Thursday, December 27, 2012

கேஸ் ஏஜென்சிகள் முறைகேடு: மானிய விலை சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ~




 மானியமில்லாத சமையல் காஸ் சிலிண்டர்களைக் கணக்கிடுவதில் கேஸ் ஏஜென்சிகள் முறைகேடு செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. மானியம், "கட்' ஆனதால், 900 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கவேண்டிய நிலைக்கு நுகர்வோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, இனி, மானிய விலையில் வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. செப்., 14ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த அறிவிப்பின்படி, மார்ச், 31ம் தேதி வரையிலான, நடப்பு நிதியாண்டில், மூன்று சிலிண்டர்களை மட்டும், மானிய விலையில் நுகர்வோர் பெற முடியும்.

"மானிய விலை காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, செப்., 14ம் தேதி மற்றும் அதற்கு பின், போடப்படும் ரசீதுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட வேண்டும்' என, மத்திய அரசு, தெளிவாக அறிவித்துள்ளது. ஆனால், காஸ் சிலிண்டர் வினியோகிக்கும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின், "ஏஜென்சி' நிறுவனங்களில் பெரும்பாலானவை, செப்., 14ம் தேதிக்கு முன் போடப்பட்ட, "பில்' களுக்கான சிலிண்டர்களையும் கணக்கிடு கின்றன

.இத்தகைய முறைகேட்டால், நடப்பு நிதியாண்டில், தங்களுக்கு மானிய விலையில், இரு சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என, நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில் சிலிண்டர் புக் செய்பவர்களிடம் கேஸ் ஏஜென்சி நிறுவன ஊழியர்கள் இனி 900 ரூபாய்க்கு மட்டுமே சிலிண்டர் கிடைக்கும் என்று தெளிவாகக் கூறுகின்றனர். காரணம் கேட்டால் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான மானிய சிலிண்டர் முடிந்து விட்டது என்றும் இனி மேல் மானியம் இல்லாத சிலிண்டர் மட்டுமே கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

இந்தப் பதில் நுகர்வோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையில் முறைகேடு புகார் மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையைக் கணக்கிடுவதில், ஏஜென்சிகள் முறைகேடு செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து மானியமில்லாத சிலிண்டர்களை நுகர்வோர்கள் திரும்பக் கொடுத்து வருகின்றனர். சென்னை, குரோம்பேட்டையில், "இண்டேன்' நிறுவனத்தின், குறிப்பிட்ட, "ஏஜென்சி'யின் வாடிக்கையாளர்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று, மானிய விலை அல்லாத சிலிண்டரை வாங்க மறுத்துள்ளனர்.

இதே போல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், சிலிண்டர் வாங்காமல் மக்கள் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். "மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதாக உயர்த்த வேண்டும் என்று நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி :- ஒன் இந்தியா, 27-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.