Friday, July 20, 2012

மூன்றாம் உலகப் போர் கவிப்பேரரசு வைரமுத்து


மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று மூளுமா? மூண்டால் அது ஆயுதங்களை முன்னிறுத்தி நிகழுமா? நிகழாது என்றே கருதப்படுகிறது. நிகழ்ந்தால் அது அறிவுடைமை ஆகாது என்றே தோன்றுகிறது. ஏனெனில், அப்படி நிகழும் ஓர் அகில உலக ஆயுதப் போரில் வெற்றி கொண்டவன் முதல் பலியாவான். தோல்வி கண்டவன் இரண்டாம் பலியாவான். அதனால் மூன்றாம் உலகப் போர் மூளாது என்றே அறிவுலகம் நம்புகிறது.

ஆனாலும் மனிதகுல நகர்வுக்குப் போர் அவசியம் என்றே மானிடவியல் கருதுகிறது. போர்களே தேசங்களை உண்டாக்கின; இனக்குழுச் சமுதாயங்களை இணைத்தன; கலாசார உறவுகளை நிகழ்த்தின; கத்திமுனையில் நாகரிகங்களைக் கற்பித்தன; உதிரிப்பூ மனிதர்களை மாலை கட்டின. 


அதனால்தான் மனிதர்கள் போர்களை விரும்பாவிட்டாலும் போர்கள் மனிதர்களை விரும்பி நிகழ்ந்திருக்கின்றன.

இப்போதும் ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது தன் வடிவத்தை மாற்றிக் கொண்டு. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்; ஆயுதங்களை ஒளித்துக்கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர்; 


இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; புவி வெப்பமாதல் - உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர். இந்தப் போரில் இயற்கையை எதிர்த்து மனிதன் வென்றாலும் மனிதனை எதிர்த்து இயற்கை வென்றாலும் தோற்கப் போவதென்னவோ மனிதன்தான்.

நாடோடிக் கலாசாரத்திலிருந்து எது மனிதனை மீட்டெடுத்ததோ - எது மனிதனுக்கு இருத்தல் நாகரிகம் கற்பித்ததோ - அது - அந்த வேளாண்மை தொடங்கிப் பத்தாயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வேளாண்மைக் கலாசாரம் வந்த பிறகுதான் உண்ணல் - உடுத்தல் - இருத்தல் என்ற உயிர்த்தேவைகள் ஒழுங்குற்றன.

விவசாயம்தான் நரமாமிசத்திலிருந்து மனிதனை நாகரிகத்துக்கு அழைத்து வந்தது. உணவுப் பழக்கத்தில் விலங்குகளே ஆதிமனிதர்களின் ஆசான்கள். விலங்கு தின்ற எதையும் மனிதன் தின்றான். பழங்கள், கிழங்குகள், தானியங்கள், இலை தழைகள், விலங்கின் தசைகள் என்பன கிட்டாதபோது பிணங்கள் மனிதர்களின் பெருவிருந்தாயின.

ஒரு பிணம் மட்டும் உண்ணக் கிடைத்து உண்போர் எண்ணிக்கை அதிகமானவிடத்து ஓட்டப்பந்தயத்தில் எவன் வென்றானோ அவனே பிணத்தின் பெரும்பங்கு தின்றான் என்று காட்டுகின்றன கல்லோவியங்கள். வேளாண்மை தோற்று உணவு அரிதாகுமிடத்து மீண்டும் நரமாமிசம் என்ற அநாகரிகம் மனித குலத்தை ஆட்கொள்ளலாம்; அது நிகழாது என்று மறுக்க முடியாது.

இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின்கிராடில் சிறைபிடிக்கப்பட்ட ஒரு லட்சம் ஜெர்மானியர்கள் சைபீரியாவின் போர்க்கைதி முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 872 நாள்களுக்குப் பிறகு பறவைகளையும் எலிகளையும் வீட்டு விலங்குகளையும் தின்று தீர்த்ததும் சக கைதிகளின் பிணங்களை நோக்கி அவர்களின் பெரும்பசி நீண்டது. போர்முகாமில் 5,000 பிணங்களைக் காணவில்லை - பின்னர் அவை எலும்புக் கூடுகளாய்க் கண்டறியப்பட்டன. 


எனவே, பசியின் உச்சம் சக மனிதனையும் உணவாகப் பார்க்குமே தவிர, உயிராகப் பார்க்காது. அந்த அச்சம் இப்போது பீடித்திருக்கிறது அறிவுலகத்தை.


