Tuesday, December 18, 2012
9-12-2012,
ஞாயிற்றுக் கிழமை இன்று. பத்து நாட்களாவது இடைவெளி விட்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.
இப்போது இரண்டாம் பகுதியைத் தொடங்கும்போது நியாபகம் வருகிறது, முக்கியமான ஒரு தொன்ம
விலங்கைக் குறிப்பிட விட்டு விட்டேன். அதுதான் மனிதன் கற்பனை செய்த விலங்குகளில் எல்லாம்
ரொம்பவும் ரொமான்ஸானது. அதை விலங்கு என்று சொல்வதும்கூட தகாது. ஏனெனில் அது பாதி மனிதப்பிறவி.
இந்நேரம் உங்கள் மனத்தின் நீராழத்தில் இருந்து மேற்பரப்பிற்கு வந்து தலை காட்டியிருக்கும்.
கடற்கன்னி! ஆங்கிலத்தில் MERMAID.
மேற்பாதியில்
பெண், கீழ்ப்பாதியில் மீன் என்பதுதான் கடற்கன்னியின் உடலமைப்பு. இது ஒரு கவித்துவமான
ஆழ்மனச் சித்தரிப்பு. என்றும் சுவாரஸ்யம் தீராத படைப்பு. மிகவும் ஜாக்கிரதையாக இதற்குத்
தமிழில் பெயரும் வைத்திருக்கிறார்கள் ‘கடற்கன்னி’ என்று. அது ஏன் கடல்? விரால் மீன்
கெண்டை மீனெல்லாம் ஆற்றிலும் குளத்திலும் கிடைப்பது போல் இதுவும் நதிக்கன்னி என்றோ
குளக்கன்னி என்றோ இருக்கக் கூடாதா? கடற்கன்னியாகத்தான் இருக்க வேண்டுமா? இங்கேதான்
அந்தப் பெயர் ஆழ்மனக் குறியீடு என்பது விளங்குகிறது. குளம் குட்டை எல்லாம் நம்முடைய
குறுகிற மனநிலையை அல்லது மனத்தின் மேற்பரப்பை – நினைவு மனத்தை (consciousness-ஐ)க்
குறிக்கின்றன. நதி என்பது உப நினைவு மனப்பரப்பு – sub consciousness-ஐக் குறிக்கும்.
இவ்விரண்டிலும் அந்த அற்புதம் காட்சி தருவதில்லை. கடல் என்பது தன்முனைப்பின் (ego)
எல்லைகள் இல்லாத அடிமனப் பரப்பு (unconsciousness). யோக பாஷையில் சொல்வதெனில் துரியமும்
அதற்கப்பால் உள்ள துரியாதீதமும். அந்தப் பிரக்ஞையின் ஒரு குறியீடுதான் கடற்கன்னி.
அது ஏன்
கன்னி? கடற்பெண் என்று சொல்வதினும் இது இனிமையாகத் தொனிக்கிறதா? கன்னிமை மீது மனிதனுக்கு
என்றும் தணியாத ஒரு மோகம் இருப்பதாகப் படுகிறது. புதியது, அறியாதது, எதிர்காலம் சார்ந்தது.
எனவே ஈர்ப்பது, வாழ்வின் வாக்குறுதி ஆவது. இப்படியாகக் கன்னிமை என்பதில் பல அர்த்தத்
தொனிப்புகள் உள்ளன.
எம்.வி.வெங்கட்ராம்
எழுதிய ‘நித்ய கன்னி’ என்னும் நாவல் நினைவுக்கு வருகிறது. மகாபாரதத்தின் ஒரு கிளைக்கதையை
விரித்து எழுதப்பட்டது அது. புணர்ச்சியின் பின் மீண்டும் மீண்டும் கன்னிமை பெற்றுவிடும்
வரம் அக்கதையின் நாயகிக்கு வாய்க்கிறது. வரமாக வழங்கப்பட்டது எனினும் உண்மையில் அஃது
அவளுக்குச் சாபமாகவே ஆகிறது எனபதுதான் அக்கதையின் மேதைமையான புள்ளி. உளவியலை மிக ஆழமாக
உணர்ந்தவரால்தான் அப்புள்ளியைத் தொட முடியும். மர்லின் மன்றோ இதுவரை அதே இளம்பெண்ணாக
இருந்திருந்தால்? என்றொரு கற்பனை செய்து பாருங்கள். யாரும் கவனியாத குப்பையைப் போல்
ஆகியிருப்பார். புதிய பொம்மை கிடைத்தவுடன் பழைய பொம்மை மீதுள்ள ஈர்ப்பைக் குழந்தை இழந்து
விடுகிறது. சமூகத்தின் மனநிலை அதுவே. அழகின் ஐக்கான்கள் சமூகக் குழந்தையின் கைகளில்
பொம்மைகள் மட்டுமே.
’கடற்கன்னி’
என்னும் கற்பனை நிச்சயமாக ஆண் மனத்தின் கற்பனைதான். அதற்கொரு ஜோடியைப் படைக்க அவன்
கற்பனை செய்யவே இல்லை. கன்னி என்பதற்கு ஆண்பால் உள்ளதா? கன்னனா? ஆங்கிலத்திலும்
virgin என்றால் பெண்தான். தொல்குடிக் கலாச்சாரங்களிலேயே கன்னிமை என்பது பெண்மைக்கு
உரிய தன்மையாகத்தான் வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்படியாக கன்னி என்பதற்கு இணையான ஆண்பாற்
சொல் இல்லாத நிலையில் ’கடற்காளை’ என்று சொல்லலாமா என்று தோன்றுகிறது. ஆனால் இந்தச்
சொல்லே நன்றாக இல்லை. இளைஞனைக் ‘காளை’ என்று சொல்லும் போதெல்லாம் என்னவோ என் காதில்
அது கலைஞர் கருணாநிதியின் குரலில் ஒலிக்கிறது!
