தூக்குத் தண்டனை ரத்தமாகுமா?
இராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும், பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகிய மூவருக்கும், இருபது வருடகால சிறைவாசத்தின் பின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டு, நிறைவேற்றலுக்கான திகதி குறிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தண்டணையில் இருந்து அவர்களைக் காப்பாற்றக் கூடிய வழிகளும், காலமும், மிகமிகச் சொற்பமாகவே இருப்பதாகத் தெரிகிறது. எதிர்நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்க்கும் வகையிலாகவே தண்டணை நிறைவேற்றத்துக்கான தேதி, சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அறியவருகிறது.
இந்தத் தண்டனையை நிறுத்தக் கூடியவர்களாக அல்லது இடைநிறுத்தக் கூடியவர்களாக இப்போதைக்கு இருப்பவர்கள் மூன்று பெண்மணிகள். ஒருவர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், மற்றவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மூன்றாமவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்த மூவருமே இதுவரைக்கும், இந்தத் தண்டணை தொடர்பில் மௌனம் அல்லது எதிர்வினை என்ற வகையிலேயே செயற்படுகின்றார்கள்.
இவர்களில் முதலாமவரான குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இம் மூவரின் கருணை மனுவினை நிராகரித்திருப்பதனாலேயே இந்த மரணதண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆகையால் அவர் இது விடயத்தில் இனி எதுவும் செய்வார் என எதிர்பார்க்க முடியாது.
இரண்டாமவரான சோனியா காந்தியும் இந்த மூவருடன் இணைந்து வழங்கப்பட்ட மரணதண்டனையிலிருந்து நளினிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றியதோடு தனது பங்கினைச் சுருக்கிக் கொண்டார்.
இப்போது இதிலிருந்து இவர்களை விடுதலை செய்யக் கூடியவராக தமிழக முதல்வர் ஜெயலலிதா மட்டுமே இருக்கின்றார். அவரும் இது விடயத்தில் தொடர் மௌனம் காட்டி வருகின்றார். தமிழக சட்டசபையில் இது தொடர்பிலான விவாதங்கள் முன்னெடுக்கப்படுவற்கான வாய்ப்புக்களும் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்திய மத்திய அரசியலில் ஆர்வம் கொண்டுள்ள ஜெயலலிதா, இந்த விவகாரத்தில் தான் தலையிடுவது, வட இந்திய அரசியற்கட்சிகளிடத்தில் தனக்கான செல்வாக்கை ஆதரவைக் குறைத்துவிடும் என்று கருதுவதனாலேயே இது விடயத்தில் மௌனம் சாதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மற்றொருபுறம் ஜெயலலிதாவுக்கு அரசியற்களத்தில் ஆலோசனைகள் தரக் கூடியவர்களான சோ, சுப்பிரமணியசுவாமி, முதலானோர் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் கொண்டிருக்கும் கருத்தாக்கம் வேறானது. ஆகவே அவர்களது கருத்துக்கு மாறாக எதையும் செய்வதற்கு அவர் முயற்சிக்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பேரறிவாளனின் தாயார் தமிழக முதல்வரிடம் தனது மகனைத் தூக்கிலிருந்து காப்பாற்றுமாறு உருக்கமாகக் கோரியுள்ளார். ஜெயலலிதா மற்றவர்களைப் போன்று அலட்டிக் கொள்பவர் அல்ல. நிச்சயம் இந்தத் தண்டனைகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவார் என அதிமுகவினர் பலர் நம்பிக்கை தெரிசிக்கின்றார்கள். ஆனாலும் இது ஒரு கட்சி விசுவாச நம்பிக்கையாகவே இருக்கிறது என்ற வகையில் இதனை நம்பியிருப்பது கால விரயமானது என்றும் சொல்லப்படுகின்றது.
