Saturday, December 15, 2012

பரலி சு.நெல்லையப்பர், பாரதிதாசன், கவிமணி, கல்கி, நாமக்கல் கவிஞர், சுரதா -பார்வைகளில் பாரதி !

கவிஞர்கள் பார்வையில்  மகாகவி பாரதி-

உள்ளம் கவரும் கவி அளித்தாய்

உலகம் எம்மை மதிக்க வைத்தாய்!

பள்ளத் திருந்த குருடர் எல்லாம்

பாரில்விழிப் பெற்று உய்யவைத்தாய்!

தெள்ளு தமிழை வாழ வைத்தாய்!

தேசம் போற்றும் கவியரசே!

வள்ளலே உன்திரு நாமம்

வாழ்க என்று வாழத்துவமே!







- பரலி. சு. நெல்லையப்பர்






மக்களுயர் வாழ்க்கையிலே மாதர்க்கு

விடுதலையை மறுத்திருக்கும்

துக்கநிலைதனை அகற்றித் தூயநிலை

உண்டாக்கி பெண்மை தன்னில்

தக்கதொரு தாய்த்தன்மை சமத்துவநிலை

காட்டி உயிர்தளிர்க்கும் காதல்

துய்க்கும் விதம் எழுத்தளித்த சுப்ரமண்ய

பாரதியார் நாமம் வாழ்க!

எல்லையற்ற ஆதரவும் பொருள்வலியும்

இசைத்திருந்த ஷேக்ஸ்பியரும்

சொல்லும் விக்டர் உய்கோவும் டால்ஸ்டாயும் ரவீந்திரனும் சொந்தநாட்டில்

நல்ல செயல் செய்தார்கள்! நடைப்பிணங்கள்

மத்தியிலும் வறுமை என்னும்

தொல்லையிலும் தொண்டு செய்த சுப்ரமண்ய

பாரதியார் நாமம் வாழ்க!

- பாவேந்தர் பாரதிதாசன்















தீரன் அறிவில் சிறந்தவன் - புது

தீர்க்கதரிசி வரகவி

வீர சுதந்திர சக்தியே - இவன்

வேடம் புனைந்திங்கு பாடிற்று

பாரில் அதிசயம் பாரதி - அவன்

பாடலை வேதமென் றோதுவோம்

வாரி சூழ் உலகெங்கணும் - நீடு

வாழ்க! கவிக்குயில் வாழ்கவே!

-கவியோகி சுத்தானந்த பாரதி

















பாட்டுக்கொரு புலவன் பாரதி, அடா! - அவன்

பாட்டைப் பண்ணோடொருவன் பாடினான், அடா

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே, அடா! அந்தக்

கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!

உள்ளந் தெளியுமொரு பாட்டிலே, அடா!

ஊக்கம் பிறக்குமொரு பாட்டிலே, அடா!

கள்ளின் வெறிகொளுமோர் பாட்டிலே, அடா! - ஊற்றாய்க்

கண்ணீர் சொரிந்திடுமோர் பாட்டிலே, அடா!

- கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை


















பாரதி என்னும் பெயரைச் சொல்லு - கெட்ட

பயமென்னும் பகைவனை வெல்லு

நேரினி உனக்கு நிகர் இல்லை - உடன்

நீங்கும் அடிமை மனத் தொல்லை.

சுப்ரமண்ய பாரதியின் பாட்டு - பாடிச்

சோம்பல் மனச்சோர்வுகளை ஓட்டு

ஒப்பரிய தன்மதிப்பை ஊட்டும் - அதுவே

உன் பலத்தை நீ உணரக் காட்டும்

துள்ளிக் குதித்துவரும் சந்தம் - செயல்

தூண்டித் துணைபுரியச் சொந்தம்

அள்ளிக் கொடுத்த பெரும் உறவோன் - நம்

அருமைப் பாரதியை மறவோம்.

- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை















கங்கையெனப் பொங்கிவரும் தண்தமிழினில் - இன்பக்

கவிதைபல புனைந்தளித்தான் வெண்ணிலாவே - வெற்றிச்

சங்கம் ஊதிய முரசறைந்து எழுக என்றார் - இந்தத்

தரணியில் நமக்கு நிகர் இல்லை என்றார்!

கவியரசர் பாரதியின் கவிதைஇன்பம் -உன்

கதிரொளியில் காண்பதென்ன வெண்ணிலாவே -இந்த

புவியில் நீயும் தமிழன் எனப் பிறந்ததுண்டோ- அவர்

புதுமைக்கவி மதுஅருந்தி மகிழ்ந்ததுண்டோ!

- கல்கி


















நித்திரைக்கு நாள் தோறும் அடங்கிவந்த

நீடுபுகழ் பாரதியார் - ஆங்கிலேயன்

உத்தரவுக்கு அடங்காத கவிஞர்! இந்த

உலகுக்கே நிலையான நீதி சொன்ன

பத்திரிகை ஆசிரியர்! புழுதிமேட்டில்

பசியோடு படுத்திருந்த பாட்டின் தந்தை!

தத்துவத்தில் மூழ்காமல் கம்பன் கண்ட

தமிழுக்குள் மூழ்கியவர்! செய்யுள் சிங்கம்!



நந்தனைப்போலே சிறந்த பார்ப்பான் இந்த

நாட்டினிலே யாருமில்லை என்று பாடி

நிந்தனைக்கே ஆளான அறிஞர்! மக்கள்

நிலைகண்டு வாடியவர்! தம்மை வந்து

சந்தித்த துன்பத்தை ஒப்புக்கொண்டு

சற்றேனும் தளராமல் வாழ்ந்த வீரர்!

தந்தைவழி செல்லாமல் சங்ககாலத்

தமிழர்வழியில் வாழ்ந்த புதிய மேதை!

- கவிஞர் சுரதா

டிச. 11 பாரதியார் பிறந்தநாள்




 படங்கள் உதவி :- கணினி.




நன்றி :-

பாடல்கள் தொகுப்பு

தீக்கதிர் :- 15-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.