Wednesday, October 31, 2012

ஓதுவார் குறையை அரசிடம் ஓதுவார் யார்...? பக்தி இலக்கியங்களுக்கு உயிர் வருமா?

தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்த தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரந்தம், பெரியபுராணம் மற்றும் பதிகப் பாடல்களை தெரிந்த ஓதுவார், அரையர்கள் பலர் இருந்தும், அவர்களை அரசு பயன்படுத்திக் கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. இதை மாற்றி, பழைமை வாய்ந்த சைவ, வைணவப் பாடல்களை தினந்தோறும் கோவில்களில் ஒலிக்கச் செய்யவும், வகுப்புகள் எடுக்கவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சைவக் கோவில்களில், பூஜையின் போது, தேவார திருமுறைகளைப் பாடும் பணியைச் செய்பவர்கள் ஓதுவார்கள். புகழ்பெற்ற சைவ மடங்களில், குருகுல முறைப்படி படித்து வந்த இவர்களுக்கு, அறநிலையத்துறையினர் உரிய பணி வழங்காமலும், வழங்கியவர்களுக்கு முறையான சம்பளம் வழங்காமலும் உள்ளனர்.

இதனால், பாடல்பெற்ற தலங்களில் கூட ஓதுவார்கள் பணியில் இல்லாத அவலம் நீடிக்கிறது. சைவப் பெரியார் திருநாவுக்கரசர் தேவாரத்தை அரங்கேற்றிய, கடலூர் மாவட்டம் திருவதிகைக் கோவிலிலும், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தை அரங்கேற்றிய, திருவெண்ணெய் நல்லூரிலும் இன்று தேவாரம் பாட ஓதுவார் இல்லை.

வைணவக் கோவில்களில் பாசுரம் பாடும் பணியில், "அரையர்'கள் ஈடுபடுத்தப்படுவர். வைணவத்தில் புகழ்பெற்ற வைபவமான வைகுண்ட ஏகாதசியன்று நடக்கும், பகல்பத்து, ரா பத்து ஆகியவை தமிழ் திருவிழாக்களாகவே நடந்து வருகின்றன. சைவக் கோவில்களைப் போல், வைணவக் கோவில்களிலும், "அரையர்' சேவையின்றிப் பூஜைகள் அரங்கேறி வருகின்றன.

ஓதுவார்களின் கோரிக்கை குறித்து, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: பாடல் பெற்ற சைவக் கோவில்களில் ஓதுவர்களும், புகழ்பெற்ற வைணவக் கோவில்களில் அரையர்களும் நியமிக்கப்படவில்லை. அப்படி நியமிக்கப்பட்ட ஒரு சில ஓதுவார்களுக்கு மாதம் 30 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சம்பளமும், தினமும் ஒரு பட்டைச்சாதப் பொட்டலமும் வழங்கப்படுகிறது.

முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளை ஈஸ்வரன் கோவிலில் ஓதுவார் சேவை செய்பவருக்கு மாதம் 70 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால், சிதம்பரம் கோவிலில் போராட்டம் நடத்திய ஆறுமுகசாமிக்கு அரசு 3,000 ரூபாய் சம்பளம் வழங்கிறது. ஏன் இந்த பாரபட்சம்?

தமிழில் பெயர் வைக்கும் சினிமாவுக்கு அரசு வரிச்சலுகை வழங்குகிறது. ஆனால், கோவில்களில் தமிழில் பாடுபவர்களுக்கு சம்பளமும் குறைவு; சலுகைகளும் இல்லை.

தர்மபுரம் சுவாமிநாதன் என்ற ஓதுவாரைத் தனது ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞர் ஆக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியும் கவுரவித்தார்.

இப்போது அரசு முன்னுரிமை தராததால் யாரும் சமய இலக்கியங்களை படிக்க முன்வருவதில்லை. படித்தவர்கள் உதவியின்றி வறுமையில் உள்ளனர். தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடந்த போது, 108 ஓதுவார்கள், அரையர்களைக் கொண்டு பாசுரம், தேவாரம் பாடி, மாநாடு துவங்கப்பட்டது.

தற்போதைய செம்மொழி மாநாட்டில் ஓதுவார்களுக்கு அழைப்பும் இல்லை; மரியாதையும் இல்லை. ஓதுவார்கள், அரையர்களுக்கு அடிப்படை சம்பளம் 3,000 ரூபாய் வழங்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அர்ஜுன் கூறினார்.

தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்விய பிரபந்தம், ஆண்டாள் பாடல்கள், கம்ப ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம், பெரியபுராணம், குற்றால குறவஞ்சி, குமரகுருபரர் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பதிகங்கள், திருப்புகழ்.

அந்தந்தத் திருத்தலத்திற்கு உரிய பாடல்கள், அவ்வையார், கபிலர், இரட்டைப் புலவர்கள் எனப் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்த அருந்தமிழ் புலவர்களின் பாடல்களை கோவில்கள் முழுவதும் ஒலிக்கச் செய்ய வேண்டும்.

இதற்கான வகுப்புகளை தினமும், காலை, மாலை வேளைகளிலும், விடுமுறை நாட்களிலும் நடத்த வேண்டும். ஏற்கனவே, பல கோவில்களில் சமய வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அனைத்துக் கோவில்களிலும் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கி, பக்தி இலக்கிய வகுப்புகள் நடத்த வேண்டும். பல நூறு கோடிகளை செலவு செய்து செம்மொழியை சிறப்பிக்க மாநாடு கண்ட தமிழக அரசு, சமயத்தமிழையும், பக்தி இலக்கியங்களையும் காக்க நடவடிக்கை எடுக்குமா?

- நமது சிறப்பு நிருபர் - தினமலர், 27-06-2010

0 comments:

Post a Comment

Kindly post a comment.