அதிகார வகையில் இத் தண்டனையைத் தவிர்க்கக் கூடியவர்கள் நிலை இவ்வாறாக இருக்கையில், இவை தவிர்ந்து, இப்பிரச்சனையில் செயற்படக் கூடிய வழிகள் இரண்டு மட்டுமே உண்டு. ஒன்று சட்டரீதியான எதிர் நடவடிக்கைகள். மற்றையது இதற்கெதிரான மக்கள் போராட்டங்கள். சட்டரீதியாக இதை எதிர் கொள்வதற்கான முயற்சிகள், மதிமுக செயலர் வை.கோ, மற்றும் நாம் தமிழர் சீமான் ஆகியோரால் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் போராட்ட நடவடிக்கை என்றவகையில் பல்வேறு அமைப்புக்கள் செயற்படத் தொடங்கியுள்ள போதும், அவை ஒன்றிணைந்த போராட்டங்களாகவே நடந்து வருவதாகவும், இவற்றுள் சில தலைவர்களின் ”இகோக்களால்” ஒருங்கமைக்கப்பட முடியாதவையாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில மூத்த தலைவர்களும், முன்னணித் தலைவர்களும், இந்த இடங்களிலும் தங்களை முன்னிறுத்த விரும்புவதால் ஒன்றிணைந்த போராட்டங்களை முன்னெடுக்க முடியாதிருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது ஒன்று சேர முடியாத தமிழகத் தலைவர்கள், ஈழத்தமிழருக்காக முத்துக்குமரன் தீக்குளித்த போது ஒன்று சேர்ந்து போராடி வெற்றி கொள்ள முடியாது போன தமிழகத் தலைவர்கள் முன் மறுபடியும் காலம் மறுபடியும் ஒரு வரலாற்றுக் கடமையை விட்டுள்ளது. கடந்து சென்ற காலங்களில் ஒன்றிணைவு என்பது இல்லாது போனதால் இழந்துபோனவற்றை மனதில் நிறுத்தி ஒன்றிணைந்து போராடுவார்களா..?
அல்லது இன்னமும்..? தமிழக மக்களும், உலகெங்கும் நிறைந்திருக்கும் புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தலைவர்களின் போலி முகங்களைக் கண்டறிய இது மற்றுமொரு சந்தர்ப்பமாக அமைகிறது. இதில் இணைந்து போராடத் தயங்கும் தலைவர்களை நிராகரிக்கத் தமிழ்மக்கள் தயங்கக் கூடாது என, இப் போராட்டங்களில் ஆர்வமுடன் செயற்படும் ஒரு இளைஞர் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இவைகளுக்கு அப்பால், புலம்பெயர் தமிழர்கள் தங்கள் நாடுகளில் உள்ள இந்தியத் தூதுவராலயங்கள் மனித உரிமை அமைப்புக்கள், இந்திய ஜனாதிபதி, பிரதமர், அலுவலகங்களுக்குத் தொடர்ச்சியாக கடிதங்கள் மூலம் தண்டனையை இடைநிறுத்தக் கோர முடியும். தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதனால், இந்தத் தண்டனையை நீக்கக் காலம் கடமைப்பாடு, ஈழத் தமிழர்களுக்கும் உரித்தானது. ஆதலால் அவர்களும் இதில் இணைந்து விரைந்து செயற்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில். விஜயகாந்த் கல்யாண மண்டபம் எதிரில், ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) ATM அருகில் உள்ள கட்டத்தில், மூன்று பெண் வழக்கறிஞர்கள் கயல்விழி, வடிவாம்பல், சுஜாதா ஆகியோர் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. இப் போராட்டத்தில் கலந்து இந்தத் தீர்ப்புக்கு எதிரான உங்கள் எதிர்ப்பினை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
பேரறறிவாளனின் தாயார் ஊடகவியலாளர்களைச் சந்திக்கையில், எனது மகனைக் காப்பாற்ற உங்களால்தான் முடியும், ஏதாவது செய்யுங்க.. என் பிள்ளைய காப்பாத்துங்க..எனக் கதறுகின்றார். ஏதாச்சும் செய்வோமா..? அல்லது முத்துக்குமரன் போல், மூவரும் செத்துப் போக விடுவோமா...?
செத்துப்போன பின் சிலை எழுப்பி மாலை போட்டு, மேடைபோட்டு, மைக் பிடித்து, தியாகிப் பட்டம் குடுத்து, தலைவராகத் தகுதி காண்பதற்கு முன், மனிதராக எதாச்சும் செய்யுங்க.. தமிழராக ஏதாச்சும் செய்யுங்க...
நன்றி4டமில்மீடியா
thukku thandanai raththu seiya vendum..vaalththukkal
ReplyDelete