மேலும்,
கடற்காளை என்று சொன்னால் அது கருத்து மயக்கத்தைத் தருகிறது. (அது கடற்கன்னி தரும் மயக்கத்திலிருந்து
பெரிதும் வேறுபட்டதாக உள்ளது) சிந்தனை உடனே கீழே காளை மாடும் மேலே மனிதனும் கொண்ட ஒரு
பௌராணிக உயிரினத்தின் உருவத்தைக் கொண்டு வருகிறது. அது போன்ற ஓர் ஜந்து க்ரானிக்கிள்ஸ்
ஆஃப் நார்னியாவில் வருகிறது.
இவ்வாறு
கடற்காளை என்னும் போது கடலில் காணப்படும் கடற்குதிரையும் ஞாபகம் வருகிறது. மூஞ்சி மட்டும்தான்
அதற்குக் குதிரை மாதிரி. மற்றபடி அதன் உடல் தனித்துவமானது. மீன் வகைகூட அல்ல அது. பாருங்கள்,
அதுவும் குளம் குட்டை நதியிலெல்லாம் காணப்படாமல் கடலில் மட்டுமே இருக்கிறது. அதே போல்
shoe fish என்றும் ஒரு பிராணி உண்டு. ஆ என்று அநியாயத்துக்கு வாயைப் பிளந்து கொண்டிருக்கும்
பழக்கத்தால் இப்படியொரு பெயரை வாங்கிக்கட்டிக் கொண்டது.
மீண்டும் கடற்கன்னியைப்
பார்ப்போம். எனக்குத் தெரிய இது தமிழிலக்கியத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும்
வருகிறது. சங்க இலக்கியத்திலோ பழைய காப்பியம் எதாவதிலோ அல்ல. இப்போது அநாயசமாக
எழுதிக் கொண்டிருக்கிறாரே யுவன் சந்திரசேகர், அவருடைய ‘மீகாமரே மீகாமரே’ என்னும்
சிறுகதையில் கடற்கன்னி ஒருத்தி வருகிறாள். (சிறுகதைத் தொகுப்பு: ‘ஏற்கனவே’). அதன்
கதை ஆரம்பம் நெய்தல் நில இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படும் ஒன்றுதான். அதாவது
மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் செல்லும் ஒருவனின் படகு சூறாவளியில் சிக்கிச்
சின்னாபின்னமாகிவிட அவன் ஏதோ ஒரு கட்டையைப் பிடித்துக்கொள்ள ஒரு தீவில்
ஒதுக்கப்படுகிறான். இது மாதிரி ஆபுத்திரன் கதையில் நிகழ்கிறது, மணிமேகலையில்.
ஆனால் இந்த மீனவன் ஒதுங்கியிருக்கும் தீவில் மனிதர்களே இல்லை. அப்படி ஆளில்லா
தீவில் ஒருவன் மாட்டிக்கொள்வதாக ஒரு திரைப்படமே இருக்கிறது – டாம் ஹான்க்ஸ் நடித்த
Cast Away. யுவனின் கதையில் ட்விஸ்ட் இங்கேதான் தொடங்குகிறது. அவன் ஒரு
கடற்கன்னியைச் சந்தித்துக் காதல் வயப்படுகிறான். கதையின் இறுதியில், அவனின்
ஊரிலிருந்து அவனை அழைத்துச் செல்ல ஆட்கள் வர, கடற்கன்னியை என்ன செய்வது என்று ஒரு
தர்மசங்கடமான நிலை. அப்போது அவள் அவனின் கைகளில் உயிர் துறக்கிறாள்! செ, எனக்குச்
சரியாகச் சொல்ல வரவில்லை. ஏதோ டிபிக்கல் தமிழ் சினிமா மாதிரி சொல்கிறேன். நீங்களே
படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள், நன்றாக இருக்கும்.
தானிஷ் எழுத்தாளர் ஹான்ஸ்
க்ரிஸ்டியன் ஆண்டர்ஸன் 1837-ல் இசைச்சித்திரமாக (Ballet) எழுதிய “The Little
Mermaid” (இளம் கடற்கன்னி) சிறுவர்களுக்கான கதையாகச் சொல்லப் பட்டாலும் அரசியல்,
உளவியல், பெண்ணியம் போன்ற துறைகளின் அடிப்படையில் குறியீட்டுப் பொருள் நிறைந்ததாக
அலசப்பட்டுள்ளது. ஆண்டர்ஸன் இக்கதையைத் தன் நண்பரான எட்வர்ட் காலினுக்கு ஒரு காதல்
கடிதமாக எழுதினார் என்று சொல்லப்படுகிறது. ஆண்டர்ஸன் தற்பாலியல் தூண்டல்கள்
கொண்டவராக இருந்தார் என்றும் ஆனால் அத்தூண்டுதல்களின் மீது அவர் ஒருபோதும்
செயலாற்றவில்லை என்றும், அவரின் மனக்கிடக்கையை அறிந்த எட்வர்ட் காலின் அவரை இழிவாக
நினைக்கவே, கடற்கன்னி ஒருத்தி இளவரசன் மீது கொண்ட காதல் தோல்வியடைவதைத் தன்
நிலைக்குக் குறியீடாக வைத்து இக்கதையை அவர் எழுதினார் என்றும் கூறப்படுகிறது. அந்தக் கதை பின்வருமாறு:
இளம் கடற்கன்னி ஒருத்தி தன்
இனத்தாருடன் கடலின் ஆழத்தில் உள்ள ராஜ்ஜியத்தில் வாழ்கிறாள். அவள் அந்த ராஜ்ய
மன்னரின் ஆறு இளவரசிகளில் இளையவள். அந்த நாட்டின் சம்பிரதாயப்படி ஒரு
கடற்கன்னிக்குப் பதினைந்து வயது ஆனதும் அவள் கடலின் மேற்பரப்பிற்கு நீந்திச்
சென்று வெளியுலகைக் காண அனுமதிக்கப்படுவாள். இளவரசிகள் ஒவ்வொருவராகப் பதினைந்து
வயதை அடைந்தவுடன் வெளியுலகைக் கண்டு வந்து மனிதர்களைப் பற்றிச் சொல்லும் கதைகளை
இளம் கடற்கன்னி மிக ஆர்வமாகக் கேட்டு வந்தாள்.
