திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகரத்தின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் மீனாட்சிபுரம். இக்கிராமத்தில் வாழ்ந்துவந்த தேவந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் 19.2.1981 அன்றும் 27 குடும்பங்கள் 23.5.1981 அன்றும் இஸ்லாம் மதத்தைத் தழுவின. ஏறத்தாழ 1500 பேர் ஒரு குழுமமாக மதம்மாறிய இந்நிகழ்ச்சி அகில இந்தியாவையும் இக்கிராமத்தின் பக்கம் ஈர்த்தது.
இந்துமடாதிபதிகளும், இந்து சமய அடிப்படைவாத இயக்கம் சார்ந்தோரும், அரசியல்வாதிகளும் இக்கிராமத்தை நோக்கி வரத் தொடங்கினர். இது ஒரு படையெடுப்பு போல் அமைந்தது.
பெட்ரோடாலர் (அரபு நாடுகளின் பணம்) இம்மதமாற்றத்தின் பின்புலமாக இருந்ததாகப் பேசப்பட்டது. மத்திய உள்துறையின் அமைச்சர் ‘மக்வானா’ இக்கிராமத்திற்கு வந்து ஆராய்ந்து இக்கருத்தை மறுத்ததுடன், தமிழகக் காவல்துறையின் அத்துமீறலே இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது என்பதைக் கண்டறிந்தார்.
பாராளுமன்றத்திலும் தாம் கண்டறிந்த உண்மையை முன்மொழிந்தார். இதன்பின்னர் சாதிய உணர்வுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் சிலர் இடமாறுதல் செய்யப்பட்டனர், என்றாலும் மதம் மாறியவர்கள் தம் நிலையில் உறுதியாக நின்றனர். இந்நாவலாசிரியரின் கூற்றுப்படி வைத்து அழகு பார்க்க முடியாத மீசைக்குப் பதிலாகத் தாடி தலையில் கட்ட முடியாத துண்டுக்குப் பதிலாகக் குல்லா, மாராப்பே போட முடியாத தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண்டிரெல்லாம் தலைமுடி முக்காடிட்டுக் கொண்டார்கள். கருப்பசாமி காதர் பாயானார். கருப்பாயி நூர்ஜகானானாள். (பக்கம் 9)
பணக்கார இஸ்லாமியர்கள் வழங்கிய கொடையால் பெரிய அளவிலான பள்ளிவாசல் இங்கு கட்டப்பட்டது. பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுத்துவந்த பெண்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் வழிமுறையாக வீடுகளில் அடிகுழாய் போடப்பட்டது. ‘மார்க்ககல்வி’ பயில இளைஞர்கள் சிலர் வாணியம்பாடிக்கு அனுப்பப்பட்டனர். பேருந்துப் பயணத்தில் தாம் அமர்ந்திருக்கும் இருக்கையை, தம்மைவிட வயதில் சிறியவனாக இருக்கும் ஆதிக்க சாதியினருக்குக் கொடுத்துவிட்டு நின்றுகொண்டு பயணம் செய்யும் அவலம் மறைந்தது. மொத்தத்தில் பண்பாட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபட மதமாற்றம் துணைபுரிந்தது.
பொருளியல் நோக்கில் அல்லாமல், ஓர் எதிர்க்குரலாக அமைந்த இம்மதமாற்றம் குறித்து நாவலில் இடம்பெறும் காதர் மானத்துக்கும், ரோசத்திற்கும் மாறினோம். சோத்துலே உப்புப் போட்டு திங்கிறதை உறுதிப்படுத்தவே இந்த மாற்றம் (பக்கம் 20) என்கிறார்.
மீனாட்சிபுரம் தேவேந்திரகுல வேளாளர்கள் முஸ்லிம்களாக மாறியதன் வாயிலாக தம் பாதுகாப்புக்கும், சுயமரியாதைக்கும் உத்தரவாதம் செய்து கொண்டனர். இம்மதமாற்றம் நிகழ்ந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் தமிழ்ச்சமூகம் இந்நிகழ்ச்சியைப் பெரும்பாலும் மறந்துவிட்டது. தற்போது ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற இந்நாவலின் வாயிலாக எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கலை நாவலாசிரியர் அன்வர் பாலசிங்கம் வெளிக்கொணர்ந்துள்ளார்.
