Wednesday, December 26, 2012

கழிவுநீர் ஓடும் புண்ணிய நதிகள்… குளிப்பதற்குக் கூடத் தகுதியில்லை!: எச்சரிக்கை ரிப்போர்ட் !

டெல்லி:சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் வடஇந்தியாவில் பாயும் கங்கை, யமுனை உள்ளிட்ட புண்ணிய நதிகள் குளிப்பதற்குக் கூடத் தகுதியற்றவைகளாக மாறிவிட்டதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

டேராடூனில் இயங்கி வரும் ஹெஸ்கோ என்ற அரசுசாரா அமைப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர் அனில் ஜோஷி தலைமையில் வட இந்தியாவில் பாயும் புனித நதிகளைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். இதற்காக இந்த ஆய்வுக்குழுவினர் உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இக்குழு,27 நாட்கள் 1,800 கி.மீ அளவிலான தூரத்தை கடந்து அங்கு ஆய்வை மேற்கொண்டது. ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.

உத்தரபிரேதசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 24 நதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இம்மாநிலங்களில் ஒடும் நதிகள், மக்கள் குளிப்பதற்கு உண்டான தகுதி கூட இல்லாமல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு யமுனை, வருணா, கண்டாக் உள்ளிட்ட நதிகள் அதிக மாசடைந்துள்ளன.

இந்த நதிகள் ஓடும் பகுதிகளில், தொடர்ந்து மாசு அதிகரித்து வருவதன் மூலம், நீர் மற்றும் நில சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் அசாதாரண மாற்றங்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கும் இந்நதிகளில் பெருமளவு சாக்கடை நீர்தான் ஓடுகிறது.

இதன்மூலம், அதனைச் சார்ந்து வரும் வாழும் மனிதர் உள்ளிட்ட உயிரினங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீர்நிலைகளைப் பாதுகாக்கவேண்டும் இயற்கை நீர் வளங்களான புண்ணிய நதிகள் மற்றும் நீர்நிலைகளைக் காக்கும் பொருட்டு, ஜி.இ.பி எனப்படும் மொத்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற திட்டத்தை அரசு வகுத்து, நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆற்றின் படுகைகளில்தான் நாகரீகங்கள் தோன்றின. மனிதர்களின் வாழ்வாதாரம் ஆறுகளையும், நீர்நிலைகளையும் சார்ந்தே அமைந்துள்ளது. ஆனால் அன்னையாகவும், தெய்வமாகவும் மதிக்கும் ஆறுகளை நாம் அனைவரும் மாசுபடுத்தி வருகிறோம்.

இதனால் எதிர்காலத்தில் மட்டுமல்லாது நிகழ்காலத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் சாராம்சங்களை ஒரு அறிக்கையாகத் தயாரித்துப் பிரதமர் அலுவலகம் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் விரைவில் அனுப்ப உள்ளதாக அனில் ஜோஷி கூறியுள்ளார்.                                                            
நன்றி :- ஒன் இந்தியா, 26-12-2012                                                   





0 comments:

Post a Comment

Kindly post a comment.