கி.பி.2050-இல் 900 கோடியாய் இருக்குமாம் இந்த பூமிப்பரப்பின் மக்கள்தொகை. ஆனால், மக்கள் பெருக்கத்துக்கு எதிர்மறையாக இறங்கிக் கொண்டேயிருக்கிறது உலக உணவு உற்பத்தி. 2000-ஆம் ஆண்டில் தொடங்கி எட்டாண்டுகளில் 24 விழுக்காடு குறைந்திருக்கிறது உலகத்தின் கோதுமை இருப்பு; 39 விழுக்காடு இறங்கியிருக்கிறது அரிசி இருப்பு.

புவி வெப்பமாதல் என்ற பூதம் தலைவழியாகவும் உலகமயமாதல் என்ற பூதம் கால்வழியாகவும் ஒரே நேரத்தில் விழுங்கிக்கொண்டே வருகின்றன விவசாயியை. எனக்குத் தெரியும் அந்த வலி. இந்திய தேசப் படத்தில் இடம்பெறாத ஒரு கிராமத்தில் பிறந்து, 17 வயது வரை கபாலம் பிளக்கும் வெயிலிலும் காலைச்சுடும் புழுதியிலும் கலப்பை பிடித்து உழுத எனக்கு விவசாய வெளிகளில் தண்ணீரோடு பாயும் கண்ணீரும் ரத்தமும் நன்றாகவே புரியும்.

இந்தப் படைப்பை விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக எப்படிச் செய்ய முடியும்? மூன்றாண்டுகள் ஆராய்ந்தேன்; பத்து மாதங்கள் எழுதினேன். எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்தைப் பதிவு செய்தேன்.

மண்ணில் முளைத்த மனிதர்கள் - உணர்ச்சியில் ஊறிய மொழி - சத்தியத்தில் நிகழும் சம்பவங்கள் - அனுமதிக்கப்பட்ட எல்லைக்கோட்டுக்குள் நிகழும் கற்பனை - நான் நடந்து பழகிய பூகோளம் - எல்லோரும் அறிந்த ஆனால் எழுதப்படாத எளியவர்களின் சரித்திரம் இவற்றின் கூட்டுத் தொகுப்புதான் மூன்றாம் உலகப் போர்.

இந்தப் படைப்பு உள்ளூர் மனிதர்களின் நாவினால் பேசப்படும் உலகக்குரல்; விழ வேண்டிய செவிகளில் விழுந்தாக வேண்டும். வாசிப்பு - ரசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி, தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது இந்தப் படைப்பு.

இயற்கையாலும் செயற்கையாலும் கூடிவரும் புவிவெப்பம் உலக விவசாயத்தின் மீது நிகழ்த்தியிருக்கும் தாக்குறவு அளப்பரியது; ஆராய்ச்சியில் கண்ட செய்திகள் அதிர வைக்கின்றன.
மத்திய ஆசியாவின் கிர்கிஸ்தான் நதிகள் குறைந்து வருகின்றன; சில நேரங்களில் வறண்டே விடுகின்றன. 


கடந்த பத்தாண்டுகளாக மத்திய ஆசியாவின் பனிமலைகள் உருகவில்லை அல்லது உருகுவதற்குப் பனிப்பாறைகள் இல்லை. இப்போது நிலவும் 3.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் 2100-இல் 8.4 டிகிரி செல்சியஸாக உயரக்கூடும். உயர்ந்தால் - வித்துகள் விதைக்க முடியாது மத்திய ஆசியாவில்.
தென்னாப்பிரிக்காவின் செனகலில் அதிகரித்து வரும் வெப்பத்தால் திடீர் திடீரென்று தீப்பிடிக்கிறது. சூழும் கடும் காற்று தீயின் அழல்களை அள்ளி வந்து விளைநிலங்களில் வீச, லட்சக்கணக்கான ஏக்கர் தானியங்கள் சாம்பலாகும் சம்பவங்கள் தொடர்கின்றன.

ரஷியாவின் அனுமானிக்க முடியாத வானிலையால் தடுமாறிப் போன விவசாயிகள் தங்கள் கோதுமை விவசாயத்துக்காகப் பருவம் மாறுகிறார்கள்; பாவம் ஏமாறுகிறார்கள்.

அமெரிக்காவின் கொலம்பியாவில் மலையேறிய வெப்பம் காலங்காலமாய்த் தழைத்திருந்த காப்பித்தோட்டத்தைக் கருக்கிவிட்டது. மாற்றுப் பயிராக இட்ட தக்காளியும் வெந்துவிட்டது வெப்பத்தால்.

