ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஒரு பெரிய வரலாறு புதைந்து இருக்கிறது. நம்மில் பலரும் வானொலியைக் கண்டுபிடித்தது மார்க்கோனி என்றுதான் கூறுவோம். ஆனால், அது தவறு.
வானொலியானது ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்கப்படவில்லை. இது பலரின் கூட்டு முயற்சி. அந்தக் கண்டுபிடிப்புக்குப் பிதாமகனாக இருந்தவர் ஒரு இந்தியர் என்றால் அது நமக்கு எல்லாம் பெருமையே. மேற்கு வங்காளத்தில் பிறந்த ஜெகதீஸ் சந்திரபோஸ்தான் அந்தப் பெருமைக்குரியவர்.
அவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய அமெச்சூர் வானொலி தினமாக நவம்பர் 30-ஐ நாம் கொண்டாடுகிறோம். ஜெகதீஸ் சந்திரபோஸ் 1858 நவம்பர் 30-இல் பிறந்தார். அவர் ஆற்றிய சாதனைகள் பல.
கிரஸ்கோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இவர், இந்தியத் துணைக்கண்டத்திலேயே முதன் முறையாக 1904-ஆம் ஆண்டு தனது புதிய கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவிடமிருந்து காப்புரிமை பெற்றார்.
சுதந்திரத்துக்கு முன் பரந்து விரிந்த வங்காளத்தில், இன்றைய வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு அருகில் உள்ள பிக்ராம்பூரில் பிறந்தாலும், அவர் கல்வி பயின்றது,பணியாற்றியது எல்லாமே கொல்கத்தாவில்தான்.
மேற்படிப்புக்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனவே மருத்துவப் படிப்பினை இடையிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல், நோபல் பரிசு பெற்ற லார்ட் ரேலிக் அவர்களோடு இணைந்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார்.
ரிமோட் வயர்லெஸ் சிக்னல் ஆய்வில் வெற்றிகண்ட போஸ், முதன்முதலாக செமிகண்டக்டரைக் கொண்டு வானொலி அலைகளை ஒலிபரப்ப முடியும் என நிரூபித்தார். இந்த ஆய்வின் முடிவுகளைச் சுயநலத்தோடு வியாபாரம் ஆக்காமல் அனைவரும் இதில் மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருக்கும் கிடைக்கச் செய்தார்.
செடி, கொடிகளின் மீது இவரின் கவனம் திரும்பியதன் பயனாக உருவானதே கிரஸ்கோகிராப். இது செடிகளின் தொடர்பியலையும், அது எப்படி பாதிக்கப்படும்போது வலிகளை வெளிப்படுத்துகிறது போன்ற அதிசயத் தகவல்களையும் ஆய்வின் மூலம் நிரூபித்தார்.
வானொலித் துறையில் ஜெகதீஸ் சந்திரபோஸ் பல முன் முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக அவரின் கண்டுபிடிப்பான கிரிஸ்டல் ரேடியோ டிடக்டர், வேவ்கைடு, ஹார்ன் ஆண்டனா போன்றவற்றை தனது மைக்ரோவேவ் டிடக்டரில் முதன்முறையாகப் பயன்படுத்தி சாதனை படைத்தார்.
1893-இல் நிக்கோலஸ் டெஸ்லா வெளிநாட்டில் ஒரு பொது இடத்தில் வைத்து முதல்முறையாக வானொலி ஒலிபரப்பினை சோதனை முறையில் செய்து காட்டினார். அதற்கு அடுத்த ஆண்டே இந்தியாவில் ஜெகதீஸ் சந்திரபோஸ் கொல்கத்தாவில் உள்ள டவுன் ஹாலில் வைத்து ஒரு சோதனையை மக்கள் மத்தியில் செய்து காட்டினார்.
போஸ் சர்வதேச ஆய்விதழ்களில் தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுதினார். இது சர்வதேச அளவில் இவருக்குப் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது.
இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிவியல் ஆய்வாளர்கள் வழங்கிய அரிய தகவல்களைக் கொண்டுதான் மார்க்கோனி, வானொலி ஒலி அலைகளை சாலிஸ்பெரி சதுப்பு நிலத்தில் இருந்து தொலைதூரத்துக்கு அனுப்பினார்.
மே 1897-இல் ஜெகதீஸ் சந்திரபோஸ் அதே போன்றதொரு சோதனையை மீண்டும் கொல்கத்தாவில் செய்து, வெற்றியும் கண்டார்.
அதன் அடிப்படையில் அவர் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் தனது ஆய்வுக்கட்டுரையைப் படித்தார். அது அங்கு கூடிய விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பின் அவர் மார்க்கோனியைச் சந்தித்து தனது ஆய்வின் முடிவுகளை விவாதித்தார். ஆனால் போஸ் தனது முடிவுகளைக் காப்புரிமை செய்ய விரும்பவில்லை. மார்க்கோனி முந்திக்கொன்டார். விளைவு, இன்று வானொலியைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவராக மார்க்கோனி திகழ்கிறார்.
இதன் மூலம் வானொலி கண்டுபிடிப்பில் போஸின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறியலாம். அதனாலேயே இவரின் நினைவாக தேசிய அமெச்சூர் வானொலி நாள், இவரது பிறந்தநாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அமெச்சூர் வானொலி உரிமத்தினை இந்தியக் குடிமகன் யாரும் வாங்கலாம். அதற்கு அடிப்படைக் கல்வித்தகுதி இருந்தால் போதுமானது. மற்றும் 12 வயது பூர்த்தியான அனைவரும் தேர்வினை எழுதலாம். இதற்கான பிரத்யேகத் தேர்வினை எழுதித் தகுதி பெற்ற பின் உரிமம் வழங்கப்படும்.
அதன் பின் அதற்குத் தேவையான வானொலிப் பெட்டிகளை வாங்கி அனைவரும் அமெச்சூர் வானொலி உபயோகிப்பாளர்களாக ஆகலாம்.
நன்றி:- சிறுவர் மணி, தினமணி, 01-12-2012
சிறுவர்மணி
வயதில் சிறியவர்களுக்கு மட்டும்,அல்ல.
பெரியவர்களுக்கும்தான்.
வானொலியையும்
தங்க.ஜெயசக்திவேலையும்
இணைத்தே பார்க்க வேண்டும்!
யாரும் மறுக்க முடியாத உண்மை இது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.