இளம் கடற்கன்னி பதினைந்து வயதை
அடைந்ததும் மேற்பரப்பிற்கு வந்து ஒரு கப்பலில் நின்றுகொண்டிருக்கும் இளவரசன்
ஒருவனைக் கண்டு காதலாகிறாள். அப்போது ஒரு சூறாவளி தாக்கிக் கப்பல் சாயவும்
மூழ்கவிருக்கும் இளவரசனை அவள் காப்பாற்றுகிறாள். மயக்கமாகிக் கிடக்கும் அவனைக்
கரையில் உள்ள ஒரு கோவிலில் வைத்துவிட்டு மறைந்துகொண்டு பார்க்கிறாள். அங்கே வரும்
இளம் பெண்ணொருத்தி இளவரசனை மீட்டுச் செல்கிறாள். அப்போதுவரை இளவரசன் அந்தக்
கடற்கன்னியைப் பார்க்கவில்லை.
தன் நாட்டிற்குத் திரும்பும் இளம்
கடற்கன்னி மனிதர்கள் மூழ்காவிடில் நிரந்தரமாக வாழ்வார்களா என்று தன் பாட்டியிடம்
கேட்கிறாள். மனிதர்களின் வாழ்நாள் கடற்கன்னிகளின் வாழ்நாளை விட மிகவும் குறைவே
என்று பாட்டி சொல்கிறார். கடற்கன்னிகளின் வாழ்நாள் முந்நூறு ஆண்டுகள்.
கடற்கன்னிகள் இறந்துபோகும் போது கடலலைகளின் நுரையாக மாறி இல்லாமல் ஆகிவிடுவார்கள்.
ஆனால் மனிதர்களுக்குள் உள்ள ஆன்மா அவர்கள் இறந்த பிறகும் சொர்க்கத்திற்குப் போய்
நிரந்தரமாக வாழும் என்றும் அவர் சொல்கிறார். இதைக் கேட்ட இளம் கடற்கன்னிக்கு
இளவரசனை அடைய வேண்டும் என்றும் தானும் ஆன்மா பெற வேண்டும் என்றும் ஆசை பிறக்கிறது.
அதை அடையும் வழி என்ன என்று அறிய மந்திரக் கிழவியைச் சந்திக்கிறாள்.
மந்திரக் கிழவி அவளுக்கு ஒரு
மருந்து தருகிறாள். அதை அருந்தினால் கடற்கன்னிக்கு இரண்டு கால்கள் தோன்றிவிடும்.
ஆனால் உலகிலேயே இனிமையான தன் குரலை இழந்து அவள் ஊமையாகி விடுவாள். மேலும், ஒருமுறை
மனிதப்பெண்ணாகி விட்டால் மீண்டும் கடலுக்குள் வர முடியாது என்று மந்திரக் கிழவி
எச்சரிக்கிறாள். அதுமட்டுமல்ல, அந்த மருந்தை அருந்தும் போது ஆயிரம்
பட்டாக்கத்திகள் தொண்டையைக் கிழித்துக்கொண்டு இறங்குவது போல் வேதனை இருக்கும்.
கால்கள் வந்த பிறகு அவற்றால் நடக்கும்போது கத்தியின் மீது நடப்பது போல் வேதனை உண்டு
என்றும் சொல்கிறாள். அதே சமயம், உலகில் எப்பெண்ணும் நிகராகா வண்ணம் நடனம் ஆடும்
திறன் வாய்க்குமாம். இது போதாதென்று, அவளை அந்த இளவரசன் உண்மையாகவே காதலித்து
மணந்துகொண்டு தூய காதலில் அவளை முத்தமிட்டால்தான் அவளுக்கு மனித ஆன்மா கிடைக்கும்.
ஆனால் அவன் வேறு பெண்ணை மணந்து இணைந்துவிட்டால் அந்த விடியலில் இளம் கடற்கன்னி
மனமுடைந்து இறந்து கடல்நுரையாகி விடுவாள் என்றும் மந்திரக் கிழவி எச்சரிக்கிறாள்.
இளம் கடற்கன்னி அந்த மருந்தை
அருந்திவிட்டு மனிதப் பெண்ணாக மாறி இளவரசனைச் சந்திக்கிறாள். ஊமையாக இருந்தாலும்
அவள் பேரழகியாக இருப்பது கண்டு அவள் மீடு அவனுக்குக் காதல் உண்டாகிறது. அவளின்
நடனத்தைப் பார்த்து மனதைப் பறிகொடுக்கிறான். தன் கால்களில் நரக வேதனை எழுந்தாலும்
இளவரசனைக் கவரும் நோக்கில் அவள் நடனம் ஆடுகிறாள்.
இளவரசன் பக்கத்து நாட்டு இளவரசியை
மணம் புரிய வேண்டும் என்று அரசர் கட்டளையிடுகிறார். தான் அவளை மணக்க முடியாது
என்றும் கடலில் வீழ்ந்து கரையில் கோவிலில் ஒதுங்கிய போது தன்னை எடுத்துக்
காப்பாற்றிய பெண்ணையே தான் மணம்புரிய வேண்டும் என்றும் அவன் இளம், கடற்கன்னியிடம்
சொல்கிறான். அண்டை நாட்டு இளவரசியைப் பார்த்தால் அவள்தான் கோவிலில் அவனைக் கண்டு
மயக்கம் தெளிவித்தவள். எனவே அவளை அவன் திருமணம் செய்துகொள்கிறான்.
