Sunday, September 23, 2012

திருக்குறள் கடவுள் வாழ்த்தும் வ.உ.சி. கருத்தும்‘பாயிரம்’ என்பது நூன்முகம். நூற்கு முகம் போன்று விளங்குதலால், அது நூன்முகம் எனப்பட்டது.

இக்காலத்து வழங்கும் திருவள்ளுவர் திருக்குறட் சுவடிகளிலெல்லாம் ‘கடவுள் வாழ்த்து’,‘வான்சிறப்பு’,‘ நீத்தார் பெருமை’,‘ அறன் வலி யுறுத்தல்’ என்னும் நான்கு அதிகாரங்களும் பாயிரமாகக் காணப்படுகின் றன.

ஆனால் ‘கடவுள் வாழ்த்து’ முதலிய மூன்று அதிகாரங்களும் ‘உரைகேளாளன்’ முதலியோர்களால் கூறப்பெற்ற சிறப்புப்பாயிரம். அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரம் ஒன்றே வள்ளுவரால் கூறப் பெற்ற பொதுப்பாயிரம்.

சென்னை அரசாங்கக் கீழ்நாட்டுப் புத்தக சாலையிலுள்ள மிகமிகப் பழையதான திருக்குறள் கையெழுத்துப் பிரதியொன்றில் இப்பொழுது பாயிரத்தின் முதல் அதிகாரமாக நிற்பதும் , பலரால் ஒப்புயர்வற்ற பாக்களையுடையதெனப் போற்றப்படுவதுமான ‘கடவுள் வாழ்த்து’ என்னும் அதிகாரத்தின் முடிவில் ‘சிறப்புப்பாயிரம் முற்றிற்று’ என்பது எழுதப் பட்டுள்ளது. அச்சொற்கள் ‘கடவுள் வாழ்த்து’ என்னும் அதிகாரம் வள்ளுவர் கூறிய பாயிரத்தில் சேர்ந்தது அன்று என்பதைக் காட்டுகின்றன.

இக்காலத்துத் தமிழ்ப் புலவர் பலரும், முற்காலத்துத் தமிழ்ப் புலவர் பலரும், நமக்குக் கிடைத்துள்ள திருக்குறளுரைகளின் ஆசிரியர்களிற் பலரும்,“கடவுள் வாழ்த்து” முதலிய மூன்று அதிகாரங்களையும் திருக்குறட் பாயிரத்தின் உறுப்புகளாகக் கொண்டிருக்க, நாம் அம்மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் இயற்றப்பட்டனவல்ல என்று கொள்வதும் சொல்வதும் அப்புலவர்களையும், உரையாசிரியர்களையும அவமதித்தலாம் என்னும் நினைப்புக் குப்பை தமது உள்ளத்தின்கண் கிடக்குமாயின் அவர்களெல்லாரிலும் மிகப் பெரியாரான நம் வள்ளுவர் வெறும் வெள்ளைப் பாக்களையே கொண்டுள்ள அம்மூன்று அதிகாரங்களையும் இயற்றினாரென்று கூறுதல் நம் வள்ளுவரை அவமதித்தலாம் என்னும் கோட்பாடாகிய மண்வெட்டியால் வெட்டி அக்குப்பையினைத் தமது உள்ளத்தினின்று வெளிப்படுத்திவிடல் வேண்டும்.

ஏனெனில், குப்பை நிறைந்துள்ள அரங்கு ஒன்று அதனைக் கொண்டுள்ள வரையில் நல்ல பொருள் ஒன்றைக்கொள்ள இயலாதாகலான் என்க.

சில புலவர்களும் உரையாசிரியர்கள் பலரும் கடவுள் வாழ்த்து முதலிய மூன்று அதிகாரங்களும் திருக்குறளின் பாயிரத்தைச் சேர்ந்தவை யென்று கொண்டதற்கு ஆதாரம் திருக்குறளை வள்ளுவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றிய காலத்துக் கேட்டவர்களென்று சொல்லப்படுகிற புலவர்களில் நத்தத்தனார், சிறுமேதாவியார், எறிச்சலூர் மலாடனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், மதுரைப் பெருமருதனார் இவ்வைவர் பாடியனவென்று ‘திருவள்ளுவமாலை’ யில் குறிக்கப்பட் டுள்ளன பாக்களேயாம்.

இவ்வைவரும் திருவள்ளுவமாலைப் பாக்களில் வேறு சிலவற்றைப் பாடிய புலவர்களும் வள்ளுவர் காலத்தினரல்லர் , பிற்காலத்தவர். இவ்வுண்மையைக் காலஞ் சென்று போன மெய்ப்புலவர் திரு. த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராயிருந்த கனம் சேஷகிரி அய்யர் அவர்கள் தலை மையின் கீழ் வாசித்த வியாசத்தில் தக்க ஆதாரங்களுடன் நிலை நாட்டியுள்ளார்கள்.

அவ்வியாசத்தைத் தேடியெடுத்து அச்சிட்டு வெளிப்படுத்துவதற்கு புலவர் பாக்கள் திருக்குறள் அரங்கேறிய காலத்தில் பாடப்பட்டன வல்ல வென்பதும் தமிழ் நூல்களுக்கு அழிவு நேரிட்ட பிற்காலத்தில் திருக்குற ளின் அதிகாரங்கள் முதலியவற்றின் தொகைகளை வரையறுத்துக் கூறக் கருதிப் பாடப்பட்டவையென்பதும் அவற்றைப் படிப்போர்க்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.

அப்பிற்காலத்துப் பாக்களைத் திருக்குறள் அரங்கேறிய காலத்துப் பாக்களென்று பிழைபட வெண்ணியே மேற் கூறிய உரையாசிரியர்களும் புலவர்களும் ‘கடவுள் வாழ்த்து’ முதலிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவர் பாயிரத்துட்பட்டவையென்று கூறி னார்.

அவர்களுள் அக்கூற்று ‘திருவள்ளுவ மாலை’யின் அப்பாக்கள் திருக்குறள் அரங்கேறிய காலத்திற்குப் பிற்காலத்தினவென்று கண்ட மாத்திரத்திலே பிழையெனத் தள்ளற் பாலதாம்.

(“திருக்குறள் பன்முக வாசிப்பு நூலிலிருந்து)

நன்றி :- தீக்கதிர் http://www.theekkathir.in/

0 comments:

Post a Comment

Kindly post a comment.