காரல் மார்க்ஸ் நூலகம் கண்ணன்’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட ச.சீ.கண்ணன், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, தனது 95-வது வயதில் இயற்கை எய்தினார். சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை தியாகராய நகரின் மேற்கு சி.ஐ.டி. நகரில் உள்ள காரல் மார்க்ஸ் நூலகத்துக்குச் சென்றேன். கீழ்த்தளத்திலும் மாடியிலும் இருந்த நூல்களையும் இதழ்களையும் பார்த்த பிறகு, அந்த நூலக நிறுவனர் பெரியவர் கண்ணனைச் சந்தித்தேன். நூலகத்தைப் பற்றி ஆர்வமாக விசாரித்தபோது, உடல்நலம் குன்றியிருந்த அவர் “ஒரு நாளைக்கு ஒரு முறைதான் மாடி ஏற முடியும். இன்று உங்களுக்காக மாடிக்கு வருகிறேன்” என்று மாடிக்கு வந்து, நூலகம் துவங்கிய காலத்திலிருந்து தனது அனுபவத்தை விளக்கியதோடு அவரது கடந்தகால வாழ்க்கையைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
கண்ணனது குடும்பம் தேசப் பற்றுமிக்க குடும்பம். இவரது தந்தை சீனிவாச ஐயங்கார் பாபநாசம் விக்டோரியா போர்டு ஸ்கூல் தலைமையாசிரியராக இருந்தபோது, தமிழகத்தில் முதன்முதலாக தமிழ்வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியவர். பள்ளி நிர்வாகம் அன்றைய ஆங்கிலேயர் அரசுக்கு விசுவாசமாக இருந்தது. தலைமையாசிரியர் சீனிவாச ஐயங்கார் தேசியவாத சிந்தனை உள்ளவர். இவருக்கு பள்ளி நிர்வாகம் நெருக்கடி கொடுத்ததால், ஒருகட்டத்தில் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
கம்யூனிஸ்ட்டாக மாறிய காங்கிரஸ் ஆர்வலர்
தன்னுடைய பிள்ளைகள் தேசப்பற்று மிக்கவர்களாக வளர வேண்டும் என்ற நோக்கத்தோடு, மூத்த மகன் கண்ணனை மதன்மோகன் மாளவியா, அன்னிபெசன்ட் போன்றோர் முன்முயற்சியால் தொடங்கப்பட்ட காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் 1940-ல் சேர்த்தார். நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் வீறுகொண்டு எழுந்த நிலையில், காசி பல்கலைக்கழக வளாகமும் போராட்டக்களமாகத் திகழ்ந்தது. கண்ணன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் (ஏஐஎஸ்எஃப்) சேர்ந்ததோடு கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினரானார். பல்கலைக்கழகக் கட்சிக் கிளைக் கூட்டங்களில் பி.ராமமூர்த்தி, எஸ்.ராமகிருஷ்ணன், எம்.பி.சீனிவாசன் போன் றோரும் கலந்துகொண்டார்கள். கண்ணன் பொறியியல் நூல்களோடு மார்க்ஸிய நூல் களையும் படித்தார். காங்கிரஸ் ஆர்வலராகக் காசி சென்ற கண்ணன், கம்யூனிஸ்ட்டாக வெளியே வந்தார்.
ஒருகட்டத்தில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ராணுவம் சென்று மாணவர் தலைவர்களைக் கைதுசெய்ய முயற்சித்தது. அப்போது பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராணுவத்தை அனுமதிக்க மறுத்தார். துணைவேந்தரின் ஆட்சேபனையை மீறி ராணுவம் உள்ளே சென்றபோது, சம்பந்தப்பட்ட மாணவர் தலைவர்களிடம் “வளாகத்தைவிட்டு வெளியேறி கிராமங்களுக்குச் செல்லுங்கள். உங்களை மக்கள் பாதுகாப்பார்கள்” என துணைவேந்தர் ஆலோசனை கூறினார். அவரது ஆலோசனையை ஏற்ற மாணவர்களும், மாணவர் தலைவர்களும் கிராமங்களுக்குச் சென்றனர். அப்படிச் சென்றவர்களில் கண்ணனும் ஒருவர். சில காலம் கண்ணன் உள்ளிட்ட சில மாணவர் தலைவர்கள் தலைமறைவாக இருந்தனர். இதனால் நான்காண்டுகளில் முடிக்க வேண்டிய கண்ணனின் படிப்பு ஐந்தாண்டுகளாக நீடித்தது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பி.ராமமூர்த்தி 1920-களில் பட்டப் படிப்பு படித்தபோது, சைமன் கமிஷனுக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடமை தவறாத பொறியாளர்
படிப்பை முடித்து கண்ணன் தமிழ்நாடு திரும்பி, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. பல்தொழில் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பிறகு அதை விடுத்து, மாகாண மின்துறையில் பொறியாளர் பணியில் சேர்ந்தார். கடமை தவறாத பொறியாளர் என்ற பாராட்டைப் பெற்றவர். மின் பொறியாளர் சங்கத்தின் தலைவராகவும் செயலாற்றினார். அக்காலத்தில் மின்துறையில் தலையாட்டி பொம்மையாக இல்லாமல், வெளிப்படையாகத் தமது கருத்துகளைக் கூறியதால், அவருக்கு தலைமைப் பொறியாளர் பதவி மறுக்கப்பட்டது. இதைப் பற்றியெல்லாம் அவர் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
அவருடைய பணிக்காலத்தில் மிக முக்கிய நிகழ்வு, அவர் பிரான்ஸ் சென்றது. இங்கிலாந்து, பிரான்ஸுக்கு மேற்கே இருப்பதால் மாலை நேரம் தள்ளிப்போகும். அதனால், உச்சகட்ட மின்பயன்பாடு நேரம் மாறுபடும். இங்கிலாந்தில் உச்சகட்டத் தேவையின்போது பிரான்ஸின் பயன்பாடு குறைவாக இருக்கும். இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் மின்சாரத்தை வழங்கிட - பெற்றுக்கொள்ள அந்த நாடுகளின் இணைப்புகளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இத்தகைய இணைப்பு வசதியைத் தமிழகத்திலும் உருவாக்க வேண்டும் என்று வாரியத்துக்கு அறிக்கை அளித்தார். இது ஏற்றுச் செயல்படுத்தப்பட்டு, தமிழகம் பயன் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. மேலும், மின்வாரியத் தொழிலாளர்களுக்குப் பல்வேறு பொருள் குறித்து வகுப்பும் எடுத்திருக்கிறார்.
