Thursday, September 22, 2011

சொர்க்கத்தில் ஒரு விருந்து
அமெரிக்காவின் உல்லாச பூமி ஹவாய். பசிபிக் பெருங்கடலின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கம். "பெரிய தீவு' என்று அமெரிக்கர்களால் செல்லமாக அழைக்கப்படம் இடம். கடற்கரைகளுக்கு பெயர் பெற்ற சுற்றுலாத் தலம். இதன் தலைநகரம் ஹானலூலு. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பிறந்த இடம். இத்தனை சிறப்பு மிக்க இடம் என்பதால்தான்... வருடந்தோறும் இந்த தீவை பார்க்க, உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கில் உல்லாச பயணிகள் குவிகிறார்கள்.


வைகிகி கடற்கரை... கட்டிப்பிடித்து, உதடுகளோடு உதடுகள் உரசியபடி நிற்கும் இளம் காதலர்கள். நீச்சல் உடைகளோடு உலவும் காளைகள், கன்னியர்கள். சூரியக் குளியல் எடுக்கும் அழகிகள் என்று இளமை ஊஞ்சலாடும் இடம்.

ஹானலூலுவன் இந்த கடற்கரைக்குள் நுழையும்போது, கைகளை நீட்டியபடி நிற்கும் ஒரு ஆணின் சிலை நம் கவனத்தை கவர்கிறது. நீட்டிய கைகளில் பூச்சரங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இவர் ஒரு ஹவாயன் நீச்சல் வீரர். பெயர் டியூக் கஹனமோகு. ஐந்து முறை நீச்சலுக்கான ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவர். அதுமட்டுமல்ல! ஹாவாயின் பாரம்பரியமிக்க "நீர்ச்சறுக்கு' விளையாட்டை உலக புகழ்மிக்க விளையாட்டாக ஆக்கியவர். உலக அரங்கில் ஹவாயின் பெருமையை நிலைநாட்டியவரின் நினைவை போற்றும் வகையில்... இந்த சிலையை நிறுவியிருக்கிறார்கள்.


இங்கே, பலவிதமான தண்ணீர் விளையாட்டுக்கள் உண்டு. பசிபிக் பெருங்கடலின் மேல் நடக்கும் இந்த விளையாட்டுக்கள் ஒரு புறம் என்றால்... கடலின் உள்ளே 30 மீட்டல் அடியில் நீர்மூழ்கி கப்பல்களில் பயணிக்கும் சுக அனுபவம் அலாதி! பேருந்து மூலம், நம்மை நீர்மூழ்கி கப்பல் வரும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள். ஒரு பெரிய வெள்ளை திமிங்கிலம் மேல் எழும்பும் நீர்மூழ்கிக் கப்பல். உள்ளே செல்வதற்கு வட்டவடிவமான ஒரு குறுகிய துவாரம். அதன் வழியாக நுழைந்து, அங்கே உள்ள படிக்கட்டுகள் மூலம் உள்ளிறங்கி செல்ல வேண்டும்.


குளிரூட்டப்பட்ட நீண்ட அறையில், ஒவ்வொரு இருக்கையின் பக்கவாட்டிலும் கண்ணாடி ஜன்னங்கள், அனைவரும் இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களில் பயணம் துவங்கும். அப்பப்பா...! கடலுக்கு அடியில் பயணம்... பார்வையில் சிக்கும் பல வகை மீன்கள். நீரில் மூழ்கிப்போன கப்பல், விமானத்தின் பாகங்கள் என நாற்பத்தைந்து நிமிடங்கள் நீளும் பயணம் கொடுக்கும் அனுபவத்தை உயிர் உள்ளவரை மறக்கமுடியாது.


ஹவாயில்... லிமோசின் கார்கள் மிகுந்து காணப்படும். மினி ரயில் பெட்டிப்போல் நீண்டு கிடக்கும் இந்த கார்களின் உள்ளே இருக்கும் வசதிகள், நம்மை அசர வைக்கும். பழரசங்களை சுமந்து நிற்கு நவீன தட்டுகள், சொகுசு இருக்கைகள், தொலைக்காட்சி, தொலைபேசி என அனைத்தும் நம்மதியை மயங்க வைக்கும். ஒரு பொத்தானை அழுத்தியவுடன் ஓட்டுனருக்கும். நமக்குமான இடைவெளியில் ஒரு கண்ணாடி திரை எழும்பி மறைக்கும். நாம் போக வேண்டிய இடங்களை பற்றியும், வாகனத்தை நிறுத்த வேண்டிய இடங்கள் பற்றியும் தொலைபேசி மூலம் ஓட்டுனரிடம் சொன்னாலே போதுமானது! சுருக்கமாக சொல்வதென்றால் நகரும் சொர்க்கம் இந்த லிமோசின்.


லுவா! இது இல்லாமல் ஹவாயின் பயணம் முழுமை பெறாது. ஹவாய் மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்படும் விருந்தின் பெயர்தான் லுவா. இந்த லுவா விருந்து பற்றிய செய்தி சுவாரஸ்யமானது. ஆம்! லுவா என்பது டாரோ என்ற செடியின் இளம் இலைகளின் பெயராம்! இந்த இலைகளில் உணவுப் பொருட்களை சுற்றி... இமு என்று அழைக்கப்படும் அடுப்புகளில் (பூமியில் குழி தோண்டி உண்டாக்கப்பட்ட) வைத்து சமைப்பார்கள்.

குழந்தைப்பிறப்பு, தொழிலில் வெற்றி, திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளில் இந்த லுவா விருந்த கட்டாயமாக இருக்கும். குடும்பங்கள் ஒன்று சேர்ந்து நடத்திய இந்த விருந்து, இப்பொழுது உல்லாசப் பயணிகளுக்காக நடத்தப்படுகிறது.


ஹவாய் கடற்கரைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட மேடைகளில்... இங்குள்ள மக்களின் நாட்டுப்புற நடனமான ஹியூமா அரங்கேறும். இடுப்பில் எலும்புகள் இல்லையோ! என்ற சந்தேகம் நமக்கு தோன்றும்படி, பாடல்களுக்கு ஏற்ப இடுப்பை ஆட்டுவார்கள். ஆண்களோடு, பெண்கள் சேர்ந்து ஆடும் இந்த ஆட்டத்தில் நம்மையும் பங்கு பெற செய்கிறார்கள். மேஜிக் ஷோ மற்றும் நெருப்பு வளையங்கள் கொண்டு செய்யப்படும் சாகசங்கள் என நம்மை குஷிபடுத்தும் விஷயங்களுக்கு பிறகு தொடங்கும் லுவா விருந்து. இதில், பல வகையான ஹவாய் உணவுகளோடு பழங்களும் போட்டி போடும். இந்த விருந்தை முழுவதுமாக சுவைத்து மகிழ ஒரு வயிறு போதாது! குறைந்தது நான்கு வயிறுகளாவது வேண்டும். பொது / சுற்றுலா

விருந்து முடிஞ்சிடுச்சு! ஹவாய் இவ்வளவுதானா? என எண்ணிவிடாதீர்கள். மிருகக்காட்சி சாலை, பொட்டானிகல் கார்டன், எரிமலைகளால் உண்டான பல நூதன காட்சிகள், படகு சவாரிகள் என ஹவாயில் அனுபவிக்க விசயங்கள் ஏராளம். ஆம்... ஹவாய் நிச்சயம் நம்மை "ஹா...!' என்று வாய் பிளக்க வைக்கும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.