முகப்பு
அறிமுகம்
கதைகள்
நூல்கள்
வெண்முரசு
புகைப்படங்கள்
தொடர்புக்கு
பதிவுகள்
தேடு
« கொற்றவை -கடிதம்‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–89 »
கிணறு
அனுபவம், புகைப்படம் April 29, 2017
Share10
பத்மநாபபுரத்தில் நான் தெற்குத்தெருவில் குடியிருந்தேன். 1997 முதல் 2000 வரை. அரண்மனையின் பெரிய உப்பரிகையில் நின்றால் தெற்குத்தெரு தெரியும். அகலமான கம்பீரமான தெரு அது. அதில் ஒரு ஓய்வுபெற்ற காவலதிகாரியின் பாரம்பரியமான வீடு. 1912 ல் அவரது அம்மாவன் கட்டியது. அவர் தென் திருவிதாங்கூர் நாயர் பிரிகேடில் ஒரு காவலராக இருந்தார்.
பழையான ஆனால் உறுதியான வீடு. அக்காலக் கணக்கில் பங்களா. அகலமான கூடம். உள்கூடம். சாப்பிடும் அறையும் கூடமே. சிறியதோர் பக்கவாட்டு அறையை நான் என் வாசிப்பறையாக வைத்துக்கொண்டேன். குளிர்ச்சியாக சிமிண்ட் போடப்பட்ட தரை. வீட்டைச்சுற்றி தென்னைமரங்கள் அடர்ந்திருந்தமையால் எப்போதும் காற்று. ஓட்டுக்கூரை, கீழே தேக்குமர சீலிங் போடப்பட்டு மிக உயரமாக இருந்ததனால் வெயிலே தெரியாது. பெரிய சன்னல்கள். நான் விரும்பிய வீடுகளில் ஒன்று.
அந்த வீட்டுக்கு தெற்குபக்கமாக குலதெய்வக்கோயில் ஒன்று உண்டு. ஓட்டுக்கூரை போடப்பட்டது. மேலாங்கோட்டு அம்மன். அவள்தான் எனக்கும் குலதெய்வம். பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும் கருவறைக்குள் சுவரோவியமாக எழுந்தருளியிருந்தாள். அந்த கோயில்முன்னால் அகலமான கரிய சிமிண்ட் திண்ணை உண்டு. அமர்ந்து வாசிக்க படிக்க மிக இனிய இடம் .சுற்றிலும் பூச்செடிகள். அரளி, மந்தாரை,சங்குபுஷ்பம்,செம்பருத்தி…சி.மோகன் அந்த வீட்டுக்குள் நுழைந்ததுமே ”என்ன பெரும் சொத்தெல்லாம் வச்சிருக்கீங்க…ராஜா மாதிரி வாழறீங்க!” என்றார்.
வீட்டுக்கு வந்த அத்தனை பேருமே அந்த வீட்டை புகழ்ந்திருக்கிறார்கள். அந்த கோயில் திண்ணையின் குளிர்ச்சியில் படுத்துக்கொண்டு நானும் பிரேமும் ரமேஷ¤ம் நிறைய உரையாடியிருக்கிறோம். பாவண்ணன் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்திருக்கிறார். தேவதேவன் பலமுறை வந்திருக்கிறார். நாஞ்சில்நாடன், சூத்ரதாரி வேதசகாயகுமார், அ.கா.பெருமாள், க.பூரணசந்திரன் எல்லாரும் அங்கே வந்திருக்கிறார்கள்.
பதமநாபபுரம் திருவிதாங்கூர் மன்னர்களின் பழைய தலைநகரம். எந்தக்கோடையையும் தாக்குப்பிடிக்கும் வாய்ப்பான இடத்தில்தான் ஊரை அமைத்திருந்தார்கள். இயற்கையான ஊற்றுக்களால் அங்குள்ள குளங்களும் ஏராளமான நீராழிகளும் எப்போதும் நிறைந்து வழிந்துகொண்டிருக்கும். வேளிமலையின் மாபெரும் சுவர் அதன் ஒரு பக்கத்தை முற்றாக சூழ்ந்திருக்கும். முற்றத்துக்கு வந்தாலே மௌனமாக ஓங்கிய மலைச்சிகரங்களைக் காணமுடியும்.