அன்றிரவு இளம் கடற்கன்னி
மனமுடைகிறாள். கடற்கரைக்குச் சென்று விடியலில் வரப்போகும் தன் மரணத்திற்காக அவள்
காத்திருக்கிறாள். அப்போது அவளின் சகோதரிகள் அங்கே தோன்றுகிறார்கள். அவர்கள் வாள்
ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது அவர்களின் கூந்தலுக்குப் பகரமாக மந்திரக்
கிழவி கொடுத்தது. அந்த வாளால் அவள் இளவரசனை வெட்டி அவனுடைய ரத்தம் தன் பாதங்களை
நனைக்கும்படிச் செய்தாள் அவள் மீண்டும் கடற்கன்னியாகித் தன் முழு ஆயுளையும்
வாழலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
தன் மணப்பெண்ணுடன் உறங்கிக்
கொண்டிருக்கும் இளவரசனை வெட்டுவதற்கு அவளின் மனம் இசையவில்லை. எனவே விடியலில் அவள்
தன்னைக் கடலில் ஒப்படைக்கிறாள். அவளின் உடல் நுரையாகிக் கரைகிறது. ஆனால் அவள்
இல்லாமல் ஆகிவிடாது தன் மீது சூரியனின் கதிர்கள் படுவதை உணர்கிறாள். என்னவெனில்,
அவள் காற்றாலான ஓர் ஆவியாகியிருக்கிறாள். ஆன்மாவைப் பெற வேண்டும் என்று அவள்
முயன்றதற்காக அவளுக்கு இந்த நிலை கிடைத்துள்ளது என்று பிற காற்றுத் தேவதைகள்
சொல்கின்றன. முந்நூறு வருட காலம் நன்மைகள் செய்தால் அவள் தனக்கு ஓர் ஆன்மாவைப்
பெற்று சொர்க்கம் செல்லலாம் என்றும் அவை கூறுகின்றன.
ஹான்ஸ்
ஆண்டர்சன் இக்கதையை முதலில் துன்பியல் முடிவுள்ளதாகவே எழுதியிருந்தார். இளம் கடற்கன்னி
கடலில் நுரையாக மறைந்து போவதுதான் அந்த முடிவு. பிறகு அவர் சிறார்களுக்காக முடிவை மாற்றி
இன்பியலாக் எழுதி வைத்தார்.
டென்மார்க்
நாட்டின் தலைநகரான கோபன்ஹேகனில் “The Little Mermaid” கதைக்கு ஒரு நினைவுச் சின்னமாக
இளம் கடற்கன்னியின் வெண்கலச் சிற்பம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது (மெரீனா பீச்சில் நாம்
காந்தி, கண்ணகி போன்றோருக்குச் சிலை வைத்திருப்பதைப் போல). இளம் கடற்கன்னி அமர்ந்திருப்பதைப்
போன்ற அந்த நான்கடி உயரச் சிலையை எட்வர்ட் எரிக்ஸன் என்னும் சிற்பி 1909-1913 காலகட்டத்தில்
உருவாக்கினார். இளம் கடற்கன்னிக்கு மாடலாக அக்காலத்தில் பிரலபலமான பெல்லரினா
(Ballet நாடக நர்த்தகி) எல்லென் ப்ரைஸ் என்பவரை நியமித்தார்கள். முதலில் தலையைச் செய்தாகிவிட்டது.
உடலைச் சிலையாக்கும் பொருட்டு நிர்வாணமாகப் போஸ் தர வேண்டும் என்று சிற்பி கோரியதும்
அதிர்ச்சி அடைந்த எல்லென் ‘அதெல்லாம் முடியாது போயா’ என்று கழண்டு கொள்ளவே தன் மனைவியான
எலைன் எரிக்ஸனை மாடலாகக் கொண்டு சிலையின் உடலைச் செய்துமுடித்தார். (கடற்கரையில் ஒரு
பாறை மீது அமர்ந்திருப்பது போல் வைக்கப்பட்டுள்ள இச்சிற்பம் நகல்தானாம். ஒரிஜினல் சிற்பத்தை
எட்வர்ட் எரிக்ஸனின் வாரிசுகள் மறைமுகமாக வைத்திருக்கிறார்களாம். என்ன இருந்தாலும்
அவர்களின் பூட்டியம்மாவின் உடலுருவம் இல்லையா?)
இப்படியாக
அந்தக் கடற்கன்னியின் சிலையின் தலை ஒருவருடையது உடல் வேறொருவருடையது என்றாகிவிட்டதாலோ
என்னவோ அடிக்கடி அந்தச் சிலையின் தலை மர்ம நபர்களாலும் திருடர்களாலும் துண்டித்து எடுக்கப்பட்டுள்ளது.
சொல்லப்போனால் 1964-ல் வெட்டிக்கொண்டு போன தலை மீண்டும் கிடைக்கவே இல்லை ஆதலால் அதேபோல்
வேறொரு தலை செய்து ஒட்டவைத்திருக்கிறார்கள். கையும் அதுபோல் ஒருமுறை வெட்டி ஒட்டவைக்கப்பட்டது.
துருக்கி நாடு ஐரோப்பாவில் இணைவதை எதிர்த்து சில மர்ம நபர்கள் 2004-ல் இளம் கடற்கன்னிக்கு
புர்கா அணிவித்தார்கள். 2007-ல் மீண்டும் அதேபோல் புர்கா அணிவிக்கப்பட்டது. இங்கே மெரீனா
பீச் கண்ணகி சிலையை வைத்து அரசியல் செய்யப்படுகிறதே, அதே போல் டென்மார்க்கில் இளம்கடற்கன்னியின்
சிலை அரசியலாட்டத்திற்கு ஆளாகிறது!
கடற்கன்னியைப்
பற்றி நான் எழுதுவது ஏதோ கன்னித்தீவு கதை போல் போய்க்கொண்டே இருக்குமோ என்று ஒரு ஃபீலிங்.
எனவே இத்துடன் கடற்கன்னியைக் கடலுக்குள் துரத்திவிட்டு மணி தனிகை குமார் எழுதிய “யாளி”
நாவலைப் பற்றிச் சொல்கிறேன்.
