Saturday, December 15, 2012

காற்றழுத்தத் தாழ்வு நகர்வதால் தென் மாவட்டங்களில் நாளை முதல் மழை: வானிலை மையம் தகவல் !

தமிழ்நாட்டுக்கு அதிக மழையைத் தரும் வடகிழக்குப் பருவ மழை இந்த ஆண்டு சரிவரப் பெய்யாமல் பொய்த்து விட்டது. அக்டோபர் முதல் டிசம்பர் வரைதான் மழை காலம். ஆனால் தற்போது பனி பெய்யத் தொடங்கி விட்டதால் இனி மழை இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அந்தமான் அருகே புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் மீண்டும் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் அந்தமான் அருகே ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை 3 நாட்களுக்கு முன்பு உருவாகியது.

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் நாளை முதல் தென்மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.

காற்றழுத்தத் தாழ்வு வலுவடைந்து தமிழ்நாட்டை நெருங்கும்போது சென்னை உள்பட வட மாவட்டங்களிலும் ஓளரவு மழை பெய்ய வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

தற்போது ஏரி, குளங்களில் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகி இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒன் இந்தியா, 15-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.