Friday, December 28, 2012

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் இன்று மார்கழி ஆருத்ரா தரிசனம் !




பூலோகக் கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.

ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த டிச.19 தேதி கொடியேற்றத்துடன் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ம் நாளான வியாழக்கிழமை தேர்த் திருவிழா நடைபெறறது.பின்னர் வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று மகாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி மார்கழி ஆருத்ரா தரிசனக் காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர்
.
விழா ஏற்பாடுகளை உற்சவ ஆச்சாரியார் எஸ்.வி.தில்லைநாகபூஷண தீட்சிதர், பொதுத்  தீட்சிதர்களின் செயலாளர் ஏ.ஆனந்ததாண்டவ தீட்சிதர், துணைச் செயலாளர் ரா.வெ.கிருஷ்ணசாமி தீட்சிதர் மற்றும் அறநிலையத்துறை செயல்அலுவலர் க.சிவக்குமார் ஆகியோர் செய்துள்ளனர்

நன்றி ள்- தினமணி, 28-12-2012.

0 comments:

Post a Comment

Kindly post a comment.