கோட்டைசூழ்ந்த பத்மநாபபுரம் ஒரு அழகிய ஊர். சுற்றுலாப்பயணிகள் வந்து குழுமும் அரண்மனை முற்றம் தவிர்த்தால் எப்போதுமே அமைதியில் மூழ்கிக் கிடக்கும். அகலமான பெரிய தெருக்கள் தினமும் கூட்டப்பட்டு அதிசுத்தமானவை. தோட்டம் சூழ்ந்த பெரிய ஓட்டு வீடுகள். மூன்று பெரிய கோயில்களும் இரு பெரிய குளங்களும் உண்டு. ஊரெங்கும் சின்னச் சின்னக்கோயில்கள்.அவற்றுக்குள் மாபெரும் ஆலமரங்கள். ஊரே மரங்கள் அடர்ந்து பச்சை மூடியிருக்கும். வேளிமலையின் மடிப்பில் இருப்பதனால் தென்றல் ஓடிக்கொண்டிருக்கும். அந்த வீட்டில் நான் மின்விசிறியை போட்டதேயில்லை.
அங்கு குடிநீருக்கு கிணறுதான். நல்ல ஆழமான கிணறு. ஆனால் நான்கு கை ஆழத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும். தினமும் தண்ணீர் இறைப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. செடிகளுக்கு தேவையில்லை என்றாலும் தண்ணீர் இறைத்து விடுவேன். பெரிய பித்தளை உருளி ஒன்று இருந்தது. அதற்குள் அன்று ஒருவயதான குட்டிச் சைதன்யாவை அமரச்செய்து நீர் இறைத்து விட்டு உட்கார வைத்தால் நிம்மதியாக வேறு வேலை பார்க்கலாம். ‘னன்னி’ என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். ‘நன்னிக்குள்ர கையி’ என்ற விளையாட்டு அவளுக்கு வாடிக்கை.
கிணற்றடிதான் குளியல். நன்றாக மதில் சூழ்ந்த திறந்த குளியலறை. தண்ணீரை இறைத்து ஊற்றிக்கொண்டே இருக்கலாம். நண்பர்கள் வந்தால் அனேகமாக குளத்துக்குத்தான் கூட்டிச்செல்வேன்.மழையில் குளத்தில் குளிக்க முடியாது. அப்போது கிணற்று நீர்தான், இளஞ்சூடாக இருக்கும் அது. அவர்களுக்காக கிணற்று நீரை இறைத்து நிறைத்து வைப்பேன்.
நீர் இறைப்பது ஓர் உற்சாகமான உடற்பயிற்சியாக இருந்தது. 1998ல் வசந்தகுமார் வீட்டுக்கு வந்திருந்தார். ‘பின் தொடரும் நிழலின் குரல்’ எழுதி அதன் செப்பனிடல் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அவருக்காக நான் நீர் நிறைக்கும்போது இந்த புகைபப்டத்தை எடுத்தார். இதில் நான் ஆழ்ந்த கவனத்துடன் நீர் இறைப்பது தெரிகிறது. நீர் ஒளியுடன் சரிந்து விழுவதில் மனம் ஈடுபட்டிருக்கிறது.
சென்றகாலங்களை ஆழமான ஊற்று அறாத ஒரு கிணற்றில் இருந்து ஒளியுடன் இறைத்து ஊற்றிக்கொண்டே இருக்கிறோம்.
மறுபிரசுரம். முதற்பிரசுரம் Jan 31, 2010
Share10
தொடர்புடைய பதிவுகள்
டைரி
சதுரங்க ஆட்டத்தில்
அங்கே அப்பா காத்திருக்கிறார்!
