 7, ஜனவரி,2013


0 comments:

Post a Comment

Kindly post a comment.