Sunday, August 26, 2012

97 ஆண்டுகளுக்கு முந்தைய திலகரின் குரல் !


சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும் தலைவராக விளங்கிய பாலகங்காதர திலகர் 97 ஆண்டுகளுக்கு முன் பேசிய, அரிய குரல் பதிவு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் “சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கி நாட்டு மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர் திலகர். அவர் எழுதிய கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவை மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள கேசரி டிரஸ்ட் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனினும், திலகரின் குரல் பதிவு எதுவும் கிடைக்கவில்லை

என்று அவரது கொள்ளுப் பேரன் தீபக் திலக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புணே நகரில் கடந்த 1915-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் திலகர் பேசிய குரல் பதிவு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

97 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த விழாவில் இசை ஆர்வலரான சேத் லக்குமிசந்த் நரங் என்பவர் கச்சேரி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது பிரபலமான பாடகர்களாக விளங்கிய மாஸ்டர் கிருஷ்ணா ராவ், பண்டிட் பாஸ்கர்புவா பாகலே, பாலகந்தர்வா என்ற நாராயண்ராவ் ராஜன்ஸ் உள்ளிட்டோர் அந்தக் கச்சேரியில் கலந்து கொண்டு, விநாயகர் துதிப் பாடல்களையும், தேசபக்திப் பாடல்களையும் பாடினர்.

இந்தக் கச்சேரியை ஒலிப்பதிவு செய்வதற்காக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ரிகார்டிங் இயந்திரத்தை சேத் லக்குமிசந்த் பயன்படுத்தினார். அப்போது, திலகர் பேசிய பேச்சும் அதில் பதிவானது.

ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்தப் பதிவில், கூட்டத்தில் பங்கேற்ற மக்களை அமைதியாக இருக்கும்படி திலகர் கேட்டுக் கொள்கிறார்.

மராத்தி மொழியில்

பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும். சத்தம் போட்டுக் குறுக்கீடு செய்வதை நான் சகித்துக் கொள்ள மாட்டேன்.

வெளியே செல்ல விரும்புபவர்கள் செல்லலாம். ஆனால், கச்சேரி திட்டமிட்டபடி நடத்தப்பட வேண்டும்” என்று திலகர் கூறுவது இடம்பெற்றுள்ளது.

இந்தக் குரல் பதிவை அந்தக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்த சேத் லக்குமிசந்த் நரங்கின் பேரன் முகேஷ் நரங் பாதுகாத்து வருகிறார். இந்தப் பதிவு விரைவில் பொதுமக்களுக்கு ஒலிபரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:-

http://tamil.sudarnila.com/2012/08/26/97-



0 comments:

Post a Comment

Kindly post a comment.