லண்டன்
வாசியான பெக்மன் ஒரு மல்டி மில்லியனைர். அவனுடைய பாட்டன் தமிழ்நாட்டில் திருநெல்வேலிக்கு
கவர்னராக இருந்தவர். ஆஷ்துரை வாஞ்சிநாதனால் சுடப்பட்ட காலகட்டத்தில் இருந்திருக்கிறார்
என்பது கதையில் வரும் குறிப்பு. அப்போது அவர் ஒரு கோயிலின் தகாராருக்குத் தீர்ப்புச்
சொல்லி ஒரு பிராமண குடும்பத்திடம் அந்தக் கோயிலின் பராமரிப்பை ஒப்படைக்கிறார். அந்தக்
கோயிலைப் பற்றி அவர் தன் டைரியில் எழுதி வைத்திருக்கிறார். அத்துடன் ஒரு யாளி ஓவியமும்
வரைந்து வைத்திருக்கிறார். அந்தக் கோயிலில் இருந்து ரகசிய வழியாகச் சென்று யாளியை உயிருடன்
பார்த்ததாகவும், காட்டிலிருக்கும் யாளிகள் அந்த ரகசியப் பாதை வழியாக வருடந்தோரும் சித்ரா
பௌர்ணமி அன்று அக்கோயிலுக்கு வந்து செல்லும் என்றும் அவரின் நாட்குறிப்புக் கூறுகிறது.
இதைப் படித்துப் பார்க்கும் பெக்மன் தமிழ்நாட்டிற்கு வந்து யாளியைப் பார்க்க வேண்டும்
என்று நாடுகிறான். கன்னியாகுமரியைச் சேர்ந்த சரவணன் என்பவனின் தொடர்பு லண்டனிலேயே கிடைக்கிறது.
யாளியின் ஓவியத்தைப் பார்த்துவிட்டு அவன்தான் அதன் பெயரை முதன்முதலில் சொல்கிறான்.
யாளியைத் தேடித் தமிழகம் வரும் பெக்மன் முதலில் தன் பாட்டனாரின் நாட்குறிப்புக் கூறும்
ரகசியத்தைச் சரவணனிடம் சொல்லாமல் வெறுமனே யாளி பற்றிய ஆராய்ச்சி என்பது போல் நடந்துகொள்கிறான்.
பிறகு ஒரு கட்டத்தில் அவசியப்படவே அந்த ரகசியத்தைச் சொல்கிறான். யாளி என்பது ஒரு கற்பனை
மிருகம் மட்டுமே என்றுதான் அதுவரை சரவணனும் நம்புகிறான். அது உண்மையிலேயே இருந்த ஒன்று
என்றும், அதற்கும் மேல் அது இன்னமும் ஜீவித்திருக்கிறது என்றும் நம்புவது கடினமாக இருக்கிறது.
பெக்மனுடனான தேடலில் அந்த நம்பிக்கை அவனுக்கு மெள்ள மெள்ள உருவாவதும் பிறகு அவர்கள்
இருவரும் பாட்டன் சொன்ன கோயிலைக் கண்டுபிடித்து அதில் யாளியைக் காண்பதும்தான் இந்நாவிலின்
கதை.
ஏ4 சைஸ்
தாளில் 322 பக்கங்கள் அமைந்துள்ள இந்த நாவலில் இடையிடையே கோயில்களில் உள்ள யாளிச் சிலைகளின்
படங்களையும், கிராஃபிக்ஸாகப் போடப்பட்ட யாளிகளின் புகைப்படங்களையும் கொடுத்திருக்கிறார்
ம.த.குமார். தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள சிலைகளைத் தரவெடுப்பதற்காக பல இடங்களுக்கும்
சுற்றியிருக்கிறார். கதையில் பெக்மனும் சரவணனும் செல்வதாகச் சொல்லி நம்மையும் அந்த
ஊற்களுக்கு ஒரு நெடும்பயணம் அழைத்துச் சென்றுவிடுகிறார். சென்னையில் பார்த்தசாரதி கோயிலும்
கபாலீஸ்வரர் கோயிலும், தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், கும்பகோணம், மதுரை, கன்னியாகுமரி,
சுசீந்திரம், குற்றாலம், ஆழ்வார்குறிச்சி, பாபநாசம், களக்காடு அகிய இடங்களுக்குக் கதை
செல்கிறது. திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களைக் குறிப்பிடுவதோடு அங்கே
செல்லத் தேவையில்லை என்று ஒதுக்கிவிடுகிறார்கள். யாளி சிற்பங்களை அதிகமாகக் கோயில்களில்
இடம்பெறச் செய்த மன்னர் கிருஷ்ணதேவராயராம். அவர் உருவாக்கிய நகரமான ஹம்பியில் உள்ள
கோயில்களிலும் யாளி சிற்பங்கள் உள்ளன; கேரளக் கோயில்களிலும் உள்ளன என்பதைப் புகைப்படங்களுடன்
காட்டியிருக்கிறார். பல்லவர்களின் மகாபலிபுரத்தில் யாளி சிற்பங்கள் இல்லை. வடநாட்டுக்
கோயில்களில் யாளிகள் காணப்படவில்லை என்றும் ஒரு முக்கியமான குறிப்பைத் தருகிறார் ம.த.குமார்.
யாளி
ஆராய்ச்சியை மையமாகக் கொண்டு நகரும் இந்நாவலில் இடையில் ஒரு சினிமா விமரிசனமும் வருகிறது!
அதாவது, பெக்மன் நம் நாட்டுச் சரித்திரத்தைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு அதற்கான திரைப்படங்கள்
இருக்கிறதா என்று கேட்க சரவணன் அவர் கையில் அரை டஜன் சிவாஜி கணேசன் படங்களைக் கொடுத்துவிடுகிறான்.
