Tuesday, June 26, 2012

சிங்கத் தமிழர் சிவஞானம் -முனைவர் கா.செல்லப்பன்


மீசை நரைத்தபோதும் தமிழின்பால் ஆசை நரைக்காமல் 

சிங்கக்குரலிலே சிலப்பதிகாரச் செல்வத்தையும், பக்தி 

இலக்கியங்களையும் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் 

எல்லாம் அள்ளித் தெளித்த வள்ளல். 

”உரிமைக்கு வேங்கடம்; உறவுக்கு இமயம்” 

என்று அகன்ற 
இந்தியப் பார்வையோடு தமிழரின் வட எல்லைக்காகவும் 

உரிமைகளுக்காகவும் தளராது போரிட்ட வீரத் தமிழன் 
ம.பொ. சிவஞானத்தை நன்றியுள்ள தமிழகம் என்றும் 
மறக்க முடியாது.

”ம.பொ சி” என்ற மூன்றெழுத்துக்களால் தமிழர்களால் அடையாளப்படுத்தப்பட்ட, இவர் எளிமையாய்த் தொடங்கி,எளிமையாய் வாழ்ந்து, காந்தியம் மற்றும் தமிழியத்தின் வலிமையால் உயர்ந்தார்.

எழுத்துக்களைச் சரியாகப் படித்துத் தவறாகப் புரிந்து கொள்பவர்கள் பலர். ஆனால், தலைகீழாகப் படித்துச் சரியாகப் புரிந்து கொண்ட சிலருள் ஒருவர், ம.பொ சி.

“எழுத்தறிவற்ற ஏழைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, எழுத்தெண்ணிக் கோக்கும் எளிய அச்சுத் தொழிலாளியாக வளர்ந்த என்னை, அரசியல்வாதியாக மாற்றிய பெருமை காந்தி அடிகளுக்கே உரிமை” என்றும்,

’இந்திய விடுதலைப் போரில் நான் ஈடுபட்டு இருக்காவிட்டால், நான் யார்? எனக்கென ஒரு சரித்திரமேது” என்றும்,” எனது போராட்டம் “ என்ற அவரது சுயசரிதையில் அவரே குறிப்பிடுகின்றார். சாதாரண மனிதனைச் சரித்திர புருஷனாக்கிய பெருமையைக் காந்தி அடிகளுக்குத் தருகிறார்.

ஆனால் இந்த காந்திய விடுதலைப் பற்று இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகிய துறைகளிலும் விரிந்ததோடு, அது தமிழ் மொழி, நெறியோடு இணந்தே வளர்ந்தது. காந்தியத் தத்துவத்தை ஐயந்திரிபற அறிவிக்கும் சரித்திர நூல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆயினும் வள்ளுவர் தந்த ”திருக்குறள்” எனக்கு வேதம். அதற்கு காந்தியடிகள் எழுதிய ”சத்திய சோதனை வியாக்கியானம் என்று அவர் கூறுகின்றார்.

சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற அவர், பின் தமிழக எல்லைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அதனால் அவர் காங்கிரசிலிருந்து விலக நேர்ந்தாலும், திருத்தணியைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தர முடிந்தது.

சென்னையை ஆந்திராவிற்குத் தாரை வார்க்கும் முயற்சியும் தடுக்கப்பட்டது. இப்பணியில் இராஜாஜியையும் ஈடுபட வைத்தார்.தென்னெல்லைப் போராட்டங்களிலும் ம.பொ.சி. பங்கு பெற்றார்.

தமிழ்த் தளத்திலிருந்து காந்தியத்தை உணர்ந்ததுபோல், காந்தியத்தையும் மார்க்ஸியத்தையும் இணைக்க முயன்றார்.’காந்தியமும் சோஷலிசமும்” என்ற நூலை எழுதினார்.

காங்கிரசிலிருந்து விலகியபின், ஆவடியில் காங்கிரஸ் சோஷலிச பாணியை ஏற்பதாகக் கூறியபோது, தத்துவிகளை விலக்கிவிட்டு, தத்துவத்தைத் தனதாக்கிக் கொண்டதாகக் கூறுகின்றார்.

காங்கிரசிலிருந்து விலகியபின் தமிழின் பெருமைக்காகவும் தமிழர்களின் உரிமைக்காகவும் போராடத் தமிழரசுக் கழகத்தை நிறுவினார்.1967-ல் அண்ணாவுடன் இணந்து சட்டசபைத் தேர்தலில் தியாகராயநகரில் வெற்றி பெற்றார்.

