பல இளைஞர்களை திருமணம் செய்து நகை, பணத்தை பறித்து மோசடி செய்ததாக சஹானாஸ் என்பவர் பெங்களூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சென்னை அடையாறைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னைப் பெருநகரக் காவல்துறை ஆணையாளர் ஜே.கே.திரிபாதியிடம் ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், சஹானாஸ் இஸ்மாயில் என்பவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.
அரசு வேலைக்கு தேர்வு எழுத வேண்டும் எனக் கூறி என்னிடம் ரூ.25,000 பெற்றார். அதோடு, தோழியின் திருமணத்துக்குச் செல்வதற்காக நகை வேண்டும் என்று கூறி 2 பவுன் சங்கிலியை வாங்கி சென்றார். அதன்பின் அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது செல்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் குறித்து விசாரித்தபோது, திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் பல இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் சரவணன் தெரிவித்திருந்தார்.
இதுபோன்று மேலும் சில இளைஞர்கள் சஹானாஸ் மீது புகார் தெரிவித்திருந்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் சாஸ்திரி நகர் உதவி ஆய்வாளர் சியாத்தா தலைமையிலான தனிப் படையினர் விசாரித்து, தலைமறைவாக இருந்த சஹானாஸ் இஸ்மாயிலை பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில் பல இளைஞர்களை அவர் திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்
.
சஹானாஸ் இஸ்மாயில் (25) கேரளம் மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தாயார் சிறுவயதிலேயே குடும்பத்தைவிட்டு சென்றுவிட்டாராம். அவரது அப்பா 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்
.
சஹானாஸ் பத்தாம் வகுப்பு படித்தபோதே சித்திக் என்பவருடன் வாழ்க்கை நடத்தியதில் பத்து வயதில் ஒரு குழந்தை உள்ளதாகவும், பிரச்னை ஏற்பட்டு அவரிடமிருந்து பிரிந்துவிட்டதாகவும் தெரிகிறது. அதன்பின், 2005 இறுதியில் பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து சென்னை வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்த சம்சுதீனுடன் நெருக்கம் ஏற்பட்டு, மேடவாக்கத்தில் தங்கியிருந்தாராம். அதன்பின் 2007 இறுதியில் திருச்சியை சேர்ந்த ராகுலை மணம் முடித்து அவருடன் 6 மாதம் குடும்பம் நடத்தினாராம். அதன்பின் பிரச்னை ஏற்பட்டு அவரைப் பிரிந்து மீண்டும் சம்சுதீனுடன் இணைந்தாராம். அதன்பின் அவரிடம் ரூ.1 லட்சம் 85 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு பிரிந்துவிட்டாராம்
.
பின்பு, வேளச்சேரியில் ஒரு விடுதியில் தங்கி, தரமணியில் உள்ள ஒரு பி.பி.ஓ. நிறுவனத்தில் வேலைசெய்து வந்துள்ளார்
.
இதனால் பலருடன் தொலைபேசியில் பேச வாய்ப்பு இருந்ததால் அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடவேண்டும் தீர்மானித்தாராம்.
அதன்படி அடையாறு சரவணன், தியாகராய நகரைச் சேர்ந்த ராஜன், திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன், போரூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா ஆகியோரிடம் பல்வேறு காரணங்களைக் கூறி பணம் பெற்று ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
போரூர் மணிகண்டன் மற்றும் புளியந்தோப்பைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரை திருமணம் செய்து பணம் மற்றும் நகைகளைப் பறித்து ஏமாற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைக்கு பின்னர், சஹானாஸ் சைதாப்பேட்டை 9- வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.