அசைவைக் கைப்பற்றுதல்
மதம்
தன்னறம்
கலைக்கணம்
தோன்றாத்துணை
தெய்வ மிருகம்
பூதம்
வால்
அழிமுகம்
செய்தொழில் பழித்தல்
ஒரு பொருளியல் விபத்து
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)
யாதெனின் யாதெனின்…
Tags: அனுபவம், பத்மனாபபுரம்
9 commentsSkip to comment form ↓
thennarasu
January 31, 2010 at 10:23 am (UTC 5.5)
இப்ப நல்லா சதை போட்டுட்டிங்க :)
ஜெயமோகன்
February 1, 2010 at 8:42 am (UTC 5.5)
உண்மை அது அல்ல… அப்போதும் இப்போதும் 65 – 67 கிலோதான்
Ramachandra Sarma
February 1, 2010 at 9:03 am (UTC 5.5)
இல்லப்பா.. ஆசானுக்கு அப்போ ட்ரஸிங் சென்ஸ் ரொம்ப அதிகமாக இருந்திருக்கிறது. அதுதான் அப்படித்தெரிகிறது. மொத்த ரசிகர் கும்பலுமே அவரது டிஷர்ட்டில் நுழைந்துவிடலாம் போல. :)
perumal
February 1, 2010 at 11:08 am (UTC 5.5)
இந்த புகைப்படத்தில் நீங்கள் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து பாத்திரத்தில் நிரப்பும் காட்சி “ஞானத்தை இறைத்து எங்களுக்கு (வாசகர்களுக்கு) உற்றுவதைப்போல உள்ளது. மேலும் இந்த வேலை உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடமையாகவும் அந்தக்கடமையை நீங்கள் மனம் உவந்து செய்வதைப்போலவும் எனக்கு தோன்றுகிறது.
பணிவன்புடன்
பெருமாள்
கரூர்
V.Ganesh
February 1, 2010 at 12:17 pm (UTC 5.5)
“அந்த வீட்டுக்கு தெற்குபக்கமாக குலதெய்வக்கோயில் ஒன்று உண்டு. ஓட்டுக்கூரை போடப்பட்டது. மேலாங்கோட்டு அம்மன். அவள்தான் எனக்கும் குலதெய்வம்.”
சாரு இன்னும் close ஆயிட்டாரு. [ எத்தனை உரிமைகள்…. எனக்கு ஜெயமோகன் நல்லா தெரியும் நம்ம ஊரு தானே. அவருக்க கொலதெய்வம் மேலான்கோடு நம்ம ஊரு புலியூர்குறிச்சி.] ஆயினும் நிதமும் என் ஊர் குளத்தில் குளித்து திண்ணையில் தூங்கி…. கிணற்று குளித்தல்….. அதுவும் இரண்டாம் இடம்தான் …. இன்று எதுவுமில்லை… வடக்குமுகம் நாடகம் போல் நிழல்கள்… ஆனால் ஓட்டம் நிற்கவில்லை.
ஐயா, ஆசான் கிணறை பற்றி எழுத முடியுமா? பத்மனபாபுரத்தில் இருந்து மேலான்கோடு செல்லும் பாதையில் உள்ளது. அங்கு ஒரு சிறிய கிருஷ்ணன் வகை குடியிருப்பு உள்ளது/ இன்னும் இருக்கும் என நம்புகிறேன். அருமையான குடி நீர். இனிக்கும். ஆவலுடன் உங்கள் கை வண்ணத்தில் அக்கிணறு எதிபார்க்கிறேன். ஒரு முறை கோவில் செல்லும் பொழுது பாருங்கள்.
sunil
February 1, 2010 at 1:34 pm (UTC 5.5)
Though I am not from Padmanabapuram, I love to roam around that palace streets during my school & college days, I used to watch each & every home in those streets,I can feel that much peacefulness over there. I wish to live in those old homes, read books in the thinnais and sleep over there during afternoons..
sureshkannan
February 1, 2010 at 6:02 pm (UTC 5.5)
பதின்மத்தில் ஓர் நாள் சென்னை மறைமலையடிகள் நூல்நிலையத்தில் அமர்ந்து வாலியின் கவிதை நூலொன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். (என்ன கொடுமை பாருங்கள்!) உணர்ச்சிப் பெருக்கில் ‘வாலி, நீ கவிதைகளை அள்ளி அள்ளித் தரும் வாளி’ என்று பின்னட்டையில் எழுதினேன். அதுதான் நினைவுக்கு வருகிறது. :-)
vks
May 24, 2010 at 4:59 pm (UTC 5.5)
பாரம்பரியங்களை நெஞ்சில் சுமக்கின்ற தாய் மனது இருப்பவர்களுக்கு பழைய வீடுகளில் கிடைக்கின்ற திருப்தி வேறு எங்கும் கிடைக்காது.
eraniel senthil
August 11, 2010 at 7:50 pm (UTC 5.5)
yeah i too miss those great homes…
http://www.jeyamohan.in/6119#.WQUET0WGPIV
Comments have been disabled.
வெண்முரசு நூல்கள் வாங்க
வெண்முரசு நூல்கள் வாங்க
0 comments:
Post a Comment
Kindly post a comment.