ஆஸ்திரேலியா 1000 ஆண்டுகள் அறியாத வறட்சியை 2006-இல் சந்தித்தபோது பார்லியும் கோதுமையும் காய்ந்து கருகிவிட்டன. மீண்டும் பழைய உச்சத்தை பார்லி எட்டவே இல்லை.
இப்படி ஐந்து கண்டங்களிலும் கண்டத்தைச் சந்தித்து அந்திமத்திலிருக்கிறது ஆதி தொழிலான விவசாயம்.

உலகில் அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் வியட்நாம் நாட்டின் மக்கான் டெல்டா புவி வெப்பமாதலின் உடன் விளைவால் அடிக்கடி கடல் நீரில் மூழ்கிப் போகிறது. மழைநீரில் மூழ்கினால் 17 நாள்கள் தாக்குப் பிடிக்கும் நெற்பயிர்கள் கடல் நீரில் மூழ்கினால் உடனே அழுகிப் போகின்றன.


அதே புவிவெப்பமாதல்தான் மீன்வள நாடுகளின் கரையோரக் கண்ணீருக்கும் காரணமாகிறது. மீன்வளம் மிக்க 33 கடலோர நாடுகள் புவிவெப்பத்தால் தங்கள் பவளப்பாறைகளை இழந்துவிட்டன. அதனால் மீன்கள் இடம் மாறிவிட்டன அல்லது இறந்துவிட்டன
.
ஆப்பிரிக்காவின் மாளாவி - குனியா - உகாண்டா; ஆசியாவின் பங்களாதேஷ் - கம்போடியா - பாகிஸ்தான்; தென் அமெரிக்காவின் பெரு - கொலம்பியா ஆகிய நாடுகளின் கரையோர மீன் வளம் குறைந்துகொண்டே போகிறது.

பூமி - வானம் என்ற இரு வழிகளிலும் தான் தாக்கப்படுவது அறியாத விவசாயி, விளையும் என்ற நம்பிக்கைக்கும் விளையாது என்ற எதார்த்தத்திற்கும் மத்தியில் கலப்பை கட்டி உழுகிறான் அல்லது அழுகிறான். விலங்குகளைப்போல உழைக்கிறவனும் தன் விலங்குகளுக்கும் சேர்த்து உழைப்பவனும் அவனேதான்.

இந்தப் படைப்புக்காக நான் இயங்கிய காலம் நான் விரும்பிப் பாரம் சுமந்த காலம். உழைக்கும் மக்களுக்கான எழுத்து வேள்வி இது.

எங்கள் மக்களின் பொருளாதாரம் சிறிது; வாழ்வு பெரிது. இருத்தல் குறித்த மதிப்பாளுமை பெரிதினும் பெரிது. அவர்தம் வட்டார வழக்கில் இழையோடும் சங்கீதம் இனிதோ இனிது.
கருத்தமாயி - சிட்டம்மா தம்பதிகள் எல்லா சமூகங்களிலும் எல்லா ஊர்களிலும் இப்போதும் வாழ்கிறார்கள்.

சின்னப்பாண்டி வாழும் திரிசங்கு சொர்க்கத்தில்தான் எல்லா ஊர் இளைஞர்களும் இருக்கிறார்கள்.
நம் எல்லோருக்குள்ளும் முத்துமணியின் பல முகங்களுள் ஒரு முகம் இல்லாமலில்லை.
எமிலி - இஷிமுரா இருவரும் இந்தப் படைப்பின் அகிலத்தன்மை கருதி நான் படைத்துக்கொண்ட பாத்திரங்கள். அவர்தம் வரவு இந்தப் படைப்புக்கு மற்றுமொரு பரிமாணம்.


மற்றபடி அந்தக் கல்லும் முள்ளும் கரடும் குன்றும் - செடியும் கொடியும் மரமும் நதியும் - மகிழ்வும் துயரும் உயர்வும் இழிவும் - ஜனனம் மரணம் சம்பவம் பலவும் நான் உற்ற உணர்வு; பெற்ற வாழ்வு; கற்ற கல்வி; பட்ட காயம்.

