Saturday, August 4, 2012

“ஸோல்ஜர ஏண்டா நகர்த்தினே? பிக்ஷப் தாண்டா முக்கியம்.’- பொலக்குணம் கிராமத்தின் குரலோசை !







உலக செஸ் சாம்பியன் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றிவாகை சூட இருப்பதை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் தருணம் இது. அந்த உயரத்திற்கு நாமும் வரவேண்டும் என்ற ஆர்வத்தில், சத்தமே இல்லாமல் ஒரு கிராமம் முழுக்க செஸ் ஆடிக் கொண்டிருக்கிறது. அதுவும் தமிழகத்தில் என்றால் ஆச்சரியமான விஷயம் தானே. இத்தனைக்கும் சாதாரண வாழ்க்கைக்கு வேண்டிய எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத குக்கிராமம் அது. ஆனாலும், அங்கே செஸ் விளையாட்டு பிரபலம்!

கிராமத்தின் பெயர் பொலக்குணம். திருவண்ணாமலை தெற்கு மாநில நெடுஞ்சாலையில், நான்கு கி.மீ. தூரம் உள்வாங்கி இருக்கிறது பொலக்குணம். எப்போதாவது எட்டிப் பார்க்கும் அரசு பஸ், பல கி.மீ. தூரம் தள்ளி இருக்கிற பள்ளிக்கூடம், அறுபதுக்கும் குறைவான வீடுகள் கொண்ட பொலக்குணத்தில், பெரும்பாலான சிறுவர்கள் கையில் செஸ் பலகை இருக்கிறது. ஒட்டிய வயிறும் கிழிந்த சட்டையும் அணிந்து அவர்கள் செஸ் விளையாடுவது பார்க்க வியப்பு.

“ஸோல்ஜர ஏண்டா நகர்த்தினே? பிக்ஷப் தாண்டா முக்கியம்.’ என கிராமத்துக்கு சற்றே அந்நியமான வார்த்தைகள் சிறுவர்களிடமிருந்து வருவது அசத்தல்.

பக்கத்து ஊர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிக்கும் ராமஜெயம் என்ற இளைஞர்தான் இவர்களுக்கு செஸ் சொல்லித் தந்திருக்கிறார். நாம் அவரிடம் பேசினோம்.

“செஸ் ஜாம்பவான்’ விஸ்வநாதன் ஆனந்த் டி.வி.யில் “செஸ்’ விளையாடுவதைப் பார்த்து “இம்ப்ரஸ்’ ஆகி நாமும் நம் கிராம மக்களும் அதுபோல் வர வேண்டும் என்று ஆடத் தொடங்கினேன். மாவட்ட அளவில் பல பரிசுகளை வாங்கியிருக்கேன்.

இரண்டாம் வகுப்பு படிக்கும் நிதிஷ்குமார்; நான்காவது படிக்கும் தருண்குமார், கோபிநாத், கார்த்திகேயன்; ஏழாவது படிக்கும் அபிராமி, அர்ச்சனா; ஒன்பதாம் வகுப்பில் காலடி வைத்திருக்கும் சச்சின்... என மழலைகள் பட்டாளம் செஸ் விளையாட்டில் ஜூனியர் லெவல் போட்டிகளில் ஜொலிக்கிறார்கள் என்றார் ராமஜெயம்.
“எங்க கிராமத்துல இப்ப 60 பேருக்கு மேல செஸ் விளையாடறாங்க. மழை வந்தால் வீடுகள் ஒழுகும். அதனால், கூட்டம் கூட்டமாக கோயிலுக்குள்ள உட்கார்ந்து விளையாடுவோம். இப்பக்கூட வேலூர்ல நடந்த போட்டியில ஜெயித்தேன். மாநில அளவுல விளையாடணும்னு ஆசையாயிருக்கு. ஆனா, அதுக்குப் பணம் வேணுமே?’ என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தும் விதத்தில் பேசும் இன்னொரு செஸ்வீரர் சச்சினை, ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்துகிறார் ராமஜெயம்.

இந்தச் சிறுவர்களின் கனவு சிகரத்தை எட்டிப் பிடிப்பதுதான். பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது பொலக்குணம்.

 எஸ். அன்வர்.  

 http://www.dinamalar.com/index.asp 


நன்றி!

குமுதம்-தினமலர்-மனித தெய்வங்களும் சில சேகரிப்புக்களும்

0 comments:

Post a Comment

Kindly post a comment.