Friday, December 28, 2012

ஆடலரசின் அற்புதக் கோலம் !

ஓவ்வொரு சிவாலயத்திலும் மூலஸ்தானத்திலுள்ள சிவலிங்கத்திற்கு அடுத்தபடியாக பல சிவமூர்த்திகள் வழிபாட்டில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் மிக முக்கியமானவை நடராஜர் எனும் கூத்தபிரான், சோமஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி எனும் தென்முகக் கடவுள், பிட்சாடனர், சந்திரசேகரர் முதலியோர் திருவுருவங்கள்.

இந்த மூர்த்தங்களுள் சிவலிங்கத்திற்கு அடுத்த பெருமை நடராஜருடையது. இவர் வலக்காலை முயலகன் மேல் ஊன்றிக்கொண்டும், இடக்காலைத் தூக்கி வலப்புறமாக வைத்தும் நடனமாடிக் கொண்டுள்ளார்.

நான்கு கைகள் உடையவர். அவற்றுள் வலது மேற்கையில் ஒரு சிறு உடுக்கையும், இடது மேற்கையில் எரிகின்ற அகலையும் கொண்டுள்ளார். வலக் கீழ்க் கையில் தரிசிப்பவர்களுக்கு தைரியம் தரும் அபய முத்திரை தாங்கியும், இடது கீழ்க்கையை வலப்புறமாக வளைத்துத் தூக்கிய திருவடியைச் சுட்டிக்காட்டும் நிலையிலும் அமைந்துள்ளார்.

இவர் திருவுருவத்தைச் சுற்றிலும் வட்டவடிவில் ஒரு திருவாசி இருக்கும். இந்தத் திருவாசியிலும், இவர் திருவுருவத்திலும் பல தத்துவக் குறிப்புகள் இருப்பனவாகக் கூறப்படுவதுண்டு.

"ஓங்காரம்' எனும் பிரணவமே இந்தத் திருவாசியாகும். இவர் வலக்கையிலுள்ள உடுக்கை, தோற்றமாகிய சிருஷ்டித் தொழிலையும், அபய முத்திரை காத்தல் தொழிலையும், எரியகல் (அக்னி) அழித்தல் தொழிலையும், ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலையும், தூக்கிய திருவடி அருளல் தொழிலையும் குறிக்கும். இந்த ஐந்தொழில்களையும் பஞ்ச கிருத்தியம் என்று சாத்திரங்கள் கூறும்.

தில்லையிலுள்ள கூத்தபிரான் உருவத்திற்கு மாறுபட்ட வகையில் சில பெரிய தலங்களில் உருவத் திருமேனிகள் வழிபாட்டில் உள்ளன. இவற்றுள் சிறந்தவை மதுரையிலும், திருவாலங்காட்டிலும் காணப்படுகின்றன. மதுரையில் உள்ள நடராஜர் இடக்காலை ஊன்றி வலக்காலை தூக்கி ஆடுகின்றார்.

பூலோகத்தில் வாழும் உயிர்களுக்கு அருளுவதுபோலவே வானுலகத்தவர்க்கும் அருள் செய்வதற்கென்றே ஊர்த்துவ தாண்டவம் ஏற்பட்டது என்று தத்துவ சாஸ்திரம் கூறுகிறது. சிறப்பாக நடராஜர் தாண்டவமாடும் ஐந்து சபைகளாக சிதம்பரத்தையும் (கனகசபை, பொன்னம்பலம்), மதுரையையும் (வெள்ளியம்பலம்), திருநெல்வேலியையும் (தாமிரசபை), திருக்குற்றாலத்தையும் (சித்திரசபை), திருவாலங்காட்டையும் (ரத்தினசபை) சைவ சமயம் போற்றி வணங்கும்.

""மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே'' என்று திருநாவுக்கரசர் கூறியவாறு ஆடவல்லானின் உருவத்தை மனதில் இருத்தி அவன் பாதங்களைச் சரணடைந்து, வழிபட்டு நற்பேறு அடைவோம்.

- பா.சுவாமிநாதன்     நன்றி:-  தினமணி, வெள்ளி மணி, 25-12-2012                                                                                                

திருநெல்வேலி, இராஜவல்லிபுரத்தில்தான், தாமிரசபை இருப்பதாகவும் ஒரு

கருத்து உள்ளது. இதனை உரியவர்கள் தெளிவு படுத்திட வேண்டும்.



0 comments:

Post a Comment

Kindly post a comment.