Thursday, October 18, 2012

இனிமேல் நமது எம்.எல்.ஏ.க்களை வீட்டிலிருந்தவாறே தொடர்பு கொள்ள முடியும் ! !






 எம்.எல்.ஏ.க்களுக்கு லேப்-டாப் வழங்கும் திட்டத்தை புதன்கிழமை தொடங்கிவைத்த முதல்வர் ஜெயலலிதா. உடன், (இடமிருந்து) எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம் (திருமங்கலம்), மனோகரன் (திருச்சி கிழக்கு), கனிதா சம்பத் (மதுராந்தகம்), விஜயலட்சுமி பழனிசாமி (சங்ககிரி), கே.சி.வீரமணி (ஜோலார்பேட்டை), கே.எஸ்.என்.வேணுகோபாலு (பழனி), பி.ஜி.நாராயணன் (பவானி) உள்ளிட்டோர்.

சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு லேப்-டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

தமிழகச் சட்டப் பேரவையில் கடந்த நிதியாண்டு பட்ஜெட் பொது விவாதத்தின்போது, சட்டப் பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ஒரு லேப்-டாப் வாங்கிக் கொள்ளலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் வரையறுக்கப்படாத நிதி ஒதுக்கீட்டிலிருந்து தங்களின் தேவைக்கேற்ப ஒரு புதிய லேப்-டாப் அல்லது கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் இணையதள இணைப்பு வசதி ஆகியவற்றை வாங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன்படி, லேப்-டாப்புகள் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் (எல்காட்) கொள்முதல் செய்யப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜெயலலிதா லேப்-டாப், பிரிண்டர் வழங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் யார் யார்? எம். முத்துராமலிங்கம் (திருமங்கலம்), மனோகரன் (திருச்சி கிழக்கு), எஸ்.கனிதா சம்பத் (மதுராந்தகம்), விஜயலட்சுமி பழனிசாமி (சங்ககிரி), கே.சி.வீரமணி (ஜோலார்பேட்டை), கே.எஸ்.என்.வேணுகோபாலு (பழனி), பி.ஜி.நாராயணன் (பவானி) ஆகிய எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து லேப்-டாப்புகளைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், பேரவைத் தலைவர் பி.தனபால், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, அரசு கொறடா வைகைச் செல்வன், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

பதவிக் காலம் வரை பயன்படுத்தலாம்: புதிதாக வழங்கப்பட்டுள்ள லேப்-டாப்புகளை எம்.எல்.ஏ.க்கள் இப்போதைய சட்டப் பேரவையின் பதவிக் காலம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

லேப்-டாப்புக்கு மூன்று ஆண்டுகள் வரை வழக்கமான உத்தரவாதமும், அதன் பின் பராமரிப்பு உத்தரவாதமும் வழங்கப்படும் என பேரவைச் செயலக அலுவலர்கள் தெரிவித்தனர்.                                                                       

நன்றி :-தினமணி 18-10-2012





0 comments:

Post a Comment

Kindly post a comment.