ஆய்வு மாணவர்களின் கருவூலம்
மின்வாரியத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, 1978-ல் காரல் மார்க்ஸ் பெயரில் நூலகத்தைத் துவக்கினார். மார்க்ஸிய - லெனினிய மூல நூல்களின் முழுமையான தொகுப்பு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆவணங்கள், சோஷலிச நாடுகளின் வரலாற்று நூல்கள், இந்திய, தமிழக வரலாற்று நூல்கள், இந்தியாவிலும், உலக அளவிலும் வெளியிடப்பட்டு வந்த இடதுசாரி இதழ்கள், இலக்கிய நூல்கள் என்று இடதுசாரி ஆய்வாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் ஆய்வுக்கான கருவூலமாக அந்த நூலகம் திகழ்ந்தது. இந்நூலகத்தை இடதுசாரி ஆய்வாளர்களும் பல கல்லூரி மாணவர்களும் ஆய்வுகள் மேற்கொள்ளப் பயன்படுத்தினார்கள். இந்த நூல்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, இவற்றை மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு நூலகத்துக்கும், வேறு சில நூலகங்களுக்கும் சமீபத்தில் அளித்துவிட்டார்.
இவருடைய மற்றொரு பெரும் பணி, பார்வையற்றோருக்குத் தொடர்ச்சியாக அவர் செய்த உதவிகளாகும். நூலகத்துக்கு வரும் பார்வையற்றோருக்கு நூல்களை கண்ணன் படித்துக்காட்டி உதவிசெய்தார். இவர் படிக்க, அதைக் கேட்டு பார்வையற்ற வீரராகவன் டாக்டர் பட்டம் பெற்று சென்னை ஐஐடி-யில் பேராசிரியராகவும் பணியாற்றினார். வீரராகவனின் முனைவர் பட்டத்துக்கான ‘சென்னை மாநகரில் தொழிலாளி வர்க்கத்தின் வளர்ச்சி’ என்ற அற்புதமான நூலை சில ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கண்ணனின் இறுதி ஊர்வலத்தில், பார்வையற்றோர் பலர் கலந்துகொண்டு பேசினார்கள். “கண் இல்லாத எங்களுக்குக் கண்ணாக அவர் விளங்கினார். எங்களைக் கல்லூரியில் சேர்ப்பித்துப் படிக்க வைத்தார். அவரும் அவரது நண்பர்களும், உறவினர்களும் எங்களுக்குப் படித்துக் காட்டி உதவிவந்தார்கள். அதுமட்டுமல்ல; எங்களுக்கு அரசுப் பணியும் பெற்றுக் கொடுத்தார். இதற்காக அமைச்சர் ஒருவருடன் சூடான வாக்குவாதத்தில் ஈடுபடவும் அவர் தயங்கவில்லை. எங்களது இதயத்தில் எப்போதும் அவர் வாழ்வார்” என்று அவர்கள் உருக்கமாகப் பேசினார்கள்.
கண்ணனுடைய அனைத்துப் பணிகளுக்கும் உற்ற துணையாக உதவியவர் அவருடைய மனைவி மைதிலி. கண்ணனின் தம்பி ச.சீ.இராஜகோபாலன் சிறந்த கல்வியாளர். கண்ணனின் சகோதரர்கள் அனைவரும் அவருடைய தந்தையைப் போல் சமூகப் பார்வையோடு சேவை செய்திருக்கிறார்கள். கண்ணனின் வாழ்க்கையும், அவருடைய குடும்பத்தாரின் வாழ்க்கையும் அர்த்தமுள்ள வாழ்க்கை!
ஜி.ராமகிருஷ்ணன்,
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்.
தொடர்புக்கு: gr@tncpim.org
0 comments:
Post a Comment
Kindly post a comment.