மீனாட்சிபுரத்திற்கு அருகில் உள்ள ‘கலங்காதகண்டி’ ஊரைச் சார்ந்த அன்வர் பாலசிங்கம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமியராக மதம்மாறிய இவர் அதே ஊரில் தம்மைப்போன்றே புதிய மதம்மாறிய தம் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்துக் கொண்டவர். மீனாட்சிபுரம் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வருபவர். மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாத்தின் உறுப்பினர்.
நாவலின் கதை
காமாட்சிபுரத்தில் (மீனாட்சிபுரத்தில்) முதல் முதலாக மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களில் ஒன்று கருப்பசாமி என்பவரின் குடும்பம். மதமாற்றத்தை அடுத்து தம்பெயரை காதர் என்றும், தன் மகள் கருப்பாயியின் பெயரை நூர்ஜஹான் என்றும் மாற்றிக் கொண்டவர். தம் மகளை உயர்கல்வி படிக்க வைத்த இவரால் உரிய வயதில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. காரணம், இவர் ‘நவ்முஸ்லீம்’ (புதிய இஸ்லாமியர்), அதுவும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்திலிருந்து மதம்மாறியவர் என்பதுதான்.
தனக்கு மணம் முடிக்க மணமகனைத் தேடி அலையும் தந்தையின் துயரத்தைப் பொறுக்க இயலாது நாற்பது வயதைக் கடந்த அவரது மகள் நூர்ஜஹான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். மகளின் பிரிவைத் தாங்க இயலாத காதரும் அவரது மனைவியும் நஞ்சுகுடித்து இறந்து போகிறார்கள். காதரின் கொழந்தியாள் ‘பன்னீர்’ மதம் மாறாதவள். ஆனாலும் காதரின் மகள் நூர்ஜஹான் மீது அன்பைப் பொழிபவள். நூர்ஜஹானின் பிரிவைத் தாங்க இயலாது கிணற்றில் விழுந்து அவளும் தற்கொலை செய்து கொள்கிறாள்.
அடுத்தடுத்து நிகழும் இந்த நான்கு தற்கொலைகள், நாவலை வாசிப்பவனின் உள்ளத்தில் சோக உணர்வைத் தோற்றுவிக்கின்றன. நூர்ஜஹானின் தற்கொலை, அவளது பெற்றோர் மற்றும் சித்தி பன்னீரின் தற்கொலை, அவர்களது சவ அடக்கம் என அனைத்து நிகழ்வுகளும் ஒரே நாளில் நடந்து முடிந்துவிடுகின்றன. இந்த ஒரு நாள்தான் நாவல் நிகழும் காலமாகும். ஆனால் உரையாடல்கள் வாயிலாக முப்பதாண்டுகால நிகழ்வுகளையும், மதம் மாறியோர் எதிர்கொள்ளும் ஓர் முக்கியப் பிரச்சனையையும் இந்நாவல் பேசுகிறது.
நாவலின் மையச் செய்தி
மதமாற்றம் என்பது ஒரு சமூகத்தின் எதிர்க் குரலாக அமைந்தாலும், காலப்போக்கில் சில புதிய பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கும் என்பதை இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்வகையில் இந்நாவலின் மையப்பிரச்சனையாக நவ்முஸ்லிம்களது பெண்பிள்ளைகளின் திருமணம் அமைகின்றது.
தமது சாதி அடையாளத்தையும் துறந்து இஸ்லாத்தை தழுவியவர்களை அன்புடன் வரவேற்ற பரம்பரை இஸ்லாமியர்கள், திருமண உறவு என்று வரும்பொழுது தம் அடையாளத்தைத் துறக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நவ்இஸ்லாமியர்களின் பூர்வீக சாதி அடையாளத்தை மறக்கவும் இல்லை. நவ்இஸ்லாமியர்களின் உரையாடல்கள் வாயிலாக இவ்வுண்மையை நாவலாசிரியர் ஆங்காங்கே பதிவு செய்து உள்ளார்.
நவ்முஸ்லிமான ‘முஸ்தபாவாத்தியார்’ எம்.ஏ., பி.எட்., படித்தவர். தம் திருமணப் பத்திரிக்கையில் தம் தந்தையின் பெயருக்கு பின்னும், தன் பெயருக்குப் பின்னும் ‘இராவுத்தர்’ என்று போட்டு அச்சிட்டுவிட்டார். அவர் திருமணம் செய்த பெண், பரம்பரை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணப் பத்திரிக்கையை பார்த்த பெண் வீட்டார் ‘நவ்முஸ்லிமெல்லாம் ராவுத்தராயிட்டா அப்புறம் ராவுத்தர் என்னாவதுன்னு’ (பக்கம் 56) கேட்டு அசிங்கப்படுத்தினர்.
