Monday, July 25, 2011

வடக்கு மாகாணத்தில், ராஜபக்ஷேவின் கட்சி,படு தோல்வி

இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், விடுதலைப் புலிகள் ஆதரவுக் கட்சியான, தமிழ் தேசியக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

நாட்டின் மற்ற பகுதிகளில், ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், வடக்கு மாகாணத்தில் அவரது கட்சி தோல்வி அடைந்தது, பெரிய பின்னடைவதாகவே கருதப்படுகிறது.

இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப் போரால், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கவில்லை. குறிப்பாக, கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 25 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை.விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.

வடக்கு மாகாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து, மொத்தம் 65 உள்ளாட்சி அமைப்புகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று முன்தினம் அமைதியாக நடந்தது.ஓட்டுப் பதிவை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாலையில், ஓட்டுப் பதிவு முடிந்ததும், ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அமைக்கப்பட்டிருந்த, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, ஓட்டுப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. நேற்று முன்தினம் இரவே, ஓட்டு எண்ணும் பணி துவங்கியது.நேற்று அதிகாலை முதல், தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கின. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், ஆரம்பத்தில் இருந்தே, விடுதலைப் புலிகள் ஆதரவுக் கட்சியான, தமிழ் தேசியக் கூட்டணி, பெரும்பாலான இடங்களில் முன்னணியில் இருந்தது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், வடக்கு மாகாணத்தில், 18 இடங்கள், தமிழ் தேசியக் கூட்டணி வசம் வந்தன. தமிழ் தேசியக் கூட்டணிக்கு எதிராக செயல்படும், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு, இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன.

அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி, வடக்குப் பகுதியில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக, நெடுந்தீவு, வேலனை ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், ராஜபக்ஷே கூட்டணிக்கு கிடைத்ததாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாணத்தில் சிங்களக் கட்சிகளான, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகிய கட்சிகள், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், ராஜபக்ஷேவின் கட்சிக்கு, வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், நாட்டின் மற்ற பகுதிகளில், குறிப்பாக, தெற்கு மாகாணத்தில் நடந்த தேர்தல்களில், ஆளும் கட்சி கூட்டணியே, அபார வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சிக் கூட்டணி, 45 இடங்களில் வெற்றி பெற்று, தனது செல்வாக்கை, தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தேர்தல் நடந்த, 65 உள்ளாட்சி அமைப்புளிலும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி சார்பில், 512 கவுன்சிலர்களும், தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் 183 கவுன்சிலர்களும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 137 கவுன்சிலர்களும் தேர்வு செய்யப்பட்டனர். ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் 13 கவுன்சிலர்களும், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் 12 கவுன்சிலர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், அதிபர் ராஜபக்ஷேவின் கட்சி, படு தோல்வி அடைந்திருப்பது, இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அவருக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.