கர்ணன், ராஜராஜ சோழன் இத்தியாதி (என்ன கொடும
சரவணன் இது? என்று கேட்கத் தோன்றினாலும் வேறு வழி? நம்மிடமே ஒரு
வெள்ளைக்காரன் கேட்டால்
தமிழக வரலாற்றுத் திரைப்படங்கள் என்று நாம் காட்ட அட்டைக்கத்திப்
படங்கள்தானே இருக்கின்றன?
லேட்டஸ்ட் படம் என்றால் சோழ மன்னர்களின் வாரிசுகளைக் காட்டேரிப்
பிசாசுகளைப் போல் காட்டிய (இரண்டாம்) ஆயிரத்தில் ஒருவனைத்தானே எடுத்துக்
கொடுக்க வேண்டியிருக்கும்?)
ராஜராஜ
சோழன் திரைப்படத்தைத் தன் மடிக்கணினியில் பார்க்கும் பெக்மன் அதில் ஒரு காட்சியைக்
குறிப்பிட்டு ஓர் ஐயம் வினவும் காட்சியில் ம.த.குமாரின் பகடி நம் வரலாற்றுப் பிரதிகள்
பற்றிய உண்மை ஒன்றையும் சொல்கிறது:
“’நீங்கள்
மன்னர் சிற்பிகளைக் கடினமாக வேலை வாங்கியதால் சாபமிட்டதாக சொன்னீர்கள். ஆனால் இதில்
மன்னர் சிற்பிகளுக்கு சேவை செய்வது போல் காட்டுகிறார்களே’ என்றான் பெக்மன்.
‘மன்னர்
வெத்தலைய மடிச்சு கொடுத்து வேலை வாங்குனாரா, இல்லை வேட்டிய மடிச்சி கட்டி வேலை வாங்குனாரான்னு
எனக்குத் தெரியாது. அது செவிவழி செய்தி. இது திரைப்பட செய்தி. எது உண்மைன்னு கடவுளுக்குத்தான்
தெரியும். இன்னைக்கு நடந்ததை நாளைக்குச் சொன்னாலே அதில் ஏகப்பட்ட யூகங்களும் கற்பனைகளும்
கலந்துவிடுவது இயல்பு. ஆயிரம் வருடத்துக்கு முன்னால் நடந்த இதில் எவ்வளவு கற்பனை, எவ்வளவு
உண்மை என்கிற சர்ச்சைக்கு எல்லாம் நாம போக வேண்டாம்’ என்று விளக்கம் சொன்னான் சரவணன்.
‘வெள்ளைக்காரர்கள்
விட்டா எதை எதையோ ஆராய்ச்சி பண்ணிருவாங்க’ என்று நினைத்துக் கொண்டான்.” (பக்கம்.71)
சரவணன்
சொல்லும் இந்த விமரிசனத்தை இன்னொரு இடத்தில் அவன் சொல்லும் ஒரு கருத்தின்மீதே பொருத்திப்
பார்க்க வேண்டியுள்ளது. திருச்சி மலைக்கோட்டைக்கு அவர்கள் வருகிறார்கள். உச்சிப்பிள்ளையார்
கோவிலுக்குச் செல்கிறார்கள். அங்கே இரண்டு சிலைகளின் தலைகள் துண்டிக்கப் பட்டிருப்பதை
ஓட்டுநர் குமரன் சுட்டிக் காட்டும்போது சரவணன் சொல்லும் பதில் இப்படி: “வேற யாரா இருக்கும்?
எதாவது சுல்தான் அல்லது நவாப் வேலையா இருக்கும். பார்த்தா அப்படித்தான் தெரியுது. இது
நம்ம மன்னர்கள் சிலைபோல இருக்கு” (பக்கம்.77)
என்ன
சொல்ல வருகிறார் மணி தணிகை குமார்? கோயிலில் ஏதேனும் சிறு சேதம் இருந்தால்கூட அது முஸ்லிம்
செய்ததாகத்தான் இருக்கும் என்கிறாரா? அவர் சொல்வது போல் ஏதேனும் ஒரு சுல்தானோ நவாபோ
படையெடுத்து வந்து மலைக்கோட்டை மீது ஏறிப்போய் கோயிலில் உள்ள மற்ற சிலைகள், தெய்வச்
சிலைகளையெல்லாம் விட்டுவிட்டு அந்த இரண்டே இரண்டு மன்னர் சிலைகளின் தலையை மட்டும் சிதைத்துவிட்டுப்
போயிருக்கிறான் என்றால், அடடா! அவன் மிகவும் தெளிவானவன், சமயப் பொறையின் உச்சநிலையில்
இருந்திருப்பவன்! அவன் பெயருக்கு ம.த.குமார் ஒரு சிறப்பு அர்ச்சனையே செய்யலாம், அல்லது
அவன் நேரில் வந்தால் வீழ்ந்து சேவிக்கலாம்!
ம.த.குமாருக்கு
இந்தப் பார்வையைக் கொடுத்தது யார் அல்லது எது? இப்படியாகத்தான் தற்காலத்தில் ஆளாளுக்கு
வரலாற்றுப் பிரதிகளைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வரலாறு என்பது எந்தக்
காலத்திலும் எல்லோருக்கும் உண்மையாக இருந்ததில்லை. அப்படியெனில் அதை பூமிக்கு மேலிருந்து
ஒரு காமிரா பதிவுசெய்திருக்க வேண்டும். இதைச் சாதகமாக வைத்துக்கொண்டு மறுவாசிப்பு மறுஆக்கம்
என்னும் பெயரில் தற்போது தத்தமது மதத்துக்கும் சாதிக்கும் சாதகமான அல்லது மாற்று மதத்துக்கும்
சாதிக்கும் எதிரான வரலாற்றுப் பிரதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பிரதிகள்
முன்வைக்கும் பார்வைகளே தம் இன / மத/ சாதிக்காரத் தலைமுறைகளிடம் உருவாக வேண்டும் என்று
நாடுகிறார்கள். போகும் போக்கைப் பார்த்தால் இங்கே வரலாறு என்னும் பாடமே பள்ளிகளிலிருந்து
நீக்கப்படவேண்டிய தேவை வந்துவிடும்போல் தோன்றுகிறது.