மீனாட்சிபுரத்து நவ்முஸ்லிமான ‘உசேன்’ என்பவர், வெளியூர் பள்ளிவாசல் ஒன்றில் ‘அசரத்’ ஆகப்பணிபுரிகிறார். இஸ்லாமியராக மதம்மாற விரும்பிய தலித் இளைஞர் ஒருவரைச் சந்திக்க விரும்பினார். அப்போது அசரத்து, நாம அங்கயெல்லாம் போகக்கூடாது. அந்தப் பையன் எஸ்ஸி யாக்கும். அதனால் அவன் இங்க வரட்டும். நம்ம அங்க போனமுன்னா சரிவராது என்கிறான் பரம்பரை முஸ்லிம் இளைஞன் ஒருவன் (பக்கம் 58). இதற்கு விடையாக அசரத் கூறியதும், அதை அவன் ஏற்க மறுத்துக் கூறிய பதிலும் நாவலில் இவ்வாறு இடம் பெறுகின்றது.
ஏத்தா... இப்படிப் பேசக்கூடாது. இந்த உலகத்தையே அல்லாஹ்தான் படைச்சான்னு சொல்லிகிட்டு அதுலயும் மனுசங்கள்ல நாம எஸ்ஸி, பீஸின்னு பிரிக்கலாமான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொல்லுறான். நீங்க என்ன வேணா சொல்லுங்க அசரத்து, அவங்க அவங்கதான்... நாம நாமதாங்கிறான் (பக்கம் 58).
தான் உரையாடிக் கொண்டிருக்கும் அசரத், மீனாட்சிபுரத்தில் மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திலிருந்து வந்த ‘நவ்முஸ்லிம்’ என்பது அந்த இளைஞனுக்குத் தெரியவில்லை. பரம்பரை இஸ்லாமியர் ஒருவர் நடத்திவந்த தேநீர் விடுதியில் நவ்முஸ்லிம்களின் நிலையை
‘‘கம்பிளி தைக்கா முக்குக்கு போனாத்தான் தெரியுது நான் பள்ளனா... பாயான்னு. அங்க சந்தை முக்கில கடை வச்சிருக்கிற முல்லாபாய்ட்ட போயி டீ தாங்க பாய்ன்னு கேட்டமுன்னா... நமக்குனு ஒரு டீ வரும். அவருக்கு தெரிஞ்ச வித்தியாசமெல்லாம் பேரு மட்டும்தான்’’ என்று குறிப்பிடுவது அதிர்ச்சியான செய்தி. அரபு நாடுகளிலிருந்து கோடிகோடியாக மீனாட்சிபுரத்தில் பணம் கொட்டியதாக வெளியூர்க்காரர்கள் நம்ப, அதற்கு மாறான நிலையே அங்கு நிலவியுள்ளது. நவ்முஸ்லிம்களின் பெயரைச் சொல்லி நிதி திரட்டப்பட்டதையும், அதில் கையாடல் செய்த அவ்வட்டாரத்தின் பரம்பரை முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர்குறித்த சில செய்திகளும் நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. (பக்கம் 24-25, 43-46, 59-61).
இவையெல்லாம் போகிறபோக்கில் என்பது போன்ற பதிவுகள். நாவலின் மையச் செய்தியாக இடம் பெறுவது, நவ்முஸ்லீம்கள் வீட்டு இளம் பெண்களுக்கு மணமகன் கிடைக்காது திருமணம் தடைப்பட்டு நிற்பதுதான். நாவலின் தொடக்கத்தில் இடம் பெறும் நூர்ஜஹானின் மரணக்கடிதம் இந்த அவலத்தை மிக உருக்கமாக எடுத்துரைக்கிறது. நாவலின் வளர்ச்சிப்போக்கில் இச்சிக்கல் பல்வேறு கதைமாந்தர்களின் கூற்றாக எடுத்துரைக்கப்படுகின்றது.
