Saturday, December 15, 2012

தமிழில் எழுத-படிக்கத் திணறும் அரசு பள்ளி மாணாக்கர்கள்: சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு !



நெல்லை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர் தமிழில் எழுதுதல் மற்றும் படிக்கும் திறன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான மாணவ, மாணவியர் தமிழில் எழுத, படிக்க திணறுவது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியரின் கற்றல் திறனை மேம்படுத்த அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 96 அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களிடையே ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளில் பலரும், தமிழைப் பிழையின்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து கூடுதல் திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் 9ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பி்த்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 96 பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு திறனறி தேர்வு நடத்தப்பட்டது. அதில் மாணவர்கள் தமிழில் பிழையி்ன்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுவது கண்டறியப்பட்டது. தமிழ் மொழியை வாசிக்கத் திணறும், இந்த மாணவர்கள் மற்ற பாடங்களைப் படிப்பது கடினமாகும். எனவே தனி கவனம் எடுத்து தமிழில் தவறின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஒவ்வொரு அரசு பள்ளிகளும் 9ம் வகுப்பு மாணவர்களை தனித்தனியே தமிழில் வாசிக்க செய்து சரியாக வாசிக்கத் தெரியாத மாணவர்களையும், பிழையோடு எழுதும் மாணவர்களையும் தரம் பிரித்து பட்டியல் தயாரிக்க வேண்டும்.

தமிழைப் படிக்க திணறும் மாணவர்களிடம் தனி கவனம் செலுத்தி அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டும். இதற்காகத் தினமும் 1 மணி நேரம் தனி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :- ஒன் இந்தியா, 02-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.