Monday, June 11, 2012

இலங்கையில் தமிழர்களின் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கபளீகரம்!

இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகத் திகழ்பவர், சுரேஷ் பிரேமச் சந்திரன், வெளிநாட்டு வானொலியில் நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியிலிருந்து கிடைத்த தகவல்களை இன்றைய நாளிதழில் ஜனசக்தி தொகுத்தளித்துள்ளது.

இலங்கைத் தமிழர்களின் பிரதேசங்களில் பரவலான இராணுவக் கட்டமைப்புக்களை இலங்கை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இதனைக் காரணமாகக் கொண்டு அப்பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அமைத்து வருகின்றது.

இலங்கையை சிங்கள பவுத்த நாடாக மாற்ற வேண்டும் என்று நினைத்தவர்கள், அன்று மறைமுகமாகச் செய்தவர்கள், தற்பொழுது நேரடியாகச் செய்து வருகின்றனர்.யுத்தத்தில் வென்றவர்கள் எதனையும் செய்யலாம் என்ற மன நிலையில் இது தொடர்ந்து வருகின்றது.

இராணுவமயமாக்கலை முதலில் மேற்கொண்ட இலங்கை அரசாங்கம், அதனைத் தொடர்ந்து சிங்கள மயமாக்கலையும் மேற்கொள்ளத் துவங்கியுள்ளது.

வட மாகாணத்தின் பல பகுதிகளில் இராணுவத் தேவைகளுக்காகவும், இராணுவக் குடியிருப்புக்களுக்காகவும் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.

முல்லைத் தீவில் திருமுறிகண்டி என்ற இடத்தில் 4 ஆயிரம் ஏக்கர் பகுதியில் இராணுவக் குடியிருப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சியின் மேற்பகுதியில் இரணைமடுப் பகுதியில் விமானதளம் அமைப்பதற்கு, மன்னார் மாவட்ட முல்ளிக்குளம் என்ற பகுதியில் உள்ள மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அங்கே பெருமளவிலான கடற் படைத் தளம் அமைக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் 23 கிராம சேவகர்கள் விடுவிக்கப்படாமல், இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஆயிரக்கணக்கான வீடுகள் சிங்கள இராணுவத்தால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு என சகல பகுதிகளிலும் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தின் மேற்கண்ட செயல்பாடுகள், இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தன்மையை மாற்றக் கூடிய வகையில், மாற்றவேண்டுமென்ற நோக்கத்திலேயே அமைகின்றன.

சிங்கள கடற் தொழிலாளர்கள், விவசாயிகள் தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் குடியேற்றப் படுகின்றனர் என்றும், சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.