புத்துணர்வு முகாம் துவக்க விழாவுக்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரை வரவேற்க, அலங்கரிக்கப்பட்டு, வரிசையில் நின்றிருந்த யானைகள்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றங்கரையில், கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. மொத்தம் 48 நாள்கள் நடைபெற உள்ள இந்த முகாமில் 33 யானைகள் பங்கேற்றுள்ளன.
திங்கள்கிழமை காலை 6.30 மணி அளவில் அறநிலையத் துறை ஆணையர் தனபால் தலைமையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பேரூர் பட்டீஸ்வரர் கோயில் சுவாமிநாத குருக்கள் தலைமையில் யாக வேள்வி பூஜை நடைபெற்றது.
பின்னர், பவானி ஆற்றங்கரையில் குளுகுளு நீரில் குளித்து, அலங்கார ஆடைகள் அணிவிக்கப்பட்ட நிலையில் 33 கோயில் யானைகள் கம்பீரமாக அணிவகுத்து நின்றன.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சமால், வேளாண்மைத் துறை அமைச்சர் செ.தாமோதரன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து, வரிசையாக அணிவகுத்து நின்ற யானைகளுக்கு கரும்பு, வெல்லம், ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழங்களை வழங்கினர்.
முகாமில் பங்கேற்றுள்ளவற்றில் 31 யானைகள் பெண் யானைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2 மட்டுமே ஆண் யானைகள். மதுரை கள்ளழகர் திருக்கோயில் யானை சுந்தரவள்ளி மட்டுமே மிகவும் குறைந்த வயதுடையது.
மூத்த யானைகள்: நாகப்பட்டினம் அக்னீஸ்வர சுவாமி கோயில் யானை சூலிகாம்பாள் (வயது 60), கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்த கோபாலன் (வயது 60) ஆகிய இரு யானைகள் மூத்தவை.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயில் யானை கோமதி (வயது 18) முகாமில் படு சுறுசுறுப்பாக உள்ளது.
இந்த யானைக்கு மவுத் ஆர்கன் வாசிக்கவும், கால்பந்து ஆடவும் தெரியும் என்பது சிறப்பு. சில நேரங்களில் குறும்பும் செய்வது உண்டாம்.
2 வேளை சரிவிகித உணவுடன் 250 கிலோ வரை பசுந்தீவனம்
மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பகுதியில் நடைபெறும் புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகளுக்குத் தினமும் இரண்டு வேளை சரிவிகித உணவும், யானைகளின் எடைக்குத் தகுந்தவாறு 100 கிலோ முதல் 250 கிலோ வரை பசுந்தீவனமும் வழங்கப்படுவதாகக் கால்நடைத் துறை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது: யானைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளில் ராகி, கொள்ளு, அரிசிச் சாதம், பாசிப்பயறு, உப்பு, வெல்லம், இனிப்புப் பிரசாதம், அஷ்டசூரணம், வைட்டமின்-புரோட்டீன் பவுடர்கள், மினரல் மிக்சர், ஊட்ட மாத்திரை, மஞ்சள் பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து காலை 8.30 மணி, மாலை 5.30 மணி என இரண்டு வேளை கொடுக்கப்படும்.
யானைகளின் எடைக்குத் தகுந்தவாறு 4 கிலோ முதல் 15 கிலோ வரை இந்த உணவு வழங்கப்படும்.
அதேபோல், அத்தி மரம், அரச மரம் ஆகியவற்றின் இலைகள், கூந்தப்பனை ஓலை, தென்னை ஓலை, சோளத்தட்டை, நாணல் புல், பலா மற்றும் கீரை வகைகளைக் கலந்து யானையின் எடைக்கு ஏற்றவாறு 100 முதல் 250 கிலோ வரை பசுந்தீவனங்கள் வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க முடிவு
கோயில் யானைகள் முகாமை நேரில் பார்வையிடப் பொதுமக்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
யானைகள் முகாமை காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிப்பது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அனுமதி கிடைத்தவுடன் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்
நன்றி :- தினமணி, 28-11-2012
Wednesday, November 28, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.