Tuesday, November 13, 2012

பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி: பாகிஸ்தான் ஒப்புதல்- By Venkatesan Sr, இஸ்லாமாபாத் !                    தாக்குதலுக்குள்ளான  மும்பை தாஜ் ஹோட்டல்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட லக்வி உள்ளிட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் முகாம்களில் பயிற்சி பெற்றதை அந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மும்பை நகர் மீது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்த வழக்கு பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அரசுத் தரப்பு சாட்சிகளான முகமது நவாஸ், தாஹிர் உசேன், காதிம் உசேன், சலீமுல்லா, ஹபீஸ் இம்ரான் ஆகிய ஐந்து குற்றப்புலனாய்வுக் காவல்துறை ஆய்வாளர்கள், நீதிபதி சௌத்ரி ஹபியுர் ரஹ்மான் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சகியுர் ரஹ்மான் லக்வி, ஷாகித் ஜமீல் ரியாஸ்,  மஷார் இக்பால் (எ) அபு அல் காமா, ஹம்மத் அமீன் சாதிக், அப்துல் வாஜித் (எ) ஜரார் ஷா ஆகியோர் கராச்சி, மான்ஷேரா, தட்டா, முசாபராபாத் ஆகிய நகரங்களில் உள்ள லஷ்கர் முகாம்களில் பயிற்சி பெற்றுள்ளனர்.

இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் லக்வி, ஒகாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர், சக்திவாய்ந்த குண்டுகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் லஷ்கர் அமைப்பின் தளபதியாகவும் அவர் செயல்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் சிலர் கராச்சி அருகில் கடலிலும் பயிற்சி பெற்றிருந்தனர் என்று ஐந்து ஆய்வாளர்களும் வாக்குமூலம் அளித்தனர்.

இந்தச் சாட்சிகள் எந்தவித நிர்ப்பந்தமும் இன்றித் தங்கள் வாக்குமூலத்தை அளித்திருப்பதாக பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பின் சிறப்பு வழக்குரைஞர் சௌத்ரி சுல்பிகர் அலி, நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

லக்வியின் வழக்குரைஞர் குவாஜா முகமது, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்கையில், ""குற்றம் சாட்டப்பட்டவர்கள் லஷ்கர் முகாம்களில் பயிற்சி பெற்றதை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள் ""அவர்கள் பயிற்சி பெறுவதை நாங்கள் நேரில் பார்த்ததில்லை.

ஆனால், எங்களுக்குத் தகவல் தரும் சில நபர்களின் கூற்றின் அடிப்படையில் இதைத் தெரிவிக்கிறோம். மேலும் லஷ்கர் பயிற்சி மையங்கள் குறித்தும் தகவல் திரட்டியுள்ளோம்'' என்று பதிலளித்தனர்.

அப்போது, வழக்குரைஞர் குவாஜா முகமது கூறுகையில், ""இத்தாக்குதலில் லக்வி ஈடுபட்டார் என்பதை இந்த 5 சாட்சிகளும் நேரடியாக அறிந்திருக்கவில்லை. தங்களுக்குக் கிடைத்த உளவுத்தகவலையும் அவர்கள் காவல்துறையுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. லக்வியோ மற்ற சந்தேகத்துக்கிடமான நபர்களோ குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இவர்களுக்குத் தெரிந்திருந்தால், அந்த நபர்களின் பெயர்களை 4 ஆவது அட்டவணையில் ஏன் சேர்க்கவில்லை? அவர்களின் நடவடிக்கையை ஏன் கட்டுப்படுத்தவில்லை? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தவறான கட்டுக்கதையை அரசுத்தரப்பு புனைந்துள்ளது. அதன் ஓர் அங்கம்தான் இந்த 5 சாட்சிகள்'' என்று வாதிட்டார்.

பாகிஸ்தான் நிலையில் மாற்றம்?

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லக்வி உள்ளிட்டோர் லஷ்கர் முகாம்களில் பயிற்சி பெற்றதை அரசுத் தரப்புச் சாட்சிகளான காவல் ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்டிருப்பது முக்கியமான திருப்பமாகும்.

இது இந்த வழக்கில் ஒத்துழைக்கவே முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்து இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்குத் தயார் என்ற நிலைப்பாட்டுக்கு பாகிஸ்தான் மாறியுள்ளதை உணர்த்துகிறது.

சமீபத்தில், மும்பைத் தாக்குதல் வழக்கை விசாரித்து வரும் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ., இந்த வழக்கு விசாரணையை தினசரி அடிப்படையில் நடத்துமாறு ராவல்பிண்டி பயங்கவாத எதிர்ப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது  குறிப்பிடத்தக்கது.          

நன்றிக்குரியோர் :-
                                       
  By Venkatesan Sr, இஸ்லாமாபாத்

First Published : 13 November 2012 01:48 AM IST                                  

0 comments:

Post a Comment

Kindly post a comment.