Friday, July 20, 2012

தெய்வீகத் தன்மை! ஐந்தருவி சித்தர் சுவாமி சங்கரானந்தர்


First Published : 20 Jul 2012 12:00:00 AM IST

""தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யனப் பெய்யும் மழை''
என்பது வள்ளுவர் வாக்கு. அந்தக் குறளுக்கு இலக்கியமாக எனது வாழ்வில் கண்ட அனுபவம் ஒன்றை இங்கு சொல்வது மிகப் பொருத்தமாக இருக்குமென்று எண்ணுகிறேன்
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஞானசித்தரோடு உத்திரப்பிரதேசத்தில் பல இடங்களுக்கும் யாத்திரை செய்த பொழுது மார்வாடி தேசம் என்னும் இடத்திற்கும் செல்ல நேரிட்டது. அங்கு ஒரு கிராமத்தின் வழியாகச் சென்றோம். வெயிலின் கொடுமை மிகத் தீவிரமாக இருந்தது. நண்பகல் நேரம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அக்கிராமத்திலுள்ள பெண்கள் குடங்களையும் ஏனைய பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு வெகு தூரத்திலிருந்து தண்ணீர் கொண்டு வருவதும் போவதுமாக இருந்தனர். பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் மழையைக் கண்டிருக்கவில்லை என்பதையும், தண்ணீர் கிடைக்காத கொடுமையால் அக்கிராமத்து மக்கள் அவதிப்படுவதையும் பார்த்தவுடனேயே யாராலும் புரிந்துகொள்ள முடியும்.
இந்தச்சூழ்நிலையில்தான் அந்த ஞான சித்தருடன் அவ்வூர் வழியாகச் செல்ல நேர்ந்தது. எங்களைக் கண்டதும் தண்ணீர் கொண்டு வருவதற்காக சென்றுகொண்டிருந்த பெண்கள் அனைவரும் எங்களைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். மேலே எங்களை செல்லவிடாமல் வழிமறித்த பெண்கள் அனைவரும் பின்வருமாறு தங்கள் மொழியில் ஞானசித்தரை நோக்கிக் கூறினர்:
""சுவாமிஜி! தங்களைப் போன்ற பெரியவரையும், மகான்களையும் சதா உபசரித்தும், பக்தி விசுவாசத்தோடு பணி செய்தும் வருகின்ற எங்களை இவ்வளவு தூரம் சோதனைக்கு உள்ளாக்கலாமா? 100 அடி ஆழத்திற்கும் மேற்பட்ட கிணறுகளில்கூட தண்ணீர் கிடைப்பதில்லை. பல மைல்கள் அலைந்து திரிந்தும் சிறிதளவே நீரைப் பெறுகிறோம். கருணை கொண்டு எங்கள் துன்பத்தை அகற்றக் கூடாதா?'' என்று மிகவும் வருந்தி அழுது புலம்பினர்.
அவர்களது சோகம் கலந்த வார்த்தைகளும், இரங்குதற்குரிய நிலையும் பக்தியுணர்வோடு வேண்டிக் கொண்ட செய்கையும் அவர்கள் மீது ஞான சித்தருக்கு பரிவைத் தோற்றுவித்தது. உள்ளுணர்வோடு கூடிய அப்பெண்களின் வேண்டுதலைக் கேட்ட அந்த ஞானசித்தர் அவர்களின் துயரத்தை அகற்ற எண்ணி நடுப்பகல் வெயிலையும் பொருட்படுத்தாது அங்கேயே சூடேறிக் கொதிக்கும் மணலின் மீது அமர்ந்து சமாதியில் ஆழ்ந்துவிட்டார்.
அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நான் அப்பெண்களை நோக்கி அவர்கள் வைத்திருக்கும் பாத்திரங்களிலுள்ள சிறிதளவு நீரையும் சமாதியில் ஆழ்ந்திருந்த மகானின் தலை மீது ஊற்றச் சொன்னேன். அவர்களும் அப்படியே செய்தனர். அரை மணி நேரத்திற்குள் கொளுத்தும் வெயில் சென்ற இடமே தெரியவில்லை. கருமேகங்கள் எங்கிருந்தோ ஒன்று திரண்டு கூடி அவர் மீது நிழலிட்டன. உடனே கடும் மழை பெய்தது
அந்தக் கிராமத்தின் கிணறுகள், குளங்கள் எல்லாம் நிரம்பி வழிந்தன. வீடுகளின் மண் சுவர்கள்கூட நனைந்து, ஊறிக் கீழே விழும் நிலைக்கு வந்துவிட்டன. கூடியிருந்த ஊர்மக்கள் எல்லோரும் தங்கள் துயரம் தீர்ந்த மகிழ்ச்சியால் ஆனந்த கண்ணீர் சொரிய, ""மழை போதும் போதும்'' எனக் கூறினர். அவர்களின் கூக்குரல்கூடக் காதில் விழாத வகையில் ஆழ்ந்த சமாதியில் லயித்திருந்த அம்மகானின் செவிகளில் ஊதி, அவரை சுய நினைவுக்குக் கொண்டு வர எனக்கு அரை மணி நேரமாயிற்று. துயரம் தீர்ந்த மக்களின் பக்தி விசுவாசமும், உபசாரமும் எங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டன. அந்த அன்புத் தொல்லையைப் பொறுக்க இயலாது யாரும் அறியாமல் இரவிலேயே அவ்வூரினின்றும் வெளியேறினோம் 
இது எனது சொந்த வாழ்வில் கண்ட, அனுபவித்த மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. ஐம்புலன்களையும் அடக்கி, அகண்ட சக்தியில் ஒன்றும்போது தெய்வீகத் தன்மை தானே வந்து அமைகிறது. அத்தன்மை அமையப் பெற்றவர்களுக்கு எல்லாவித ஆற்றலும் இயல்பாகி விடுகிறது. இதுவே தெய்வீகமான அக்குறள் கூறும் கருத்து என்பதில் ஐயம் உண்டோ?
 நன்றி :தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.