தில்லி அரசு "வேண்டாம்' என ஒப்படைத்த 1,721 மெகா வாட் மின்சாரத்தை வழங்கக்கோரி மத்திய மின்சார ஆணையத்தில் முறையிடும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தமிழகத்தின் கோரிக்கை மீது ஏழு நாள்களுக்குள் விசாரித்து முடிவெடுக்கும்படி மத்திய மின்சார ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அதில் தீர்வு ஏற்படாவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது.
இது தொடர்பான தமிழகத்தின் வழக்கு, தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், ஜஸ்தி செலமேஸ்வர், சுரீந்தர் சிங் நிஜார் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி முன் வைத்த வாதம்:
வட மாநிலங்களில் உள்ள மின் பாதையையும் தென் மண்டல மின் பாதையையும் இணைக்க முடியாது. அதில் அதிகச் சக்திவாய்ந்த மின்சாரத்தை விநியோகிக்கும் வசதி இல்லை என மத்திய மின்சார ஆணையம் கூறுகிறது.
தென் மண்டல மின் பாதை: ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் வரை கிழக்கு மின் மண்டலத்தில் இருந்து தெற்கு மண்டலத்துக்கு 3,630 மெகா வாட் மின்சாரமும், மேற்கு மண்டலத்தில் இருந்து தெற்கு மண்டலத்துக்கு 1,720 மெகா வாட் மின்சாரமும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, தென் மண்டல மின் பாதை வழியாக ஒரே நேரத்தில் 5,350 மெகா வாட் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய மின் விநியோக வரைவுக் கொள்கையின்படி மின் பாதையில் செல்லும் மின்சாரத்தில் 30 சதவீதத்தை, சீரான மின் ஓட்டத்துக்கு வசதி ஏற்படுத்தும் வகையில் வைத்திருக்க வேண்டும்.
அந்த வகையில் கிழக்கு, மேற்கு மண்டலங்களில் இருந்து வரும் 5,350 மெகா வாட் மின்சாரத்தில் 4,000 மெகா வாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு விநியோகித்தால் அதில் இருந்து 2,950 மெகா வாட் மின்சாரத்தை மட்டும் மாநிலத்தின் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
எங்களிடம் உள்ள ஆய்வுத் தகவலின்படி, தெற்கு மண்டல மின் பாதையில் நாள்தோறும் 1,491 மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் இரண்டு அணுமின் திட்டங்கள் மூலம் தலா 1,000 மெகா வாட் மின்சார உற்பத்தித் திட்டங்கள் (கூடங்குளம் அணுமின் திட்டங்கள்) செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த மின்சாரத்தையும் தமிழகத்துக்கே வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று முகுல் ரோத்தகி வாதிட்டார்.
மத்திய அரசு ஆட்சேபம்: இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கூலம் இ. வாகனவதி முன்வைத்த வாதம்:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய மின்சார ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நாட்டின் மின் தேவை, மின் பகிர்மானம் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ அமைப்பு அதுதான். தென் மண்டலத்தில் உள்ள தமிழகத்துக்கு மற்ற மின் மண்டலங்கள் மூலம் மின்சாரத்தை விநியோகிப்பதில் உள்ள பிரச்னையை ஆணையம் தெளிவாக விளக்கியுள்ளது.
தில்லி அரசு வேண்டாம் என ஒப்படைத்த மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது. அந்த மின்சாரத்தை பல மாநில அரசுகள் கோரியுள்ளன. அதனால் விநியோக வசதிக்கு தக்கபடி மின்சாரத்தை வழங்கும் சாத்தியத்தைத்தான் ஆய்வு செய்ய முடியும்.
மற்ற மண்டலங்களில் இருந்து விநியோகம் செய்யப்பட்டதாக தமிழகம் கூறும் 5,350 மெகா வாட் மின்சாரம் என்பது உத்தேச மதிப்பீடுதான்.
தமிழகத்துக்கு எப்போதுமே மின்சாரம் வழங்க முடியாது என மத்திய அரசு கூறவில்லை. ஏற்கெனவே மத்திய தொகுப்பில் உள்ள மின்சாரத்தை வேறு மாநிலங்கள் முன்பதிவு செய்துள்ளன. அதனால், இந்த ஆண்டு நவம்பர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மின்சாரத்தை வழங்க முடியாது என்றுதான் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, தொழில்நுட்பப் பிரச்னையுடன் தொடர்புடைய தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று வாகனவதி வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தின் கோரிக்கையை விசாரித்து ஏழு நாள்களுக்குள் முடிவெடுக்கும்படி மத்திய மின்சார ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
நன்றி :- தினமணி, 06-12-2012
Thursday, December 6, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.