பிறகு, 1972-ல் ஆளுநரால் மேலவைக்கு நியமிக்கப்பட்டார். கலைஞரின் உதவியோடு மேலவையின் துணைத் தலைவரானார்.

பின்னர் எம்.ஜி.ஆரால் மேலவைத் தலைவராக்கப்பட்டார். அவருக்கு மதிப்புமிகு ஆலோசகராகவும் செயல்பட்டார். மேலவை கலைக்கப்பட்டது. மெலவைத் தலைவருக்குள்ள எல்லாச் சிறப்புக்களுடனும், தமிழ் வளர்ச்சிக்கான ஒரு நபர் உயர் மட்டக் குழுவாக எம்.ஜி.ஆரால் நியமிக்கப் பெற்று தமிழ் இலக்கிய, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றினார்.

விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கு சரியாக வரலாற்றிலே இடம்பெறாத குறையைப் போக்க “விடுதலைப் போரில் தமிழகம்”, “விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு” என்ற இரு அரிய பெரிய நூல்களையும் எழுதினார். ( அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் முனைவர்.கா.செல்லப்பன். இந்தக் கட்டுரையை எழுதியவரும் அவரே. இன்று ம.பொ.சி.யின் பிறந்தநாள். பணி நிறைவு பெற்ற ஆங்கிலப் பேராசிரியரான முனைவர்.கா.செல்லப்பன் ஜனசக்தி நாளிதழுக்காக எழுதிய கட்டுரையே இந்த வலைப்பூவில் பதிவு செய்யப் படுகின்றது. )

முன்னதில் கட்டபொம்மன் காலத்திலிருந்தே இந்திய விடுதலைப்போர் துவங்கியதாகத் தெளிவாகக் கூறுகின்றார், ம.பொ.சி. பின்னதில், விடுதலைப் போரால் தமிழ் புதிய ஆற்றல் பெற்றதையும், தமிழால் விடுதலைப் போர் புனிதம் பெறுவதாகவும் கூறியுள்ளார்.இந்த இரு நூல்களும் அப்போது அரசு உடைமையாக்கப்பட்டு, பின் நாட்டுடமையாக்கப்பட்டன.

ஒரு நாடு விடுதலை பெறுவது அதன் முழுமையான அகவிழிப்பே. அது அதன் மொழிகளின் வழியாகவே நடைபெறுகின்றது. இதனால்தான் ம,பொ.சி. இந்திய, தமிழக எழுச்சியை, தமிழ் மொழி வளர்ச்சியாகவும், இலக்கிய மறுமலர்ச்சியாகவும் கண்டார்.

தமிழ் மொழிக் கல்வியையும், தமிழ்வழிக் கல்வியையும் தொடர்ந்து வலியுறுத்தினார். ”ஹிந்தியை வரவிடாமல் தடுக்க அண்ணாவும் நானும் பின்வாசலில் காத்திருந்தோம். ஆனால், ஆங்கிலம் முன்வாசல் வழியாக உள்ளே வந்துவிட்டது” எனக் கூறுவார், ம.பொ.சி. 

தமிழர் என்ற இன உணர்ச்சி, இந்திய தேசிய உணர்ச்சி, உலக ஒருமைப்பாடு ஆகியவை முரண்பட்டவைகள் அல்ல என்பதையும், இவைகள் இணந்து தமிழ் இலக்கியங்களில் வளர்ந்திருப்பதையும், “இலக்கியங்களில் இன உணர்ச்சி” என்ற ஆய்வு நூலில் சிறப்பாகக் காட்டியுள்ளார். சிலப்பதிகாரம் இதன் முதல் முழுநிலை என்றும், அது பத்தினிக் காப்பியம் மட்டுமன்று. அவள் வழி சேர- சோழ-பாண்டியப் பகுப்பையும், சாதி-சமயங்களையும் கடந்த தமிழக, தமிழின் ஒருமைப்பாட்டக் காட்டும் தமிழர் தேசியக் காப்பியம் என்றும் நிறுவுகின்றார். 

மொழிவழித் தமிழ் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டையும், நில வழி இந்திய தேசிய ஒருமைப்பாட்டையும் சிலப்பதிகாரம் காட்டுவதாகக் கூறுகின்றார். பின்னர் அது முத்தொள்ளாயிரத்தில் அரசியல்வழி ஒருமைப்பாடாகவும், பெரிய புராணத்தில் சமயவழி மனிதகுல ஒருமைப்பாடாகவும், பாரதியிலே இந்திய தேசிய ஒருமைப்பாடாகவும் மலர்வதாகக் காட்டுகின்றார்.