நூர்ஜஹானின் கடிதத்தில் உருக்கமாக இடம்பெறும் இந்த அவலம், மதம் மாறாத அவள் சித்தி பன்னீரின் கூற்றில் கோபமாக கொப்பளிக்கிறது. பள்ளிவாசலில் கூடியிருந்த ஜமாத்தார்களைப் பார்த்து ‘பெத்துவச்ச புள்ளய காலக் காலத்துல கெட்டிக் குடுக்கத் துப்பில்லாம ஒங்களுக்கெல்லாம் தாடி, தொப்பி ஒரு கேடா, வெக்கமாயில்ல’ (பக்கம் 19) என்று பன்னீர், தொடங்கிவைத்ததை, அல்லாபிச்சை மேலும் தொடர்கிறார். அவரது கோபத்தின் இலக்காக ஜமாத்தின் தலைவர் அமைகிறார்.
‘‘யோவ் தலைவரே... உமக்குப் பொட்டப்புள்ள இல்ல. அதான் பொட்டப்புள்ள பெத்த எங்க கவலை ஓமக்கு இல்லாமப் போயிருச்சு. தாடிய நீட்டி விட்டிக்கிட்டு ஊர் ஊராய்ப் போயி பள்ளிக்கு நிதி சேர்க்கிறோமுன்னுட்டு நல்லா வயிறு முட்ட தின்னுட்டு வரத்தெரியுது. சமஞ்சு நிற்கிற பொம்பளபுள்ள விஷயமா எந்த ஜமாத்துலயாவது பேசியிருக்கீராவே.. துப்புந்துவருங் கெட்டு இந்த பதவில நீர் இருக்கிறதுக்கு நாண்டுகிட்டு நின்னு சாவலாம் வே... ஒண்ணா ரெண்டா அம்பது பிள்ளைகளுக்கு மேலே சமஞ்சு உக்காந்து வருசம் இருபது ஆகுதுவே (பக்கம் 19).
நாவல் விடுக்கும் செய்தி
கீரனூர் ஜாகிர்ராஜாவின் நாவல்களில் அடித்தள இஸ்லாமியர்களின் வாழ்வு இடம் பெற்று ஒரு வேறுபாடான இஸ்லாமியர் சமூகம் அறிமுகப்படுத்தப்படுவது போல், இந்நாவலும் வேறுபாடான ஓர் இஸ்லாமிய சமூகத்தை அறிமுகம் செய்கிறது. முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் இது ஓர் விவாதத்திற்குரிய நாவல்.
1981-இல் மீனாட்சிபுரத்தில் நிகழ்ந்த மதமாற்றத்திற்கான சமூகக் காரணிகளையும், மதமாற்ற நிகழ்வுகளையும் நன்றாக உணர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றவர் நாவலாசிரியர். ஆனால் ‘இவையெல்லாம் கடந்த கால வரலாற்றின் நிகழ்வுகள்’ ஆகிவிட்டன. மதமாறியவர்களின் வாழ்வியல் சிக்கல்கள், நிகழ்காலம் சார்ந்தவை. இதையே நாவலின் கருவாக இவர் எடுத்துக் கொண்டுள்ளார்.
இதனால் கடந்த கால நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதை அவர் தவிர்த்துள்ளார். தாமும் ஒரு நவ்முஸ்லிம் என்பதன் அடிப்படையில் தன் சமூகத்தின் நிகழ்கால அவலத்தை இந்நாவலில் நன்றாகவே பதிவு செய்துள்ளார்.
பொதுவாக, குழும மதமாற்றங்கள் ஒரு கலகச் செயலாக அல்லது எதிர்க்குரலாக நிகழும். அத்துடன் மதம் மாறியவர்களுக்குத் தற்காலிகமாகவேணும் ஒரு பாதுகாப்புவளையமாக அமையும் தன்மையது. மீனாட்சிபுரம் மதம் மாற்றமும் இத்தகையதுதான். ஆனால் ஒரு கட்டத்தில் இதன் தேவை முடிந்துபோய், புதிய சிக்கல்கள் உருவாகின்றன. மீனாட்சிபுரம் தேவேந்திரக்குல வேளாளர்கள் மேற்க்கொண்ட, இஸ்லாமிய மதமாற்றம், சில சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபட துணை நின்றுள்ளது என்பது உண்மை. ஆனால், ஒரு கட்டத்தில் தேக்கநிலை அடைந்து இறுதியில் தடைகள் ஆகிவிட்டது என்பதே நாவல் விடுக்கும் செய்தி.
-ஆ.சிவசுப்பிரமணியன்
கருப்பாயி என்கிற நூர்ஜஹான் | அன்வர் பாலசிங்கம் பக்: 102 | ரூ.100 | கலங்கைப் பதிப்பகம். திருநெல்வேலி | 9445801247
நன்றி :- தீக்கதிர்
0 comments:
Post a Comment
Kindly post a comment.