Wednesday, November 23, 2011

தமிழ் மக்களை நான் மதிக்கிறேன் : டேம் 999 இயக்குநர் அறிக்கை!



மலையாள இயக்குநர் சோஹன் ராய் இயக்கி இருக்கும் டேம் 999 படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தில் மு‌ல்லைப் பெரியாறு அணை சம்பத்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்துப் புதிய அணையைக் கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும் என்று டேம் 999 திரைப்படத்தின் இயக்குனர் சோஹன் ராய் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தான், அப்படிக் கூறவில்லை என்றும், தமிழ் மக்களையும், அவர்களின் உணர்வுகளையும் மிகவும் மதிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். டேம் 999 திரைப்படம் ஒரு உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

1975ம் ஆண்டு சீனாவில் பான்கியோ என்ற அணை உடைந்த போது சுமார் 2.5 லட்சம் மக்கள் பரிதாபமாக இறந்தனர். டேம் 999 திரைப்படம் முழுக்க முழுக்க இந்த சோக நிகழ்ச்சியை தழுவியே எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் எந்த ஒரு அணையையும் சுற்றி இந்தக் கதை எடுக்கப்படவில்லை.

(முல்லைப் பெரியாறு அணை இருப்பது கேரளாவில்தான். நிர்வாகம்தான் தமிழ்நாடு )

தமிழக மக்களின் கலாச்சாரம், உணர்வுகள் ஆகியனவற்றை நான் பெரிதும் மதிக்கிறேன். எனது திரைப்படத்தில் தமிழக மக்களையோ அல்லது தமிழகத்தையோ இழிவு படுத்தும் வகையில் காட்சியோ,வசனமோ இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன். எனவே என்னை புரிந்து கொண்டு படத்திற்கு நியாயமான ஆதரவு தாருங்கள். நல்லெண்ண அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர்

தனிப்பட்ட முறையில் நான் முல்லைப்பெரியாறு அணையின் உயரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் தமிழக மக்களுக்கு கூடுதல் நீராதாரம் கிடைக்கப்பெற்று அவர்கள் வளமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

என்னையும், என் படத்தின் கதையையும் நம்பாவிட்டால், படத்தினை எதிர்க்கும் அரசியலமைப்புகளின் தலைவர்களுக்கு திரைப்படத்தினை தனிப்பட்ட முறையில் திரையிட்டு காட்ட தயாராக இருக்கிறேன். மேலும் அவர்கள் ஏதாவது வசனம் அல்லது காட்சியை நீக்க வேண்டும் என்று நினைத்தால், அதையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.