இதுநாள்வரை,
இந்துக் கோயில்களில் முஸ்லிம்களும்கூட வரலாற்றுச் சின்னங்களை, கலைப்பொருட்களைக் காணும்
ஒரு சுற்றுலா ஆவலுடன் வருவதும் போவதும் அமைதியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தாஜ்மகாலுக்குச்
செல்லும் இந்துக்கள் அதனை ஒரு கலைப்படைப்பாக, அதிசயமாகத்தான் பார்த்துச் செல்கிறார்கள்.
அதுபோல்தான் கோயிலுக்கு வரும் முஸ்லிம்களும். நான் என் சகதர்மினியுடனும் பிள்ளைகளுடனும்
தஞ்சை பெரியகோயிலுக்கும் திருச்சி மலைக்கோட்டைக்கும் போய் வந்தது அப்படித்தான். உச்சிப்பிள்ளையார்
கோயில் வரையெல்லாம் ஏறிச்சென்றதில்லை. அதன் கீழிருக்கும் பாறையில் அந்தி நெருங்கும்
நேரத்தில் அமர்ந்தபடி கீழே விரிந்து கிடக்கும் திருச்சி நகரத்தையும் காவிரி ஆற்றையும்
ஆற்றுக்கு அக்கரையில் திருவரங்கத்தையும் அதன் கோயிலின் ராஜகோபுரத்தையும் (ஆசியாவிலேயே
மிக உயரமானது) பிள்ளைகளுக்குக் காட்டியபடி ஒரு ரிலாக்ஸேஷன்.
இதே போல்
இந்துக்களும் பள்ளிவாசல்களுக்கு வந்து பார்க்கலாமா? என்று கேட்கக்கூடும். ஆனால் அங்கே
பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்றுதான் இதுவரை சுற்றுலாப் பயணிகள் வராமலிருக்கிறார்கள்
என்பதுதான் உண்மை. இல்லையெனில், மலைக்கோட்டை வாசலுக்கு நேரெதிரே நூறு அடி நடந்தால்
நவாப் பள்ளிவாசல் இருக்கிறது. திருச்சியிலேயே மிகப்பெரிய ஹவுள் (நீர்த்தடாகம்) உள்ள
பள்ளிவாசல் அதுதான். ஆனால் சிலையோ ஓவியமோ எதுவும் பள்ளிவாசலில் இருக்காது. அல்லாஹ்
அரூபமானவன். மலக்குகள் ஜின்கள் இறைத்தூதர்கள் இறைநேசர்கள் என்றெல்லாம் இருந்தாலும்
அவர்களையும் கற்பனை கொண்டோ நிஜரூபத்தையுமோ ஓவியமாகத் தீட்டுவதும் அதை வைத்துக் கட்டடங்களை
அலங்கரிப்பதும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை. ஓர் அரச சமாதியான தாஜ்மகாலில்கூட ஷாஜஹான்
– மும்தாஜின் ஓவியங்கள் இல்லை! நிற்க, ம,த.குமார் முன்வைக்கும் இந்தப் பார்வை இந்துக்கள்
அனைவரிடமும் பரவுமெனில் இப்போது இருக்கும் சுமுகமான சூழல் இருக்காது. அப்படியொரு நிலை
இங்கே வராமலிருக்கப் பிரார்த்திப்போம்.
இன்னொரு
மாற்றுப் பார்வையும் என்னிடம் உண்டு. ஓஷோவை வாசித்ததில் கிடைத்த பார்வை அது. அரசியல்
காரணங்களுக்காக அல்லாது ஆன்மிகக் காரணங்களுக்காக, ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலத்திற்குள்
அந்த மதத்தைச் சாராத எவரும் நுழையக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் அது வரவேற்கத்தக்கது.
அப்படித்தான் மக்காவில் முஸ்லிம்களின் கஃபத்துல்லாஹ் ஆலயம் இருக்குமிடத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இப்படியொரு ஏற்பாட்டிற்கான தேவையாக ஓஷோ கூறுவது என்னவென்றால், ஒவ்வொரு வகையான வழிபாட்டுக்கும்
ஒரு மன அலைவரிசை உண்டு. ஒத்த அலைவரிசை உடையவர்கள் கூடும்போது அந்த அலைவரிசை வலிமைப்படுகிறது.
ஆனால் வேறு அலைவரிசை கொண்டவர் அந்த இடத்திற்குள் நுழையும்போது அந்த அலைவரிசை சீர்குலைக்கப்படும்.
மேலும் நுழைந்தவரின் அலைவரிசைக்கும் அது பாதகமாக அமையும்.
மேலே
காட்டிய மேற்கோளில் சரவணன் சொன்னபடி யூகங்கள் எப்படி வரலாறாக முன்வைக்கப் படுகின்றன
என்பதற்கு இந்நாவலில் வேறொரு இடத்தில் கன்னியாகுமரி கோயிலைப் பற்றிச் சரவணன் பெக்மனிடம்
கூறும் ஒரு கருத்தைச் சொல்லலாம். “மின்னும் மாணிக்க மூக்குத்தியோடு இருந்த பகவதியம்மனை
வியந்து பார்த்தான் பெக்மன். ‘இந்து மதம் குழந்தை திருமணத்தை ஏற்கவில்லை என்பதற்கு
இங்கு கன்னியாக நிற்கும் பகவதியம்மனும் ஒரு சாட்சி’ என்று பகவதியம்மனின் கதையை விளக்கினான்
சரவணன்” (பக்கம்:115). இதைப் படித்தபோது இது என்ன புதுக் கதை என்று நினைத்தேன். ம.த.குமார்
சிலப்பதிகாரம் படித்ததில்லையா? அம்மனின் அவதாரம் என்று இந்துக்கள் இதுநாள் வரை கொண்டாடும்
கண்ணகிக்குத் திருமணமான போது வயது பனிரண்டு! மணமகன் கோவலனுக்குப் பதினாறு வயது. பத்தொன்பது
நூற்றாண்டுகள் பின்னால் வந்தாலும் மிகப் பிரபலமான உதாரணம் தர முடியும். பதினான்கு வயதான
சுப்ரமணிய பாரதியாருக்குத் திருமணமான போது மணப்பெண் செல்லம்மாளுக்கு வயது ஏழு! இன்னொரு
உதாரணம்: மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு பதின்மூன்று வயதாயிருக்கையில் நடந்த அவரின்
திருமணத்தின்போது மனைவி கஸ்தூர்பாவுக்கு வயது பதினான்கு! காந்தியை விட ஒரு வயது மூத்தவர்
கஸ்தூர்பா! இந்தத் திருமணங்கள் எல்லாம் இந்து தர்மத்திற்கு விரோதமானவை என்று ம.த.குமார்
சொல்வாரா?