இதையொட்டி, வள்ளலாரின் சமரச சன்மார்க்க நெறியை, ”வள்ளலார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாடு” என்ற நூலில் விளக்கியுள்ளார்.இந்நூலுக்கு இந்திய அரசின் சாஹித்ய அகடமி விருது கிடைத்ததில் வியப்பில்லை. இதுவன்றி பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.

பல்கலைக் கழகங்களில் பயிலாத ம பொ சி யைப் பல்கலைக் கழகங்கள் பலவும் போட்டி போட்டுப் பல வகைகளில் பெருமைப்படுத்தின. பல்கலைக் கழகங்கள், அதிகமாகப் போனால், நூலறிவைத்தான் தருகின்றன. ஆனால், ம பொ சி போன்றவர்கள் , வாழ்வில் வாழ்ந்து பெற்ற ஞானம், அந்த ஞானம் கரைபுரண்டு வந்து, கதவுகளைத் தட்டும்போது, பல்கலைகள் தங்கள் கதவுகளைத் திறந்து அதற்கு வழிவிட்டு வணக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

அனைத்துக்கும் மேலாக, அவரது உணர்ச்சி மிக்க உள்ளத்தின் உள்ளிருந்து வரும் உரைகளைக் குறிப்பிட வேண்டும்.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், “ சமயம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை, தமிழறியா அறிஞர்களையும் கவர்ந்தது. ஏனென்றால், உண்மை ஞானம் மொழி கடந்தது. அது உணர்ச்சி என்னும் உலகப் பொது மொழி. 

அந்த மொழி தாய்மொழி வழியாகத் தழைத்தாலும், ஒரு நிலையில் வார்த்தைகளில்லாமல் அனைவரையும் இணைக்கும் இதய மொழியாகி விடுகின்றது. 

அந்த இதய மொழி, நாவில் நடமாடும்போது உலகப் பொது மொழியாகிவிடுகின்றது. 

இதைத்தானே ”உள்ளத்தில் உண்மை உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் ” என்று மகாகவி பாரதி சொன்னார்?

அத்தகைய உள்ளொளியால், தமிழின், இந்திய, உலக ஒருமைப்பாட்டுக்கு உழைத்த ம.பொ.சி.யை நினைந்து நாமும் தமிழர்களாய் நிமிர்ந்து நிற்போம்.

நன்றிக்குரியோர் :முனைவர்.கா.செல்லப்பன், (9380532522)

ஜனசக்தி நாளிதழ் ,26-06-2012 (044-22502447 / 044-22502448)

இன்று ம.பொ.சி. பிறந்தநாள்


என்றும் தமிழாய் வாழும் ம.பொ.சி.

ம.பொ.சி. மறைந்தபோது, சென்னை, எழும்பூர், எத்திராஜ் சாலையில் 

உள்ள, அஞ்சல் தணிக்கை வளாகத்தில், 

என்றும் தமிழாய் வாழும் ம.பொ.சி

என்னும் தலைப்பில், எழுத்தாளர், சு.சமுத்திரம்,தமிழக ஆசிரியர் 

யுனெஸ்கோ பொறுப்பாளர், இரா. முத்துக்குமாரசாமி, கலைஞர், 

எம்.ஜி.ஆர். ,ஜெயலலிதா, அப்துல்கலாம் ஆகியோரிடம் பரிசுகள் 

பெற்ற, முனைவர், இ.கோமதிநாயகம் ( பெற்ற பரிசுகள் வெவ்வேறு 

காலக் கட்டத்தில்) ஆகியோரைக்கொண்டு

அஞ்சலிக் கூட்டம் நடத்தியது நீங்காநினைவாக

நெஞ்சில் நிழலாடுகின்றது.1 comments:

  1. நல்ல தலைப்பில் ஒரு செய்திக்கட்டுரையைக் கண்டேன். கட்டுரையை எழுதிவெளியிட்ட அன்பர்களுக்கும், அதனை உலகம்முழுவதும் காணவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தனது வலைப்பூவில் வெளியிட்ட திரு சேதுபாலா அவர்களுக்கும் நன்றி

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்.

    ReplyDelete

Kindly post a comment.