எனவே இந்தப் படைப்பில் புண்ணில் ஒழுகும் ரத்தமும் கண்ணில் வழியும் கண்ணீரும் இரவல் உணர்ச்சியல்ல - பெரிதும் என்னுணர்ச்சி. என்னைப் பெருமைசெய்யும் சில படைப்புகளைப் போன்றதல்ல இது; மண்ணைப் பெருமை செய்யும் படைப்பு; மானுடத்துக்கான திடக்கண்ணீர்.

இந்தப் படைப்பின் உள்ளடக்கம் பேசப்பட வேண்டும். விவசாயத்தின் வீழ்ச்சி குறித்தும் மீட்சி குறித்தும் 


ஐ.நா.வில் உலக நாடுகள் விவாதிக்க வேண்டும்.


* விவசாயிகள் ஒரு தேசத்தின் முதுகுடிமக்களாய் அறிவிக்கப்பட வேண்டும்.


* அரசு ஊழியர்களுக்கிணையான ஊதியப் பாதுகாப்பை விவசாயிகள் பெற வேண்டும்.


* விற்கப்படக்கூடாது விளைநிலங்கள். விற்கப்பட்டால் அரசாங்கம் அவற்றை விலைக்கு வாங்கி 


வேளாண்மை தொடர வேண்டும்.


* உடல் மட்டுமே மூலதனம் என்ற கற்காலக் கலாசாரத்திலிருந்து விவசாயி மீட்டெடுக்கப்பட வேண்டும்.


* வரப்புகள் அழிக்கப்பட்ட கூட்டுப்பண்ணைகளில் பாட்டாளிகள் பங்குதாரர்களாக வேண்டும்.


* தண்ணீரும் மின்சாரமும் உபரியாய் உண்டாக்கப்பட வேண்டும்.


* நவீனத் தொழில்நுட்பத்திற்கு விவசாயம் தாவ வேண்டும்.


* விவசாயி கற்றவனாக வேண்டும் அல்லது கற்றவன் விவசாயியாக வேண்டும்.


* புவிவெப்பமாதலைக் குறைக்கும் பெரும் பணிக்கு வளர்ந்த நாடுகள் வலக்கரம் நீட்ட வேண்டும்
.
* பூமிப்பரப்பின் 33 விழுக்காடு வனப்பகுதிகளாய் வளர்க்கப்பட வேண்டும்.


* உலகெங்கும் உணவுகள் மாறும்; உண்ணுதல் மாறாது; எல்லோருக்கும் உணவு வேண்டும்.


* உலகெங்கும் இல்லங்கள் மாறும்; இருத்தல் மாறாது; எல்லோருக்கும் வீடுகள் வேண்டும்.


* உலகெங்கும் உடைகள் மாறும்; உடுத்தல் மாறாது; எல்லோருக்கும் ஆடைகள் வேண்டும்
.
இந்த மூன்றுக்கும் மூலமாய் விளங்கும் வேளாண்மையைக் காப்பது உலகக் கடமை. அந்த உலகக் 


கடமையின் தமிழ்ப் பங்குதான் இந்த "மூன்றாம் உலகப் போர்'


(இன்று வெளியிடப்படும்

 கவிப்பேரரசு  வைரமுத்துவின்

 "மூன்றாம் உலகப் போர்' 

நாவலின் முன்னுரை இது).

ஓர் சாமான்ய வலைப்பூக்காரனால் 

நல்லதகவல்களை  ஒருங்கிணைத்திட இயலும்.!

தகவல்களைத் தருவோருக்கு நன்றி சொல்ல இயலும்.!

ஆங்கிலேயர் காலத்தில் இந்திய விவசாயத்தை அழித்தொழிக்கத் திட்டம் தீட்டிய ராபர்ட் கிளைவ் 

சிந்தனைகளும்,  சுதந்திரத்திற்குப் பின்னரும் பன்னாட்டு பகாசுரக் கொள்ளையரால்

அதே நிலை இன்றும் தொடர்கதையாவதும், தீர்வுக்கு  ஐக்கிய நாடு சபையைத் துணக்கழைத்து

உலகத்தினை ஓரணியில் திரட்ட முழக்கமிடும் கவிப்பேரரசின் மூன்றாம் உலகப்போரின் முன்னுரையை

வலைப்பூ அன்பர்கள் பார்வைக்குக் கொண்டுவருவதும்

ஒருமைப்படுவதில் ஒரு மகிழ்ச்சி!

இதற்குத் துணை செய்த படைப்பாளிக்கும், அதனைஅ சுட்டிக்காட்டிய தினமணி ஆசிரியர்

உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 

0 comments:

Post a Comment

Kindly post a comment.