உண்மை
என்னவெனில் உலகில் எந்த மதமும் குழந்தைத் திருமணத்திற்கு எதிரானது அல்ல. மேலும், அந்தக்
காலத்தில் இருந்த உடலின் பக்குவ நிலைகளை வைத்துத்தான் சராசரியான திருமண வயதுகள் முடிவுசெய்யப்பட்டன.
பனிரண்டு வயதான கண்ணகி இன்றைய பதினெட்டு வயதுப் பெண்ணைப் போல் இருந்திருக்கக் கூடும்.
இது கால தேச வர்த்தமானங்களால் பெரிதும் வேறுபடுவதும் உண்டு. இன்றைய நிலையில் பத்து
வயதான ஓர் அமெரிக்கப் பெண்ணின் அருகில் நின்றால் நம் ஊர் பதினாறும் நோஞ்சானாகத்தான்
காட்சி தரும். எனவே பெண்ணின் உடல்நிலையை வைத்து இந்தக் காலத்தில் பதினெட்டு என்று ஒரு
வயதைத் திருமணத்திற்கான கீழெல்லையாகச் சட்டபடி நிர்ணயம் செய்து வைத்திருக்கிறோம். சில
விதிவிலக்குகள் பதினாறிலேயே இருபது வயதுக்குரிய உடலமைப்புடன் திகழும்போது அவர்கள் ஏன்
குலவிளக்குகளாகக் கூடாது என்னும் வாதங்களும் இங்கே முன்வைக்கப்படுவது அதனால்தான். பெண்ணின்
நலம் கருதி முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம் இது.
meet u again in part-3
1 comment:
ஹுஸைனம்மாDecember 18, 2012 5:30 AM
சுவாரசியமான
& தகவல்கள் நிறைந்த எழுத்து என்பதால் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
ஆனால், நீஈஈஈஈஈளமாக இருப்பதுதான் கஷ்டமா இருக்கு... எழுதுறதே இவ்ளோ பெரூசா
எழுதுறீங்களே, வகுப்பில் லெக்சர் கொடுக்கும்போதும் இப்படித்தானா??
மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். :-)))))))
//அந்தக் காலத்தில் இருந்த உடலின் பக்குவ நிலைகளை வைத்துத்தான் சராசரியான திருமண வயதுகள் முடிவுசெய்யப்பட்டன.//
மிக உண்மை. 40+ வருடங்களுக்கு முன், 14-15 வயதில் திருமணமான என் தாய்க்கு இருந்த ஆகிருதி, 22 வயதில் திருமணமானபோதிலும் எனக்கு இல்லை என்பதை என் தாயின் திருமணப் புகைப்படம் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.
சமீபத்தில் எங்கோ வாய்மொழியாகச் சொல்லப்பட்டிருந்ததை வாசித்தேன். திரு. இராமகிருஷ்ண பரமஹம்ஸரைத் திருமணம் செய்யும்போது, அன்னை சாரதா தேவிக்கு ஐந்து வயதாமே? இது சரியானத் தகவல்தானா? (சந்தேகங்களை நிவர்த்தி செய்ய உங்களைப் போன்ற வரலாற்று அறிஞரிடம்தானே கேட்கமுடியும்?) :-)))
பின்னூட்டம் சமர்ப்பிக்கும்போது, நான் ‘ரோபோ’ இல்லை என்பதை நிரூபிக்கக் கேட்கப்படுகிறேன். உங்களின் பதிவை, ரோபோக்களும் வாசிக்கக்கூடும் என்கிற நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்போல!! :-))))))
Reply//அந்தக் காலத்தில் இருந்த உடலின் பக்குவ நிலைகளை வைத்துத்தான் சராசரியான திருமண வயதுகள் முடிவுசெய்யப்பட்டன.//
மிக உண்மை. 40+ வருடங்களுக்கு முன், 14-15 வயதில் திருமணமான என் தாய்க்கு இருந்த ஆகிருதி, 22 வயதில் திருமணமானபோதிலும் எனக்கு இல்லை என்பதை என் தாயின் திருமணப் புகைப்படம் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.
சமீபத்தில் எங்கோ வாய்மொழியாகச் சொல்லப்பட்டிருந்ததை வாசித்தேன். திரு. இராமகிருஷ்ண பரமஹம்ஸரைத் திருமணம் செய்யும்போது, அன்னை சாரதா தேவிக்கு ஐந்து வயதாமே? இது சரியானத் தகவல்தானா? (சந்தேகங்களை நிவர்த்தி செய்ய உங்களைப் போன்ற வரலாற்று அறிஞரிடம்தானே கேட்கமுடியும்?) :-)))
பின்னூட்டம் சமர்ப்பிக்கும்போது, நான் ‘ரோபோ’ இல்லை என்பதை நிரூபிக்கக் கேட்கப்படுகிறேன். உங்களின் பதிவை, ரோபோக்களும் வாசிக்கக்கூடும் என்கிற நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்போல!! :-))))))