Sunday, December 2, 2012

"அநாத பிரேத சம்ஸ்காராத் அஸ்வமேத பலம் லபேத்'

அமைதியாய் நடக்கும் ஒரு தொண்டு!





காலம் காலமாக நம்முடன் பழகியவர்களாகவே இருந்தாலும், சொந்த பெற்றோர், பெண், பிள்ளை, மனைவியாகவே இருந்தாலும் ஒருவர் இறந்து விட்டார் என்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் உடலைத் தகனம் செய்வதோ புதைப்பதோ செய்து விடுகிறோம். முன்னே பின்னே தெரியாதவர்கள் உடலை, அதை ஏற்று அதற்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்ய உறவினர்கள், நண்பர்கள் இல்லாத, அல்லது முன் வராத போது, அதற்குரிய மரியாதையுடன் பெற்ற பிள்ளை போல  வேறு எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் புதைக்கவோ எரிக்கவோ முன்வரும் தைரியமான  சமூக சேவகர்களைப் பாராட்டத்தான் வேண்டும். சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் அப்படிப்பட்ட ஒரு சமூக சேவகர்.  1985 முதல் இந்தத்  தொண்டைச் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்:

""இத்தொண்டு கலியுகத்தில் அஸ்வமேத யாகத்திற்குச் சமம் என்று சொல்லும் காஞ்சி மகாஸ்வாமிகள் அதற்கு தர்ம நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். சாஸ்திரத்தில்,  "அநாத பிரேத சம்ஸ்காராத் அஸ்வமேத பலம் லபேத்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.  அநாதை பிரேதங்களுக்கான அக்னி சம்ஸ்காரம் செய்ய நிறையப் பேர் முன்வர வேண்டும் என்று "தெய்வத்தின் குரல்' மூன்றாம் பாகத்தில் மகா பெரியவர் இந்த சம்ஸ்காரம் பற்றி விரிவாகச் சொல்கிறார். நம்மால் அஸ்வமேத யாகம் செய்ய முடியாது. ஆனால் அநாதைப் பிணங்களின் இறுதிக் காரியத்தைச் செய்ய முடியும். இந்த எண்ணம் ஏற்பட்டதும், தேனம்பாக்கம் சென்று பெரியவரிடம் என் எண்ணத்தைச் சொன்னபோது என்னை ஊக்குவித்து ஆசிர்வாதம் செய்தார்.

1986 முதல் இப்பணியைச் செய்து வந்தாலும் 2001 ஆம் ஆண்டில்தான் முறையாக "அனாத பிரேத கைங்கர்யம் டிரஸ்ட்' என்று பெயர் சூட்டி பதிவு செய்தோம். சுமார் 1169  பிரேதங்களுக்கு இது வரை அக்னி காரியம் மற்றும் அடக்கம் செய்திருக்கிறோம்.  ஒரே நாளில் ஐம்பது பிரேதங்களைக் கூட  அடக்கம் செய்திருக்கிறோம்.

அநாதையாகச் சிலர் இறந்தவுடன் அவர்களை அங்கே சேர்த்த நபர்களைத் தொடர்பு கொள்ள முயலுவோம். அப்போது சில கசப்பான அனுபவங்களும் கிட்டியுள்ளன. ஒரு பெண்மணியின்  தகப்பனாரிடம்  அவர் சாகக் கிடப்பதை சொல்லச் சென்றேன். அவர் சரியாக அது பற்றிக் கண்டு கொள்ளவில்லை. சாகக் கிடந்தவரிடம் திரும்பி வந்து இது பற்றிச் சொல்லாமல்,""யாரும் வீட்டில் இல்லை. தகவல் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன்'' என்று ஒரு பொய்யைச் சொல்லி வைத்தேன். அவர் சில மணி நேரங்களில் இறந்து போனார். பொய்யைச் சொன்னாலும் அவருக்குக் கடைசி நேரத்தில் சங்கடம் தராமல் இருந்தோமே என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். இப்படி நிறைய நிகழ்ச்சிகள்.

விஷ்ராந்தியைச் சேர்ந்த சாவித்திரி வைத்தி உட்பட ஒன்பது பேர் எங்கள் டிரஸ்ட் நிர்வாகத்தில் உள்ளோம்.  அக்னி காரியம் அல்லது சவ அடக்கம்   என்று மட்டும் இல்லை. பொருள் வசதி இல்லாதவர்கள் ஈமக் கிரியைகளைச் செய்ய முடியாமல் சிரமப்படுவதுண்டு. அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவி செய்து கொடுக்கிறோம். ஸ்டேட் பேங்க் எங்களுக்கு இந்தப் பணியைச் செய்ய இறுதி யாத்திரை வேன் ஒன்று கொடுத்து உதவியுள்ளது. பொதுவாக அநாதைப்  பிரேதத்திற்குரியவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியாததால் அரிசி, பூ, பால் இவற்றைத் தெளித்துக் கூட்டுப் பிரார்த்தனைச் செய்து "ரகுபதி ராகவ ராஜா ராம்' பாடல் பாடி அடக்கம்செய்கிறோம். இதற்கு முன் சம்பந்தப்பட்ட அநாதை ஆஸ்ரம, ஆஸ்பத்திரி அல்லது போலீஸ் அதிகாரிகளிடம் சம்மதக் கடிதம் பெறுவது போன்ற சட்ட ரீதியான நடவடிக்கைகள் உண்டு.

இந்தக் கைங்கர்ய டிரஸ்ட் ஆரம்பிப்பதற்கு முன்னால்  விஷ்ராந்தி, ஆனந்தம், காக்கும் கரங்கள், சாய் சரண் போன்ற இல்லங்களுக்கு இந்தப் பணியில் உதவி செய்து கொண்டிருந்தோம். "பிரேமாலயா' என்கிற மன வளர்ச்சி குன்றியவர்கள் இல்லமும் இப்போது எங்கள் தொடர்பில் உள்ளது. மகாபலிபுரம் அருகே ஜன ஜாக்ரன் ஒரு அநாதை இல்லம் கட்டியபோது அதற்கு உதவினோம். "நிம்மதி' என்கிற போர் வீரர்களின் விதவை மனைவிகள் இல்லமும் இப்போது எங்கள் சேவையைப் பயன்படுத்திக் கொள்கிறது.

நான் பணியாற்றும் அலுவலகத்திலும் இந்தச் சேவைக்கேற்ற சூழல் உள்ளது. உதவி என்று அழைப்பு வந்தால் அலுவலகத்தில் இருந்தாலும் உடனே சென்று விடுவேன். யாரும் என்னைத் தடுப்பதில்லை.

பிரேதங்களை அடக்கம்  செய்யச் சுமார் 1500 ரூபாய் ஆகும். நிறைய நல்லுள்ளங்கள் பணம் அனுப்புகிறார்கள். சில உடல்கள் அடக்கம்  செய்யப்பட்ட  பிறகும் உறவினர்கள் அல்லது போலீஸ் எங்களைத் தொடர்பு கொள்ளுவது உண்டு. அப்போது  அடக்கம் செய்த இடம் போன்ற விவரங்களைச் சொல்லுவோம். இப்பணியைச் செய்யப் போலீஸ் அனுமதி இருப்பதால் எந்தப் பிரச்னையும் இதுவரை ஏற்பட்டது இல்லை'' என்கிறார் ஸ்ரீதர்.                                                                                                                                                         

நன்றி :- தினமணி கதிர், 02-12-2012




0 comments:

Post a Comment

Kindly post a comment.